"குடியுரிமை மட்டுமே இலக்கு! -30 ஆண்டுகளாக அகதி வாழ்க்கை!' என்ற தலைப்பில், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்ற அங்கீகாரம் இருந்தும், கரூர் மாவட்ட இலங்கை அகதிகள் முகாமில் 30 ஆண்டுகளாக அகதியாகவே வாழ்ந்துவரும் கணேசன் என்பவர் குறித்த செய்தியை நக்கீரனில் வெளியிட்டிருந்தோம். அவர் வைத்திருந்த கடவுச்சீட்டில் அவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்று அச்சிடப் பட்டிருந்ததை அடுத்து, அவருடைய ஆவணங்களை கொண்டு திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ரோமியோ ராய், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவருடைய வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், "மத்திய அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்' என்று உத்தர விட்டுள்ளார். தற்போது அவருடைய வழக்கில் விரைவில் குடியுரிமை கொடுக்க மத்திய அரசு முன்வருவதற்கு சாதகமான சூழ்நிலை உள்ள தாகவும், இதற்கு நக்கீரன் வெளியிட்ட செய்தியே காரண மென்றும் வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித் துள்ளார். மேலும் சில பாதிக்கப் பட்ட இலங்கை அகதிகள் குறித்த செய்திகளையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தற்போது வசித்துவரும் தியாக விஜயன் என்பவரும் அவரோடு மேலும் பலரும் கடந்த 1983-ம் ஆண்டு கொழும்பிலிருந்து இராமேஸ்வரத்துக்கு டி.எஸ்.எஸ். ராமானுஜம் என்ற கப்பல் மூலம் வந்துள்ளனர். அங்கிருந்து சென்னை வரை செல்லும் ஒரே பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதால், திருச்சி கொட்டப்பட்டு முகாமிற்கு வந்துள்ளனர். அந்த பயணச்சீட்டு, போட் மெயில் என்று அழைக்கப்பட்டுள்ளது. மண்டபம் அகதிகள் முகாமிலும் இதேபோன்ற கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கொழும்பிலிருந்து வந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பயணசீட்டில் "தாயகம் திரும்புபவர்கள்' என்று ஆங்கிலத்தில் (REPATRIATE) அச்சிடப்பட்டுள்ளது.
தற்போது இதை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் தாயகம் திரும்பும் மலையக தமிழர்கள் என்பதை உறுதிப்படுத்தி, அவர்களை இந்திய வம்சாவளியினராகக் குறிப்பிட்டு அவர்களுக்கான குடியுரிமையைப் பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரோமியோ ராய் ஓர் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். மேலும் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கான மறுவாழ்வுக்கான வழிகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்துதர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி அவர் களுக்கு வணிகக்கடன், வீட்டுக்கடன், சுய வேலைவாய்ப்பு, பால் பண்ணை உள்ளிட்டவைகள் வழங்கலாம் என்றும், மேலும் கூட்டுறவு நூற்பாலைகளில் தேயிலை மற்றும் அரசு ரப்பர் தோட்டங்களில் வேலை அளிக்கலாம். தனியார் துறையில் வேலைவாய்ப்பு, அரசு இடத்தில் இலவச வீடு, அரசுத் துறையில் வயது வரம்பு, படிப்பு போன்ற சலுகை கள் வழங்கப்பட வேண்டும். மேற்கூறப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் ஆணைப்படி தாயகம் திரும்பியோ ருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே குடியுரிமை பெறு பவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும், அகதிகள் முகாம்களில் உள்ளவர்களை குற்றவாளிகளைப்போல உளவுத்துறை அதிகாரிகள் நடத்துதைத் தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த வினோதன் என்பவர், இந்தியாவில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்த மலேசியாவிற்கு சென்றுவிட்டு பணியாற்றிவிட்டு மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி உள்ளார். அவருடைய பெயர் இந்த முகாமில் பதிவிட வில்லை. ஆனால் அவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். அவருடைய மனைவி, குழந்தைகளின் பெயர்கள் இந்த முகாமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு மட்டும் பதிவு செய்யப்படாமல் 4 ஆண்டுகளாக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
இதுகுறித்து கூறுகையில், "எங்களுக்கு குடியுரிமை கொடுத்தால் போதும், அதுவே எங்களுடைய முக்கியமான கோரிக்கை. எங்களுடைய பிள்ளைகள் சொந்த மண்ணில் அகதிகளாக வாழக்கூடாது, அவர்களுக்காவது குடியுரிமை கொடுத்து வாக்கு உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு அனைத்திலும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்" என்கிறார் ஆதங்கமாக.
வேலூர் மாவட்டம் மின்னூர் முகாமைச் சேர்ந்த சரவணன், "வாழ வழிதேடி வந்த நாங்கள் இன்றுவரை அகதிகளாகவே வாழ்கிறோம். எந்த வேலைக்கும் செல்ல முடியாமல், அரசை மட்டுமே நம்பி வாழும் கட்டாயத்தில் இருக்கிறோம். குற்றவாளிகளைப்போல பார்க்கப்படும் எங்களுக்கும் ஓர் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது பலர் வைத்திருக்கும் ஆவணங்களைக் கொண்டு நாங்கள் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது'' என்றார்.
நாம் சந்தித்த இலங்கைத் தமிழர் கள் அனைவருமே, "நாங்களும் மனிதர்கள்தான். சொந்த மண்ணில் அகதிகளாக வாழ்ந்துவருகிறோம். எங்கள் மீதான மோசமான பார்வை மாற வேண்டும். நாங்கள் கொலையாளிகள், குற்றவாளிகள், அகதிகள் என்று நினைக்கும் மனப்போக்கை மாற்ற வேண்டும். எங்களுடைய ஒரே கோரிக்கை, குடியுரிமை மட்டுமே. அதை நீதிமன்றம் மூலம் பெறுவோம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் சட்டரீதியாகப் போராடி வருகிறோம். எங்களுடைய முயற்சிக்கு நல்ல முடிவை நீதிமன்றமும், இந்த அரசும் வழங்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்'' என்கிறார்கள்.