கன்னியாகுமரியில் வழக்கறிஞர் ஒருவர் 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு சகோதரிகளை ஒரே நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்ததோடு, ஒரு நண்பரையும் கூட்டு சேர்த்து அச்சிறுமிகளை சீரழித்திருக்கிறான். இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த குமரி மாவட்டமும் அதிர்ந்துகிடக்கிறது.
தக்கலையை அடுத்த இலுப்பகோணத்தை சேர்ந்த சிவசேனா கட்சியின் மாநில செயலாளரான வழக்கறிஞர் ஏ.பி.ராஜனின் மகன்தான் வழக்கறிஞர் அஜித்குமார். பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ப்ராக்டீஸ் செய்துவரும் இவர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தக்கலை போலீசாரால் 17ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணையில், அஜித்குமாரின் பாலியல் கொடூரத்தில் இன்னும் பல பெண்களும் பாதிக்கப்பட் டிருப்பது தெரியவந்ததால், அவருடைய கூட்டாளிகளையும் போலீசார் தேடிவருகிறார்கள்.
சிறுமிகளின் உறவினர் தரப்பில் பேசினோம். "அந்த சிறுமிகளின் தாயார், கணவரைப் பிரிந்து மூலச்சலில் தாயார் வீட்டுக்கு வந்துவிட்டார். நாகர்கோவிலில் ஒரு கையுறை கம்பெனியில் பணியாற்றியபடி, கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார். வழக்கை நடத்துபவர் அஜித்குமாரின் தந்தையான வழக்கறிஞர் ஏ.பி.ராஜன். இந்த வழக்கு தொடர்பாக அந்தச் சிறுமிகளின் தாயை, அஜித்குமார் சந்தித்த நிலையில்... அச்சிறுமிகள் அவரை மாமா எனக் கூறி பழகிவந்தனர்.
கடந்த 13ஆம் தேதி இரவில் தாயார் வேலைக்கு சென்ற நிலையில், அச்சிறுமிகள் இருவரும் மாயமாகியிருக்கிறார்கள். அச்சிறுமி களை, அவர்களின் அப்பாதான் கடத்திச் சென்றுவிட்டாரென்று வழக்கறிஞர் ஏ.பி.ராஜன் மூலமாக தக்கலை போலீசில் புகாரளிக்கப் பட்டது, ஆனால் கடத்தி சீரழித்தது அஜித்குமார் தான் என்பது தெரிந்து அதிர்ச்சியாகிவிட்டது. அவனை சும்மா விடக்கூடாது'' என்றனர் ஆவேசமாக.
அஜித்குமாரை தூக்கிய தனிப்படை போலீசாரிடம் விசாரித்தபோது, "அந்த பெண்ணின் வீட்டுக்கு போகும்போதெல்லாம் சிறுமிகளுக்கு ஆடம்பர ஆடைகள், மேக்கப் பொருட்களை வாங்கிக் கொடுத்து, தாய்மாமன் ரேஞ்சுக்கு ஒரு திட்டத்தோடு பழகியிருக்கிறான்.
கடந்த 13ஆம் தேதி, இரண்டு சிறுமிகளுக்கும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் வாங்கியிருப் பதாகக் கூறி, இரவு 8 மணிக்கு அச்சிறுமிகளை அவனுடைய அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, ஆசை வார்த்தை கூறி, இரவு முழுக்க பாலியல் தொந்தரவு செய்து செல்போனில் படம் பிடித்திருக்கிறான்.
பின்னர் அச்சிறுமிகளிடம், பாபநாசத் திலுள்ள தன் நண்பனிடம் ஸ்மார்ட்போன் இருப்பதாகக் கூறி, நாகர்கோவிலுக்கு பைக்கில் அழைத்துச்சென்று, அங்கிருந்து பாபநாசத்துக்கு பேருந்தில் அனுப்பிவைத்துள்ளான்.
இந்நிலையில், 14ந் தேதி காலையில் சிறுமிகளைக் காணாமல் தாயார் போலீஸில் புகாரளிக்கச் செல்ல, பிள்ளைகளின் பெயர் கெட்டுவிடுமெனத் தந்திரமாகக் கூறி தடுக்கப் பார்த்திருக்கிறான் அஜித்குமார்.
சிறுமிகளைக் கண்டறிய இரு தனிப்படைகளை அமைத்த எஸ்.பி. ஸ்டாலின், சிறுமிகளின் தந்தையிடம் விசாரிக்க, அவர் கடத்தவில்லையென உறுதியானது. பின்னர் சுங்கான்கடை பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமராவில், அதிகாலை 4.50 மணிக்கு இரு சிறுமிகளோடு அஜித் டீ சாப்பிட்டுவிட்டு பைக்கில் நாகர்கோவில் நோக்கி செல்வது பதிவாகியிருந்தது. உடனடியாக, நண்பர் களுடன் சுற்றிக்கொண்டிருந்த அஜித் குமாரை கைது செய்ததோடு, பாபநாசத்தில் சிறுமிகளையும் மீட்டோம்.
இந்நிலையில், அஜித்குமார் ஏற் கெனவே ஒரு பெண்ணுடன் பழகி, உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மிரட்டி, பணம் நகைகளைப் பறித்துள் ளான்.
திருமணமான பெண்ணிடமும் இதே வேலையைக்காட்டி, அப்பெண்ணின் வீடியோக்களை நண்பர்களிடம் பகிர்ந்திருக் கிறான். இதேபோல் அவனது தந்தையிடம் வழக்கு விஷயமாக வரும் பல பெண் களிடமும் தொடர்புகளை ஏற்படுத்தி, தனது இச்சைகளைத் தீர்த்ததோடு, வசதியான பெண்களிடம் பணமும் பறித்து வந்துள்ளான்.
இச்சூழலில், தன்னுடன் படித்த ஒரு பெண்ணை காதலித்து, அவளை கழட்டிவிட நினைத்தபோது... அப்பெண் இவனை மிரட்ட, வேறுவழியின்றி அவளை கடந்த 17ஆம் தேதி திருமணம் செய்யவிருந்த நிலையில் அஜித்குமார் கைது செய்யப்பட... திருமணம் நின்றது.
அஜித்குமார் வேறு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறானா? என்றும், அவனுடன் பழகிய பெண்கள், அவனுடைய நெருங்கிய நண்பர்கள் பற்றியும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும், அவனுடைய பாபநாசம் நண்பனையும் தேடிவருகிறோம். கூட்டு பலாத்கார சம்பவங்களில் அஜித்குமார் டீம் ஈடுபட்டதா என்பது விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும்'' என்றார்கள்.
"சமுதாயத்தில் அஜித்குமாரை போன்ற ஒருசில வழக்கறிஞர்கள் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதால், ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் ஏற்படுகிறது.
எனவே இப்படிப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை எடுப்பதே சமூகத்திற்கு நன்மை' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.