"தமிழகத்தில் கலைஞரால் துவக்கி வைக்கப்பட்ட லீ மெரிடியன் ஹோட்டல்களை முதல்வர் ஸ்டாலின்தான் காப்பாற்ற வேண்டும்' என்கிறார்கள் அமெரிக்கவாழ் தமிழர்கள். மெரிடியனின் 1600 கோடி ரூபாய் சொத்துக்கள், பகல் கொள்ளைபோல் பறிபோகும் அதிர்ச்சிதான் இதற்கு காரணம்.
அமெரிக்கவாழ் தமிழரான பழனி பெரியசாமி தலைமையில் அமெரிக்க தமிழர்கள் (என்.ஆர்.ஐ.க்கள்) 100 பேர் இணைந்து அவர்களின் முதலீட்டில் உருவானது சென்னை கிண்டியில் அமைந்திருக்கும் லீ மெரிடியன் 5 நட்சத்திர டீலக்ஸ் ஹோட்டல். முழுக்க முழுக்க தமிழர்களால் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட முதல் பிரமாண்டமான ஸ்டார் ஹோட்டல் இதுதான்.
சென்னை லீ மெரிடியனை 2000-த்திலும், கோவை லீ மெரிடி யனை 2011-லும் திறந்து வைத்த அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர், தமிழர்களால் உருவான லீ மெரிடியனின் பெருமைகளை புகழ்ந்தார். தமிழர்களால் உருவாக்கப்பட்ட மெரிடியன் சாம்ராஜ்யத்தைக் கண்டு வட இந்திய தொழிலதிபர்கள் மிரண்டனர்.
அமெரிக்கவாழ் தமிழர்களின் பல நூறு கோடி ரூபாய் முதலீடுகளுடன் இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, ஐ.டி.பி.ஐ. வங்கி, இந்திய டூரிஸம் ஃபினான்சியல் கார்ப்பரேஷன் ஆகியவைகளிடமிருந்து கடன் பெற்றும் இந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் லீ மெரிடியனின் சேர்மன் பழனிபெரியசாமி. வலிமையான வருவாய் பெருகியதில், சென்னை விமான நிலையம் அருகே 26 ஏக்கர், பழனியில் 12 ஏக்கர், கோவையில் 6 ஏக்கர் நிலம் மற்றும் பல்வேறு இடங்களில் ஹவுசிங் ப்ளாட்ஸ் என சொத்துக்கள் வாங்கப்பட்டன. சென்னை லீ மெரிடியனுக்காக வாங்கிய வங்கிக் கடனை முழுமையாக கட்டிமுடித்த லீமெரிடியன் நிர்வாகம், கோவை லீ மெரிடியனுக்காக வாங்கிய 210 கோடி ரூபாய் கடனை அடைப்பதில் சிரமத்தை சந்தித்தது. ஜெயலலிதா ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட பல்வேறு சரிவுகள் இதற்கு காரண மாக இருந்தன. வட்டியும் கடனும் சேர்ந்து லீ மெரிடியனின் அவுட் ஸ்டேண்டிங் தொகை 340 கோடி ரூபாய்.
இப்படிப்பட்டசூழலில்தான், சொத்துக்களை விற்று உடனடியாக 99 கோடி ரூபாய் கட்டுங்கள் என வங்கிகளின் க்ரிடிட்டர்ஸ் கமிட்டி நெருக்கடி தந்தது. இதனால், சுமார் 500 கோடி மதிப்பிலான சென்னையிலுள்ள 26 ஏக்கர் நிலத்தை, பிரபல கட்டுமான நிறுவனமான காஸா கிராண்டேவிடம் 100 கோடிக்கு பேசி முடிக் கப்பட்டது. இதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டு, வங்கிகளின் கமிட்டியிடம் தெரிவிக்கப்பட்டநிலையில், ஒப்பந்தத்தின்படி நடந்துகொள்ளாத தால், இன்சால்வன்சி பேங்க் கோட் சட்டத்தின் கீழ், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் லீ மெரி டியனுக்கு எதிராக 2019 நவம்பரில் வழக்கு போடுகிறது டூரிசம் ஃபினான்சியல் கார்ப்பரேஷன்.
வழக்கு விசாரணையின்போது, லீ மெரிடியன் தரப்பில் கேட்கப்பட்ட கால அவகாசத்தை நிராகரித்து, பிரபல கல்வி நிறுவனங்களின் உரி மையாளரான தொழிலதிபர் ராஜ கோபாலிடம் லீ மெரிடியன் சொத்துக்களை 423 கோடிக்கு விற் கும் வங்கிகளின் அப்ரூவலை அனு மதித்து ஜூலை 15-ந் தேதி (2021) தீர்ப் பளித்தார் தீர்ப்பாயத்தின் பொறுப்பு நீதிபதி சுஷாரிதா. இந்த தீர்ப்பு லீ மெரிடியனின் பங்குதாரர்களான அமெரிக்கவாழ் தமிழர்களையும் ஸ்டார் ஹோட்டல் தொழிலதிபர் களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இந்த தீர்ப்பு பல்வேறு விவா தங்களை பரபரப்பாக உருவாக்கிவரும் நிலையில், அது பற்றி நாம் விசாரித்த போது, ‘’லீ மெரிடியனுக்கு எதிரான வழக்கு தீர்ப்பாயத்தில் அட்மிட்டான தைத் தொடர்ந்து, லீமெரிடியன் நிர்வாகத்தை நிர்வகிக்க வங்கிகளின் சார்பில் டெல்லியை சேர்ந்த முகேஷ்குமார் குப்தா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். கொரோனாவின் முதல்அலையால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலிலிருந்த அந்த சூழலில், லீ மெரிடியன் சொத்துக்களை வாங்க விருப்பமுள்ளவர்கள் அணுகலாம் என்ற விளம்பரத்தை கொடுக்கிறார் குப்தா. கொரோனா காலமென்பதால் பெரியளவில் இந்த விளம்பரம் தொழிலதிபர்களிடம் ரீச் ஆகவில்லை. இருப்பினும் பிரபல கல்வி நிறுவனங்களின் உரிமையாளரான எம்.ஜி.எம். ராஜகோபால், அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் வணங்காமுடி ஆகிய தமிழக தொழிலதிபர்கள் உள்பட இந்திய அளவில் 15 பேர் விருப்பம் தெரிவிக்க, அதில் 11 பேரை அப்ரூவல் செய்கிறார் குப்தா.
அந்த 11 பேரில் மும்பையை சேர்ந்த கோட்டக் ஃபண்ட் நிறுவனம், டெல்லியை சேர்ந்த திர் ஹோட்டல்ஸ் நிறுவனம், தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர் ராஜகோபால் ஆகிய 3 பேர் மட்டுமே கொட்டேஷன் கொடுத் தனர். கொரோனா நெருக் கடிகளால் மற்றவர்கள் கொட்டேஷனை தர முடியவில்லை. இந்த சூழலில், குமார்குப்தா நீக்கப்பட்டு லீ மெரி டியனின் நிர்வாகத்தை நிரந்தரமாக கவனிக்க தர்மராஜன் என்பவரை 2020 நவம்பரில் நியமிக்கின்றன வங்கிகள்.
இதனையடுத்து ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய தர்மராஜன், கொட்டேஷன் கொடுத்த 3 பேரின் விண்ணப்பங்களை பரிசீலித்த போது, லீமெரிடியன் சொத்துக்களை வாங்க, 423 கோடிக்கு கொட்டேஷன் கொடுத்திருந்தார் கல்வியாளர் ராஜகோபால்.
சொத்துக்களின் மதிப்பு 1600 கோடி இருப்பதாக சொல்லப்படும் சூழலில், 423 கோடி என்பது மிக குறைவாக இருப்பதால், நிறையபேர் கலந்துகொள்ளும் வகையில் மீண்டும் ஒரு விளம்பரம் தரலாம் என வலியுறுத்துகிறார் தர்ம ராஜன். ஆனால், தங்களுக்குரிய கடன் தொகை மட்டும் வந்தால் போதும் என்ற மனநிலையில் தர்மராஜனின் யோசனையை வங்கிகள் ஏற்க மறுத்தன. ராஜகோபாலின் 423 கோடி ரூபாய் கொட்டேசனை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் தர்மராஜன்.
இதனையறிந்து அதிர்ச்சியடைந்த லீ மெரிடியனின் சேர்மனான பழனிபெரியசாமி உள் ளிட்ட பங்குதாரர்கள், ’1600 கோடி மதிப்பிலான சொத்துக்களை வெறும் 423 கோடிக்கு தாரை வார்ப்பது பகல் கொள்ளை. இது மிகப்பெரிய அநியாயம்’ என சொன்னதோடு, 423 கோடின்னா நாங்களே வாங்கிக்கொள்கிறோம். சிறிய கால அவகாசம் கொடுங்கள் என வலியுறுத்தினர்; கெஞ்சினர். ஆனால், அதனை ஏற்காமல், 423 கோடிக்கு தீர்ப்பாயத்தின் அப்ரூவலை பெற தர்மராஜனை நிர்பந்தித்தன வங்கி கள். வேறுவழியின்றி, தீர்ப்பாயத்தில் உடனடியாக விண்ணப்பித்தார் தர்மராஜன்.
இது தொடர்பான விசா ரணையின்போது, இன்சால்வன்சி பேங்க் கோட் சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தின் சொத்துக்களை விற்க வங்கிகள் முயற்சிக்கும்போது, நிறுவனத்தின் பங்குதாரர்கள், வங்கி களிலுள்ள கடன், நிறுவனத்தின் சப்ளையர்கள், பணிபுரியும் ஊழியர்கள், அடமானம் இல்லாமல் கடன் வழங்கியவர்கள் என அனைவரின் நலன்களையும் கருத்தில் கொண்டே விற்கவேண்டும்.
ஆனால், இந்த விசயத்தில் வங்கிகளின் கடன் தொகை மட்டுமே கணக்கிடப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. அதனால் 423 கோடிக்கு அப்ரூவல் தரக்கூடாது. ஒருவேளை இதனை அப்ரூவல் செய்வதாக இருந்தால், அதனை நாங்களே கட்டுகிறோம் என லீ மெரிடியன் தரப்பில் வாதிக்கப்பட்டது. இதனை நிராகரித்த தீர்ப்பாயம், 423 கோடியை அப்ரூவல் செய்து தீர்ப் பளித்தது. இது எங்களுக்கு அதிர்ச்சிதான்'' என்கிறார்கள் நம்மிடம் பேசிய அமெரிக்க வாழ் தமிழர்கள்.
பங்குதாரர்களிடம் விசாரித்தபோது, பொது முடக்க காலத்தில் தொழில் நிறுவனங்களுக்கு 5 மாதங்கள் விதிவிலக்கு கொடுத்துள்ளது மத்திய அரசு. அந்த காலகட்டத்தில் தொழில் நிறு வனங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் வங்கிகள் எடுக்கக்கூடாது. ஆனால், லீ மெரிடியன் விவகாரத்தில் இதெல்லாம் கவனத்தில் கொள்ளப் படவே இல்லை. நட்சத்திர ஹோட்டல்கள், காலி நிலங்கள், பங்களாக்கள் என 1600 கோடி மதிப்பிலான சொத்துக்களை வெறும் 423 கோடிக்கு பகல் கொள்ளையாக கபளீகரம் செய்யப்படுகிறது. தமிழகத்தை நம்பி தொழில் துவங்கிய எங்களுக்கு இதுதான் பரிசா? 423 கோடியை கட்டுவதற்கு 45 நாட்கள் கால அவகாசத்தை ராஜகோபாலுக்கு வங்கிகள் தந்திருக்கும் நிலையில், எங்களுக்கு 10 நாட்கள் தந்திருக்கலாமே? ஆனால், தரமறுத்தனர்'' என்கின்றனர் மிக ஆதங்கமாக!
தமிழக தொழிலதிபர்களோ, "லீ மெரிடியன் விவகாரத்தில் அனைத்தும் சட்டப் படி சரியானதாக தோன்றினாலும் சட்டத்திற்கும் மேலே ஒரு நியாயம் இருக்கிறது. அந்த நியாயங்கள் நிலை நிறுத்தப்பட வேண்டாமா? 1600 கோடி மதிப் பிலான சொத்துக்கள் வெறும் 423 கோடிதான் என்பது பகல் கொள்ளை. லீ மெரிடியனோடு தொடர்புடைய பல தரப்பையும் அம்போ என விடுவது நியாய மில்லை. இப்படி ஒரு சூழல் இருந்தால், தமிழகத்தில் தொழில் துவங்க வெளிநாடுவாழ் தமிழர்கள் எப்படி முன்வருவார்கள்? கலைஞரின் வாழ்த்துக்களுடன் உருவாக்கப்பட்ட லீ மெரிடியன் சாம்ராஜ்ஜியத்தை காப்பாற்றவேண்டியது கலைஞரின் மகன் ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தமிழக அரசின் கடமை. இதில் அரசு தலையிடாமல் போனால் தமிழகத்தை நோக்கி தொழில் முனைவோர்களை ஈர்ப்பதில் பின்னடைவு ஏற்படும்'' என்கிறார்கள்.
லீ மெரிடியனின் தற்போதைய நிலை குறித்து கருத்தறிய அதன் சேர்மன் பழனி பெரியசாமியை தொடர்புகொள்ள முயற்சித்தோம். தொடர்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில் தீவிரமாக இருக்கிறார் பழனி பெரியசாமி. இந்த நிலையில், லீ மெரிடியனை மீட்க அமெரிக்கவாழ் தமிழர்களின் ஒரே நம்பிக்கையாக தெரிகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.