புதுச்சேரி யூனியன் அமைச்சரவை கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற் றது. இந்த கூட்டத்தில் மதுபான விலைகளை உயர்த்துவது, பத்திரப்பதிவுக் கட்டணம், கலால் வரியை உயர்த்துவது, கூட்டுறவு ஆலை நிர்வாகத்தில் நடக்கும் பள்ளியை கல்வித் துறையோடு இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அதே நேரத்தில் புதிய மதுபானத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
புதுச்சேரியில் தற்போது ஆறு மதுபானத் தொழிற்சாலைகள் உள்ளன. இதோடு கூடுதலாக இன்னும் சில மதுபானத் தொழிற்சாலை களுக்கு அனுமதி வாங்க தொழிலதிபர்கள் முயற்சித்துவருகின்றனர். அது கடந்த சில வருடங்களாக முடியவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்ததும் முதலமைச்சர் ரங்கசாமியை அவர்கள் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கு முன்பு அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். அதனை தலைமைச் செயலாளராக இருந்தவர் அனுமதித்து சிக்கலில் சிக்கிக்கொள்ள விரும்பாமல் அந்த கோப்புகளை ஒதுக்கிவைத்தார். அதன்பின், எல்.ஜி. கையெழுத்துக்காக அனுப்பிவைக்க அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. இதற்கு அமைச்சர் சாய்சரவணன் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது. இதனை ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் எதிர்க்காமல் இருக்க முதலமைச்சர் ரங்கசாமி மூலமாக, தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கும் துறையை கையில் வைத்துள்ள உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் 50 லட்சம் எனப்போட்டு, மொத்தம் 1 கோடி ரூபாய் தர உறுதியளித்ததால் சைலண்டாகிவிட்டார். என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு மட்டும் எதிர்த்தார், அவரையும் ரங்கசாமி சமாதானம் செய்துவிட்டார் என்கிறார்கள். அதே நேரத்தில் சமூகநல இயக்கங்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஒன்றிய அரசு, சி.பி.ஐ., கவர்னருக்கு புகாரனுப்பியுள்ள அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மணிகண்டன் நம்மிடம், "புதுச்சேரியில் ஏற்கெனவே ஆறு டிஸ்லரி கம்பெனிகள் இருக்கு. ஒவ்வொரு கம்பெனியும் தினமும் 35 ஆயிரம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தறாங்க. இதனால் பிரான்ஸ் நாட்டிடம் கடன் வாங்கி குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுவருகிறது. புதிதாக 7 கம்பெனிகளுக்கு அனுமதி தரும்போது தினமும் கூடுதலாக இரண்டு லட்சம் லிட் டர் தண்ணீர் எடுத்தால் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரிக்கும். புதுச்சேரியில் ஒரு மாதத்துக்கு மூன்று லட்சம் கேஸ் மதுபானங்கள் உற்பத்தியாகி, அவற்றில் 2 லட்சம் தான் விற்பனையாகுது. பிறகெதுக்கு கூடுதல் தொழிற்சாலைகள்? இந்த மதுபானத் தொழிற் சாலைகளுக்காக இதுவரை மூன்று முறை அமைச்சரவையை கூட்டியிருப்பதாகத் தகவல் வருகிறது. இதற்கு அதிக முக்கியத்துவம் தரக்காரணம், பா.ஜ.க.வை சேர்ந்த வி.என்.எஸ்.ராஜசேகர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மதுபானத் தொழிற்சாலை தொடங்க இரண்டு லைசென்ஸ் கேட்டு விண் ணப்பித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த கம்பெனி ஒன்றும் விண்ணப்பித்துள்ளது. இந்த கம்பெனியில் முக்கிய அமைச்சர் ஒருவர் பார்ட்னராக இருக்கிறார். ஆகக் கூட்டணியிலுள்ள பா.ஜ.க.வினரும், அமைச் சர்களின் ஆதரவாளர்களும் தொழிற்சாலைகளைத் தொடங்க ஆர்வத்தோடிருக்கிறார்கள்.
புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி தருவதன் மூலமாக அரசுக்கு வருமானம் வரும் என முதலமைச்சர் சொல்வது பொய். இந்த சரக்கு எங்கே விற்பனை செய்யப்படுகிறதோ அந்த மாநிலத் துக்கு அதிக வரி வரும். புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டாமல் தமிழ்நாட்டுக்கு விற்பனைக்கு சென்றதை கவர்னராக இருந்த கிரண்பேடி கண்டுபிடித்து லைசென்ஸ் கேன்சல் செய்தாங்க. என்.ஆர். ஆட்சிக்கு வந்து அவர்களுக்கு மீண்டும் லைசென்ஸ் தந்தார். புதுவையில் தொழிற்சாலை வரி ஒரு சதவிகிதத் துக்கும் குறைவே. அதுவே அரசுக்கு வரும். மக்களுக்கு வேலை கிடைக்கும் என்பார்கள், அதற்கு வேறு தொழிற்சாலைகளைத் தொடங்கலாமே?'' எனக் கேட்டார்.
இன்னும் சிலரோ, "புதுவையில் 20 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் ஒன்றிய அரசு உள்ளாட்சிக்கான நிதியை தரவில்லை. உள்ளாட்சி வரி வருகை மிகக்குறைவாக உள்ளது. மின்சாரக் கட்டணம் கட்டாமல் பல தொழிற்சாலைகள் கோடிக்கணக்கான தொகை பாக்கி வைத்துள்ளன. இதனை வசூலிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. புதுச்சேரியில் 5 லட்சத்துக்கும் மேலான கேபிள் கனெக்ஷன் உள்ளது. மாதம் 280 ரூபாய் வசூலிக்கிறார்கள். மாதம் 14 கோடிக்கு மேல் தனியார் சம்பா திக்கின்றனர். தமிழ்நாட்டைப்போல் அரசுடமையாக்கினால் அரசுக்கு வருமானம் வரும். இங்கே 7 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மெடிக்கல் டூரிஸத்தை டெவலப் செய்தால் வருமானம் வரும். அதையெல்லாம், செய்யாமல் மது விற்பனை வரியை அதிகரித்து ஆட்சி செய்ய முயற்சிக் கிறது.
மதுபானத் தொழிற்சாலை அனுமதிகேட்டு 7 விண்ணப்பங்கள் அரசிடம் வந்துள்ளது. கவர்னர், ஒன்றிய அரசு அனுமதிக்காக அந்த கோப்புகள் அனுப்பப்படவுள்ளன. பா.ஜ.க. பிரமுகரிடம், நீங்க உங்க டெல்லி லாபி மூலமாக அனுமதி வாங்குங்க எனச்சொல்லி அவரது ஃபைலை மட்டும் மூவ் செய்யும் வேலைகள் நடப்பதாகக் கூறப்படு கிறது. அடுத்தடுத்து மற்ற ஃபைல் களையும் க்ளியர் செய்துவிடலா மென்று நினைக்கிறார்கள்'' என விவரிக்கிறார்கள்.