’"உங்க பொண்ணு உங்களுக்கு வேணுமா? அவளுக்கு 18 வயசு ஆனதும் எங்க பையனுக்கே கட்டித் தர்றோம்ன்னு சொல்லுங்க. கொண்டுவந்து விட்டுடுறோம்''”
-சிறுமியைக் கடத்திய தரப்பு இப்படி ஒரு டிமாண்டை வைக்க, அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் பரிதவிக்கிறார்கள் சிறுமியின் குடும்பத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்துள்ள கெங்கநல்லூர் கிராமத்தில் வசிக்கும் விவசாயி ராமமூர்த்தி-சரிதா தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கிராமத்தை விட்டுத் தள்ளி, தங்களது விவசாய நிலத்திலேயே வீடுகட்டி இவர்கள் வசித்து வருகிறார்கள்.
இவர்களின் இரண்டாவது மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அருகிலுள்ள லாடவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவிட்டு, 12ஆம் வகுப்புக்கு போக இருந்தாள். இந்த நிலையில்தான் செல்வி மாயமாகிவிட்டாள். மகள் எங்கே? என்று தெரியாமல் அந்த ஏழை விவசாயக் குடும்பமே கண்ணீரோடு பரிதவிக்க, இதன் பின்னணியில்தான் சில சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.
இதுபற்றிக் கலக்கத்தோடு நம்மிடம் பேசிய செல்வியின் அப்பாவான ராமமூர்த்தி,’"ஜூன் மாதம் 10ஆம் தேதி இரவு, நாங்க எல்லோரும் வீட்டுக்கு வெளியில் படுத்திருந் தோம். எங்க சின்ன மகள் செல்வி, திண்ணையில படுத்திருந்துச்சி. மறுநாள் அதிகாலை 3 மணிக்கு என் மனைவி விழிச்சிப் பார்த்தப்ப, செல்வியைக் காணலை. சரி, கரும்புக்காட்டுப் பக்கம், இயற்கை உபாதைக்காகப் போயிருக்கும்னு நினைச்சோம். ரொம்ப நேரம் ஆகியும் செல்வி வராததால் பயந்து போய் கரும்புத் தோட்டத்துக்குப் போய்ப் பார்த்தோம். அங்கயும் காணலை. எல்லாப்பக்கமும் பதட்டத்தோட தேட ஆரம்பிச்சோம்.
அப்பதான், எங்களுக்கு ஒரு பயம் வந்துச்சு. எங்கவூரைச் சேர்ந்த சின்னதுரை மகனான செல்லப்பாண்டிங்கிற பையன், எங்க செல்வியின் போனுக்கு அடிக்கடி மெசேஜ் பண்ணிக்கிட்டு இருந்தான். அவனைக் கூப்பிட்டு, நீங்க வன்னியரு, நாங்க நாயுடு. அதனால் இரண்டு குடும்பத்துக்கும் ஒத்துவராது. அதோட உனக்கு 29 வயசு. என் பொண்ணுக்கு 16 வயசுதான் ஆகுது. ஸ்கூல் படிக்கற புள்ளைகிட்ட தப்பா பழகாதன்னு சொல்லி இருந்தேன். அதனால், அவன்தான் மகளைக் கடத்திக் கிட்டுப் போயிட் டான்னு கணிச்சோம். அதனால், அன் னைக்கே கலசப் பாக்கம் காவல் நிலையத்தில் எங்க பொண்ணைக் காணவில்லைன்னு புகார் கொடுத்து, எங்க சந்தேகத்தையும் சொன்னோம்''’என்றார்.
தொடர்ந்து பேச ஆரம்பித்த ராமமூர்த்தி மனைவி சரிதாவோ, "நாங்க கொடுத்த புகாரை போலீஸ் விசாரிக்கக்கூட இல்லை. என் பொண்ணு காணாமல் போன இரண்டாவது நாள் அந்த பையனோட பங்காளிங்க 10 பேரு வீட்டாண்ட வந்து, நமக்குள்ள பிரச்சனை வேணாம். ஒழுங்கா அமைதியா இருங்க. உங்க பொண்ணுக்கு 16 வயசாகுது, 18 வயசானதும் எங்க செல்லப்பாண்டிக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு அக்ரிமெண்ட் போட்டுக் கொடுங்க. அப்படி செஞ்சா, உன் பொண்ண உங்கிட்ட ஒப்படைக்கறோம்ன்னு சொன் னாங்க.
இதுக்கு ஒத்துக்காத நாங்க, ஊர் முக்கியஸ்தர்கள்கிட்ட சொல்லி நியாயம் கேட்டப்ப, ஓடிப்போனவளப் பத்தி எதுக்குக் கவலைப்படறீங்க. விட்டுத்தள்ளுங்கன்னு ஈஸியாச் சொல்றாங்க. எங்களத் தவிர, இந்த ஊர்ல மத்த எல்லோரும் ஒரே சாதிக்காரங்க. அதனால் அவுங்கள எதிர்த்துக்கிட்டு எங்களால எதுவும் பண்ண முடியாத நிலைல, போலீஸ் எங்க மகளை மீட்டுக்கொடுக்கும்னு நம்பினோம். ஒரு மாசத்துக்கு மேல ஆகியும் போலீஸ் நடவடிக்கை எடுக்கல. அதனால் கலெக்டர் ஆபீஸ்ல தீக்குளிக்கலாம்னு வந்தோம். போலீஸ் எண்ணெய் கேனை புடுங்கிடுச்சி. எஸ்.பி.யப் பார்க்கப்போனோம். அவரையும் பார்க்க முடியலை. எங்க மகளை எப்படி அவங்ககிட்ட இருந்து மீட்கிறதுன்னு தெரியலைங்க''’என்றார் கண்ணீரோடு.
இவ்விவகாரம் குறித்து போளுர் டி.எஸ்.பி குமாரிடம் நாம் கேட்டபோது, "மாணவி காணாமல் போனதாகத்தான் புகார் தந்தார்கள். கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்து அந்தப் பெண்ணைத் தேடி வருகிறோம். அவர்களது செல்போன் எண், ஏ.டி.எம் கார்டு போன்றவற்றை ஆய்வு செய்துவருகிறோம். அந்த பையன் தரப்பினர் அக்ரிமெண்ட் போடச் சொன்னதாகச் சொல்வதில் உண்மை இல்லை''’என்றார் கூலாய்.
செல்லப்பாண்டியன் தரப்பை அழைத்து விசாரித்து சிறுமி செல்வியை மீட்க, எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. மேஜர் கணக்கில் வராத சிறுமிகளை, அவர்கள் இசைவுடன் அழைத்துச் சென்றாலும் குற்றம் என்கிறது சட்டம். ஆனால், சட்டத்தை நிலைநாட்டுவது பற்றி காவல்துறை கவலைப் படவில்லை.