கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள உறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அகல்யா (19). பெற்றோர்களை இழந்த இவர் உறவினர்களுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிலா அறுவடைக்காக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கந்தம்பாளையம் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியிலுள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த சக்தி என்ற கூலித்தொழிலாளிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
பின்னர் திருமணம் செய்துகொண்டு கர்ப்பமான நிலையில், பரிசோதனைக்காக அப்பகுதியிலுள்ள மருத்துவ மனைக்கு அகல்யா சென்றுள்ளார். வயது குறைவாக உள்ளதைப் பார்த்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவலளித் துள்ளது. அதன்பெயரில் 17 வயதுப் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சக்தியை சிறையிலடைத்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/love_22.jpg)
இருவரும் விரும்பித் தான் திருமணம் செய்து கொண்டோம் என அகல்யா அழுதுபுரண்டும் காவல்துறையும் நீதித் துறையும் சக்திக்கு மன்னிப்பு வழங்கவில்லை. இதனால் ஆதரவற்ற நிலையிலிருந்த அகல்யா கர்ப்பமான நிலையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இவர் அந்த ஊரிலுள்ள வேலைகளைச் செய்துகொண்டு அதில் கிடைக்கும் கூலியை வைத்து தனியாக வசித்து வந்துள்ளார். கணவர் சிறையிலிருந்து வெளியே வந்துவிட்ட தகவல் கிடைக்க, அகல்யா ஊருக்குச் சென்று கணவரை சந்தித்தபோது அவர் சேர்ந்துவாழ மறுத்துள்ளார்.
இதனால் வேதனையடைந்தவர், மீண்டும் சொந்த ஊருக்கே வந்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி அவரது 2 வயது ஆண் குழந்தை இட்லி சாப் பிட்டுவிட்டு தூங்கியபோது, பேச்சுமூச்சு இல்லாமல் உள்ளதாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உறையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவர்கள் குழந்தையை சோதித்துப் பார்த்துவிட்டு, ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். குழந்தையின் உடல் நலக்
குறைவுக்கு பெண் கூறிய காரணம் மருத்துவர்களுக்கு சந் தேகத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து புதுப்பேட்டை காவல் துறையில் தகவலளித்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 5 நாள் கழித்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனால் போலீசார் குழந்தையின் தாய் அகல்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலைக் கூறியுள்ளார். "உறவினர் உள்ளிட்ட அக்கம்பக்கத்தினர் கணவனைப் பிரிந்து வாழ்வதை கேலியும் கிண்டலும் செய்தனர். ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை என்றால்கூட என்னையும் என் குழந்தையையும் தவறாகப் பேசுகிறார்கள். இதனால் தொடர்ந்து மனவேதனையில் இருந்துவந்தேன். ஒருகட்டத்தில் குழந்தை இருப்பதால்தானே இப்படிப் பேசுகிறார்கள். கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்ளலாமென்று முடிவுசெய்தேன். ஆனால் தற்கொலை செய்ய மனம்வரவில்லை. குழந்தை விஷயமும் வெளியே தெரிந்துவிட்டது''’என வாக்குமூலம் அளித்துள்ளார். அகல்யாவை வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து கடலூரைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் புனிதன் கூறுகையில், “"தமிழக அரசின் சமூக நலத்துறை, 18 வயது பூர்த்தியடைந்த பெண்ணும் 21 வயது பூர்த்தியடைந்த ஆணும் திருமணம் செய்துகொள்ள உடல்ரீதியாக ஏற்றவர்கள் என வரையறுத்துள்ளது. இளம்வயது திருமணத்தால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் விளக்கிவருகிறார்கள். பெற்றோர் இல்லாத நிலையில் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்கள் யோசிக்காமல் சரிவர ஆலோசிக்காமல் பொருத்தமற்ற நபரைத் திருமணம் செய்துகொள்வதால் இதுபோன்ற நிகழ்வுகளைச் சந்திக்க நேரிடுகிறது.
காவல்துறை சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண் டாலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். அகல்யா போன்ற பாதிக்கப்பட்ட பெண்ணையோ ஆணையோ அவரைச் சுற்றியுள்ள சமூகத்தினர் கேலி கிண்டல் செய்யக்கூடாது.
தற்போது இரண்டு வயது குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறப்படும் தாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கணவர் சிறைக்குச் செல்லும்போதே ஆதரவற்ற நிலையிலிருந்த பெண்ணை காப்பகத்தில் சேர்த்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டி ருக்காது. நாம் அனைவருமே சமூக பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். அகல்யாவின் குற்றத்தில் அவரைக் கேலி செய்தவர்களுக்கும் பங்கிருக்கிறது''’என்றார்.
சமூகத்தின் கேலி, கிண்டலால் ஒரு குழந்தை உயிர்ப் பலியாகியுள்ளது துயரம்!
-ஏ.காளிதாஸ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-12/love-t.jpg)