கட்-அவுட் வைப்பவர் களாகவும், கட்-அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்பவர்களாகவுமே பார்க்கப்பட்டு வந்த சினிமா ரசிகர்களை, தனது மறைவுக்குப்பின் சூழலியல் ஆர்வலர்களாக காணவைத்து, தமிழ்ச் சூழலில் ஆச்சர்யத்தை விதைத்திருக்கிறார் மறைந்த நடிகர் விவேக்.
திரைப்பட நடிகராக மட்டுமின்றி, சூழலியல் ஆர்வலராகவும் தமிழக இளைஞர்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர் நடிகர் விவேக். அப்துல் கலாமின் மீது அன்பும் மரியாதையும் கொண்டிருந்த விவேக், "கிரீன் கலாம்' என்ற திட்டத்தின் மூலம், சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நட... இளைஞர் களையும் மாணவர்களையும் அழைத்தார். தானாக முன்வந்து மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பவர்களை அடையாளம் கண்டு பாராட்டியுள்ளார்.
இப்படி தமிழக இளைஞர் கள் மனதில் இடம்பிடித்தவரின் லட்சியமான "கிரீன் கலாம்' திட்டம் முழுமையாக நிறை வேறும் முன்பே திடீரென அவரை மரணம் தழுவிக் கொண்டது.
நடிகர் விவேக்கின் மரணத்தை எதிர்பார்க்காத இளைஞர்கள், மரண மடைந்தவுடன் அவர் உடல் மண்ணுக்குள் போவதற்குள் அவரது கிரீன் கலாம் லட்சி யத்தை நிறை வேற்ற முனைந்த னர். தானாக முன்வந்து தமிழகம் முழுவதும் தங்கள் வீடு, தோட்டம், அலு வலகம், பொது இடங்கள் என, கிடைத்த இடங் களில் எல்லாம் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கொரோனாவுக்கு தடுப்பூசி போட மக்களை ஊக்கப்படுத்த, அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மரணமடைந்தது, எதிர்மறை விளம்பர மானாலும்... அவரது ரசிகர்களும் அன்பர்களும் இன்னொருபுறம் அவரது மறைவுதினத்தை மரம் நடும் தினமாக அனுசரித்து, நேர்மறையான முறையில் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகிலுள்ள கொத்தமங்கலம் கிராமத்தில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, இளைஞர்கள் மன்றம் சார்பில் நீர்நிலைகளைச் சீரமைத்து மரக்கன்றுகள் நடப்படுவதை அறிந்த விவேக், அந்த அமைப்பினரைப் பாராட்டி டுவிட்டரில் பதிவு போட்டிருந்தார். இளைஞர் மன்றத்தின் 100-வது நாள் மற்றும் குளம் சீரமைப்பு நாளில் நடிகர் விவேக் கலந்துகொள்வதாக இருந்தார். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அவரால் கலந்துகொள்ள முடியாமல் போக... 100-வது நாள் விழா ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், விவேக் மறைவு இளைஞர்களை துயரத்தில் ஆழ்த்தியது.. காலை 9 மணிக்கே... கொத்தமங்கலம் பெரியகுளத்தில் ஒன்றுகூடிய இளைஞர்கள், "நடிகர் விவேக் மறைவை மரக்கன்று நட்டு அவரது கனவை நிறைவேற்ற துணைபுரி வோம். தமிழகம் முழுவதுமுள்ள இளைஞர்கள் நினைத்தால், அவர் உடல் மண்ணுக்குப் போகும் முன்பே, ஒரு கோடிக்கு மேல் மரக்கன்றுகளை விதைக்கமுடியும். அதற்கான தொடக் கப்புள்ளியாக நாம் மரம் நடுவோம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதேபோல பெரியாளூர் குருகுலம் பள்ளி தாளாளர் சிவநேசன் தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து நடிகர் விவேக்கின் லட்சியத்தை நிறைவேற்ற மரக் கன்றுகளை நட்டனர். புதுக்கோட்டை மற்றும் கீரமங்கலம் கார், வேன், ஓட்டுநர்கள் விவேக் நினைவாக மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தி னார்கள். கொத்தமங்கலத்தில் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள ஆவணம் கிராமத்தில், ஒன்றிணைந்த இளைஞர்கள் "கிரீன் கலாம்', "கிரீன் விவேக்' என்ற புதிய திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் மரக்கன்று களை நட்டு வளர்க்க திட்டமிட்டு... முதல்கட்ட மாக சமூக ஆர்வலர் அப்பாஸ் தலைமையிலான இளைஞர்கள் சுமார் 350 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். ஒரே நாளிலேயே விவேக், லட்சியத்தின் கணிசமான தூரத்தை எட்டிவிட்டார். இன்னும் சில நாட்களில் அவரது "கிரீன் கலாம்' திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு "கிரீன் விவேக்' திட்டமும் நிறைவேற்றப்படும்.
உயிரோடு இருக்கும்போது அடையமுடியாத லட்சியத்தை விவேக் ரசிகர்கள், அவரால் கவரப்பட்ட இளைஞர்கள் நிறைவேற்றிக் கொடுக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டது அனைவரையும் நெகிழச்செய்தது.
தமிழ்நாடெங்குமே இதுபோல மரம்நடுவிழா நடைபெற்றாலும், நீலகிரி மாவட்டத்திலும் தோடர் பழங்குடியினர், விவேக்கின் மறைவுக்கு மரம் நட்டு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
விவேக்கின் சொந்த ஊர், தென்காசி மாவட் டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட் டூர். பெருங்கோட்டூரில் உள்ள அனைவரும், தங்கள் மண்ணின் மைந்தன் மறைவுக்குத் துக்கம் அனுசரித்து வாடியமுகத்துடன் காணப்பட்டனர். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், தி.மு.க. வேட்பாளர் ராஜா ஆகியோர் அவரின் கனவான மரக்கன்றை நட்டு வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அண்டைநகரமான சங்கரன்கோவிலில் நகரவாசிகள் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தினர். நகரெங்கும் அஞ்சலி சுவரொட்டிகள் காணப்பட் டன. ஆங்காங்கே புகைப்படத்துக்கு மாலை அணிவித்து துக்கம் அனுஷ்டிப்பதையும் பார்க்க முடிந்தது.
தன் மறைவையும், மரம்நடு விழாவுடன் இணைத்து நினைத்துப் பார்க்கச் செய்ததில் சின்னக் கலைவாணர் ஜெயித்துவிட்டார்... மரணம் தோற்றுவிட்டது.