வ்வொரு நூலகத்திலும் சரிந் திருக்கும் நூல்கள் தான் பலரின் வாழ்க்கையை நிமிர்த்தியிருக் கின்றன!' என்பது நூலகத்தின் பெருமையைச் சொல்லக்கூடிய பொன்மொழியாகும். இந்தியாவிலேயே நூலகங்களுக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டில் கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், நடமாடும் நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள் என சுமார் 4,640 நூலகங்கள் இயங்கிவருகின்றன. இந்த நூலகங்களுக்கான நூல்களை வாங்குவதில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலமான பத்தாண்டுகளில் மிகப் பெரிய அளவில் ஊழல்கள் நடந்துவருவது தற்போது அம்பலமாகி, பெரும்புயலைக் கிளப்பியுள்ளது.

dd

அரசு நூலகங்களுக்குத் தேவையான நூல்களை, நூல் விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பகங்களின் மூலமாகவே விலைக்கு வாங்குகிறார்கள். இதில் குறிப்பிட்ட சதவீதம் கழிவாகத் தள்ளுபடி செய்யப்பட்டே நூல்கள் வாங்கப்படுகின்றன. பெரும்பாலான பதிப்பகத்தாருக்கும், எழுத்தாளர்களுக்கும் பொது நூலகங்களே நல்லதொரு வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. நூலகங்களுக்கு விற்பனை செய்வதன்மூலம் குறைந்தபட்ச கியாரண்டியான லாபத்தை ஈட்டும் முனைப்போடு நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்கள் பலவுண்டு.

நூலகங்களுக்கு பதிப்பகத்தாரிட மிருந்து நூல்களைப் பெறும் முறையைப் பார்ப்போம். பதிப்பகத்தாரிடமிருந்து நூல்களைப் பெறுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுமே, அந்தந்த நூலகக் கிளைகளுக்கு என்னென்ன தலைப்புகளில் அமைந்த நூல்கள் தேவை என்பது பட்டியலிடப்படுகிறது. அதேபோல், எந்தெந்த மொழிகளுக்கு எவ்வளவு சதவீதம் தொகை ஒதுக்கீடு என்பதும் முடிவெடுக்கப் படுகிறது. பதிப்பகத்தார் தங்கள் வசமுள்ள நூல்களின் பட்டியலை பொது நூலக இயக்குநர் வசம் ஒப்படைப்பார்கள். அதன்பின்னர் பதிப்பகத்தார் வழங்கிய பட்டியலில் தங்களுக்குத் தேவையான தலைப்பிலான நூல்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 240 பேரைக் கொண்ட கமிட்டி ஆய்வு செய்து, தேர்வு செய்கிறார்கள். அப்படி தேர்வு செய்யப் படும் நூல்களை அடுத்ததாக 10 பேர் கொண்ட பரிந்துரைக் கமிட்டி ஆய்வு செய்யும். அதன் பின்னரே நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்கள் இறுதி செய்யப்படுகின்றன. அடுத்ததாக, பதிப்பகத்தினரிடமிருந்து அந்த நூல்களை வாங்குவதற்கு எத்தனை சதவீதம் கழிவு செய்யப்படும் என்பது குறித்த பேச்சுவார்த்தையில் பொது நூலக இயக்குநர் ஈடுபடுவார். இப்படித்தான் நூலகங்களுக்கான நூல்கள் வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்க்கும்போது மிகவும் திட்டமிடலோடு நூல்கள் வாங்கப்படுவதாக நமக்குத் தெரிகிறது. ஆனால் உண்மையில் நடப்பது எல்லாமே மோசடி... இயக்குநர் இளம்பகவத்தும் அவருக்கு ஆணை பிறப்பிக்கும் நம்பர் 1... அதாவது அவருக்கு பின்னா லிருந்து இவருக்கு மூளையாக செயல்படுபவருக்கு பிடித்தமான பதிப்பகங்களிடமிருந்து மட்டும் அதிக கொள்முதல் நடக்கும்... இது இப்போதுவரை தொடர்கிறது!

ffdd

Advertisment

பொது நூலகங்களுக்காக நூல்கள் கொள்முதலில் கடந்த பல ஆண்டுகளாகவே வெளிப்படையான அறிவிப்புகள், தேர்வுகள் நடைபெறாமல், மறைமுகக் கமிஷன் காரணமாக, சிபாரிசுகள் அடிப்படையில் சில குறிப்பிட்ட பதிப்பகங்கள், நூல் விற்பனை நிலையங்களின் வெளியீட்டு நூல்கள் மட்டுமே பெரும் எண்ணிக்கையில் வாங்கப்பட்டிருக் கின்றன.

பபாசி அமைப்பு நடத்தும் புத்தகக் கண்காட்சியில் இடம்பெறாத, பெயரே தெரியாத பதிப்பகங்களின் வெளியீடுகள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதும், பதிப்பகத் துறையில் பல்லாண்டு காலமாக வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் பதிப்பகங்கள் ஒதுக்கப்படுவதும் தற்போது பெருத்த சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

சில பதிப்பகங்களிடமிருந்து பெறப் பட்ட நூல்களுக்கு, அனுப்ப வேண்டிய தொகையைவிடக் கூடுதலாக லட்சக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு, பின்னர் திரும்பப் பெறுவதும் நடந்திருக்கிறது. இன்னொரு புறம், நூல்கள் கொள்முதலுக்காகப் பெரிய குழுவே இயங்கியபோதும், ஒருவரின் நூலை, வேறு நபர்கள் அவர்களின் பெயர்களில், வேறு பதிப்பகங்களின் பெயரில் வெளியிட்டு அதை நூலகங்களுக்கு விற்று கல்லாக்கட்டிய மோசடிகளும் நடந்திருக்கிறது. அந்த மோசடி கள் தற்போது வெளிவந்ததும் பதிப்பகத்தினர் பேரதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ss

குறிப்பாக, அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவரான மணவை முஸ்தபா எழுதிய "கணினி கலைச்சொல் அகராதி' என்ற நூலை அப்படியே காப்பியடித்து, வனிதா பதிப்பகத்தார் தங்களது பெயரில் வெளியிட்டு, அதனை பொது நூலகத்துக்கு விற்பனையும் செய்துள்ளார். அதேபோல் கந்த புராணத்தை இதே பதிப்பகத்தாரின் தந்தை பெயரிலும், பெயரைச் சுருக்கி ஜி.பி.என். என்ற பெயரிலுமாக வெளியிட்டு அவற்றையும் நூலகத்துக்கு விற்று காசாக்கியுள்ளார். அதிலும் இந்த நூல்களை ஒரு வார்த்தைகூட மாறாமல் அப்படியே பதிப்பித்திருக்கிறார்கள். இதே பாணியில், 'அறிவியல் கலைச்சொல் அகராதி' என்ற நூலானது, ஒரே ஆசிரியரின் பெயரில் மூன்று வெவ்வேறு பதிப்பகத்தின் பெயர்களில் அச்சிடப்பட்டு நூலகத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நூலின் உள்ளடக் கத்தையும், தலைப்பையும்கூட ஆய்வு செய்யாமல் இந்நூல்களை வாங்கி யிருப்பார்களா? அதுவும் பெரிய கமிட்டியெல்லாம் இருந்தும் வாங்கியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கையில் அதிர்ச்சியாக உள்ளது. இதெல்லாம் ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற உதாரணமாகும். பொது நூலகங்களில் உள்ள நூல்களைத் தோண்டத்தோண்ட இன்னும் பலரது மோசடிகள் வெளிப்படும். இதுகுறித்து வனிதா பதிப்பகத்தாரிடம் கேள்வி எழுப்பியபோது, ""என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், பபாசி தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுவதைத் தடுக்க நினைப்பவர்கள் கிளப்பிவிடும் அவதூறு தான்இது'' என்று மறுத்தார்.

அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற நூலகத்துறை மோசடிகள், நூலகத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்பால், தற்போதைய தி.மு.க. தலைமையிலான ஆட்சியிலும் தொடர்வ தாகப் புலம்புகிறார்கள். கடந்த இரண்டாண்டு களாக பொது நூலகத்துக்கு நூல்கள் கொள்முதல் செய்யப்படாத நிலையில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு முதற்கட்டமாக 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ், ஆங்கிலம் என இரண்டாகப் பிரித்து, தமிழுக்கு 760 பதிப்பாளர்களிடமிருந்து 1 லட்சத்தி ஆறாயிரம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஆங்கில நூல்களை, 200 பதிப்பகங்களிடமிருந்து 2 லட்சத்தி 55 ஆயிரம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தமிழ் நூல்களைவிட ஆங்கில நூல்கள் அதிகமாக வாங்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்துக்கு அவ்வளவு முன்னுரிமை ஏனென்ற கேள்வி எழுகிறது. அடுத்ததாக, தமிழைவிட அதிக எண்ணிக்கையில் ஆங்கில நூல்கள் வாங்கப்பட்ட போதும், பதிப்பகங்கள் எண்ணிக்கை தமிழைவிட மிகக்குறைவாக இருக்கிறது. இது எப்படி சாத்தியமென்று நாம் விசாரித்தபோது, கண்டெய்னர் நூல்களாக ஆங்கில நூல்கள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டிருப்ப தாக புதுச்செய்தி கிடைத்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் கண்டெய்னர் புத்தகங்கள் மூலம் சில பிரபலமில்லாத ஆங்கிலப் பதிப்பகங்கள் பெருங்கொள்ளை அடித்திருப்பதாகக் கூறப் படுகிறது!

Advertisment

dd

அதென்ன கண்டெய்னர் நூல்கள்? வெளி நாடுகளிலிருந்து பயன்படுத்தி முடிந்த ஸ்க்ராப் களாக கண்டெய் னர்களில் கொண்டு வரப்படும் ஆங்கி லக் கழிவு நூல் களை சில பதிப்பகங்களும் நூல் நிலையங்களும் எடைக்கு எடை கணக்கில் வாங்கிக்கொண்டு, அவற்றை அப்படியே புதிய நூல்களைப்போல் விற்பனைக்குக் கொண்டுவருகிறார்கள். அந்த நூல்களில் டாலர் மதிப்பீட்டில் விலை அச்சிடப்பட்டிருக்கும். அதை இந்திய ரூபாயாக மாற்றும்போது மிகப்பெரிய தொகையாக வரும். ஆனால் எடைக்கு எடை வாங்கியதோ மிகச்சிறிய தொகை தான். இந்த நூல்களை அப்படியே நூலகங்களுக்கு விற்பனை செய்யும்போது கழிவுத்தொகை போக மிகப்பெரிய அளவில் லாபமீட்ட முடிகிறது. இதைக் குறிவைத்தே சில நூல் விற்பனை நிலையங்கள், ஸ்க்ராப் நூல்களை ஆர்வத்தோடு வாங்குகின்றன.

கடந்த பல ஆண்டுகளாக இப்படியான மோசடி நடந்துவருவதாக சில பதிப்பகத்தார்களே தெரிவித்தார்கள். கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்காக வாங்கப்பட்ட ஆங்கில நூல்களில் இப்படியான ஸ்க்ராப் நூல்கள் நிறைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

நூலகங்களுக்கான ஆர்டர்களைப் பெறுவதற்காக பதிப்பகங்களும், நூல் விற்பனை யாளர்களும் பல்வேறு குறுக்கு வழிகளை நாடுகிறார்கள். பொது நூலகத்துறையில் அதிகார மட்டத்திலிருக்கும் அதிகாரிகளிடம் லாபி செய்தும், குறிப்பிட்ட சதவீதத்தை லஞ்சமாக அளித்தும் சிலர் மட்டுமே தங்கள் வசமுள்ள நூல்களில் பலவற்றை விற்பனை செய்துவருவதும் தெரிய வந்துள்ளது. அதேபோல், 2021 & 22ஆம் ஆண்டுக்கான, அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதலில், குறிப்பிட்ட 50 நிறுவனங்கள் மட்டுமே அதிக பலன் பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்காக பெருமளவு லஞ்சமோ, வேறு வகையிலான லாபியோ செய்யப்பட்டிருக்கும் என்றும் குற்றம்சாட்டப் படுகிறது.

அதேபோல நகராட்சி நிர்வாகத்திலுள்ள நூலகங்களுக்கு 2023ஆம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களிலும், குறிப்பிட்ட சில பதிப்பகங்கள் மட்டுமே அதிக நூல்களை விற்பனை செய்து ஆதாயமடைந்துள்ளன. கொடுமை என்னவென்றால், பதிப்பக நூல்கள் விற்பனையை எதிர்பார்த்து இருக்கின்ற பல பதிப்பாளர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, குறிப்பிட்ட நான்கு, ஐந்து பதிப்பகத்தார் சிண்டிகேட் அமைத்து, அதிகாரிகளுக்கு அதிக கமிஷன் அளித்து, விலை குறைந்த தாள்களைப் பயன்படுத்தி நூல்களை உருவாக்கி விற்றுள்ளனர். இதைத் தட்டிக்கேட்க யாரும் இல்லாத கொடுமை தொடர்கிறது. வெளிப்படைத்தன்மை என்பது எள்ளளவும் கிடையாது.

dd

நூல்கள் கொள்முதலில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நூலக ஆணைக்குழுத் தலைவர் மனுஷ்யபுத்திரனிடம் கேட்டபோது, ""கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் பொது நூலகத்துறையில் நடந்ததாக சொல்லப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. பொது நுலகத்துறையில் மட்டுமல்ல, எஸ்.எஸ்.ஏ. பள்ளிகளுக்கு நூல்களை கொள்முதல் செய்யும் திட்டத்திலும் பெருமளவு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் வந்திருக்கின்றன. சில பதிப்பாளர்களின் மோசமான செயல்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த பதிப்பாளர்களுக்கும் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மையெனில் அது பொது நூலகத்துறையை சிதைக்கிற ஒரு செயல். புத்தகங்களை நேரடியாக வாங்க முடியாதவர்களுக்கு, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஏழ்மையான பின்னணி கொண்ட மாணவர்களுக்காகத்தான் பொது நூலகத்துறை உருவாக்கப்பட்டது. இந்த உயரிய நோக்கத்தைச் சிதைத்து சிறந்த நூல்கள் நூலகங்களுக்கு செல்ல முடியாமல், குறுக்கு வழியில் போலியான நூல்களையும், தரமற்ற நூல்களையும் பொது நூலகங்களுக்கு அனுப்பி ஆதாயம் தேடுவது மோசடி மட்டுமல்ல, அது ஒரு சமுதாயக் குற்றமுமாகும்.

இந்த குற்றச்சாட்டுகளின்மீது உரிய விசாரணை நடத்தி, அ.தி.மு.க. ஆட்சிக்கால பத்தாண்டுகளில், பொதுநூலகத் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மோசடிகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டோர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்'' எனக் கூறினார். பொது நூலகத்துறைக்கான நூல்கள் வாங்குவதில் சில பதிப்பகங்களின் லாபி, போலி நூல்கள் அச்சடிப்பு உள்ளிட்ட பல்வேறு மோசடிகள், நூலகத் துறையின் மேல்மட்டத்திலிருந்து கண்காணிக்கும் பொதுநூலக இயக்குநருக்கு தெரியாமலா போகுமென்ற கேள்வியுடன், தற்போதைய பொதுநூலக இயக்குநர் இளம்பகவத்திடம் இதுகுறித்துக் கேட்டபோது... ""தற்போது கூறப்படும் குற்றச் சாட்டுகள் கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்திருக்கின்றன. அந்த பிரச்சனைகள் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், அதேபோல், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் நூல்கள் ஏற்கெனவே போதுமான அளவு திரட்டப்பட்டுவிட்டதால் ஆங்கில நூல்களுக்கான தேவை அதிகமிருந்தது. அதன்பொருட்டே அதிக அளவில் ஆங்கில நூல்கள் அதிகம் வாங்கப்பட்டன'' என்று மழுப்பலாக பதில் சொன்னார்.

தற்போது நூல்கள் கொள்முதலில் எழுப்பப்பட்டுள்ள பல்வேறு புகார்களின் காரணமாக, அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நூல்கள் வாங்குவதற்கான பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளது. நூல்கள் கொள்முதலை வெளிப்படைத்தன்மையுடன் அணுகுவதற்கேற்ற மென்பொருளை உருவாக்கும் பணி முடுக்கிவிடப் பட்டுள்ளதாம். எனவே பொது நூலகத்துறையில் இதுபோன்ற மோசடிகள், சர்ச்சைகள் இனி வரும் காலத்தில் கட்டுப்படுத்தப் படும் எனக் கூறுகிறார்கள். நம்புவோமாக...

-அருண்பாண்டியன், தெ.சு.கவுதமன்