மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந் துள்ள தருமபுரம் ஆதீனமும், திருவாவடுதுறை ஆதீனமும் பாரம் பரியமும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டவை. இந்த இரண்டு ஆதீனங்களுக்கும் இந்தியா முழு வதிலும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும், பல நூறு கோடி மதிப்புடைய சொத்துக்களும் உள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் அருகிலுள்ள பசுமையான கிராமம் குளிச்சார் கிராமம். அங்குள்ள பெரும்பான்மையான விவசாய நிலங்களும், இடங்களும் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமானதாக இருக்கிறது. அந்த நிலங்களை அந்தப் பகுதி விவசாயிகளே பல தலைமுறைகளாக விவசாயம் செய்து ஆதீனத்திற்கு உரிய குத்தகையைக் கட்டிவருகின்றனர். அப்படிப்பட்ட விவசாய நிலத்தின் ஒரு பகுதியை ஆதீனத்தில் பணியாற்றிவரும் தலைமைப் பொறுப்பாளர் ஒருவர் ரியல் எஸ்டேட் மாபியாக்களோடு சேர்ந்து வீட்டு மனைகளாக மாற்ற முயற்சித்துவருவது விவசாயிகளின் வேதனையைத் தூண்டிவருகிறது.
இதுகுறித்து குளிச்சார் கிராமத்தைச் சேர்ந்தவரும், அந்தப் பகுதி தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாள ருமான இதயச்சந்திரன் கூறுகையில், "எங்க பகுதியில் விவசாயத்தை நம்பித்தான் பிழைப்பு நடக்கிறது. இங்குள்ள பெரும்பான்மையான நிலங்கள் ஆதீனத்திற்கு சொந்த மானவை. அனைத்து சமுதாய மக்க ளிடமும் ஆதீ னத்தின் நிலங்கள் குத்தகைக்கு இருக்கிறது. அந்த நிலங்களுக்கான நாற்றாங்காலாக 5 ஏக்கர் நிலம் மெயின்ரோட்டின் ஓரமாக இருக்கிறது. அந்த நிலங்களைச் சுற்றிலும் பட்டியல் சமூகத்தவர்களின் குடியிருப்புகள் இருந்தா லும், அந்த இடத்தை வீட்டுமனைகளாக்கி னால் பல கோடிக்குப் போகும் என்பதால் அதனைக் குறிவைத்து பல்வேறு பிரச்சனை களைக் கொடுக்கின்றனர்.
75 வருடங்களுக்கு மேலாக தலித் உள் ளிட்ட வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த விவ சாயிகள் ஒற்றுமையாக சாகுபடி செய்துவந்த னர். ஒருசில வருடங்களாக ஆறு, வாய்க் கால்களில் போதிய தண்ணீர் வராததால் சாகுபடி செய்யமுடியாமல் தரிசாகப் போட்டுள்ளனர். ஆனாலும் ஆதீனத்திற்கு செலுத்தவேண்டிய குத்தகையை சரியாக செலுத்திவருகின்றனர். இதை சாதகமாக்கிக் கொண்ட தர்மபுரம் ஆதீனத்தில் வேலைபார்க் கும் முக்கிய அதிகாரி ஒருவர், ஆதீனகர்த்த ருக்கே தெரியாமல் அந்த நிலங்களை வீட்டுமனைகளாக்குவதற்கான வேலைகளைத் தொடங்கினார். முதற்கட்டமாக வயலோரத்தில் இருந்த மரங்களை வெட்ட வந்தனர். தடுத்துவிட்டோம். பிரச்சனை காவல்நிலையம் வரை போனது. சில மாதங்கள் அமைதியானவர்கள் மீண்டும் அந்த இடங்களை ஆக்கிரமிப்பு செய்ய ஜே.சி.பி. இயந்திரங்களோடு வந்தனர். விவசாயிகள் எல்லோரும் திரண்டு தடுத்துநிறுத்தி விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்கச் சென்றோம்.
அந்த சமயத்தில் தேர் தல் நடைமுறையில் இருந்த தால் புகார் பெட்டியில் போட்டுவிட்டு, பிறகு அதிகாரிகளிடம் கொடுத்தோம். ஆட்சியர்களும், அதிகாரிகளும் ஆதீனத்திற்கு நெருக்கமாக இருந்ததால் ஆதீன விவகாரம் என அதன்மீது போதிய நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தியதை சாதகமாக்கிக்கொண்டு தற்போது அடாவடியாக இறங்கி சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக்க முயற்சிக்கின்றனர். வேறுவழியின்றி போராட்டத்தில் இறங்கியுள்ளோம். நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும் எங்கள் பக்கமுள்ள நியாயத்தை உணர்ந்த ஆதீனகர்த்தர், பிரச்சனையை சரிசெய்து தருவதாகக் கூறியுள்ளார்'' என்கிறார்.
அந்த நிலத்தில் சாகுபடி செய்யும் குளிச்சார் விவசாயிகளான சீனிவாசன், பாலுஜெகநாதன், துரைராஜ் ஆகியோர் கூறுகையில், "இந்த கிராமத்திலுள்ள பலருக்கும் காடுவெட்டி பகுதியில் குத்தகை நிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் அனைத்துமே தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான மாயூரம் குமாரகட்டளை சுப்பிரமணியசாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலங்களாகும். சுமார் 75 வருடங்களுக்கு மேலாக எங்க பாட்டனார்கள் குத்தகைதாரர்களாக இருந்தனர். தற்போது நாங்கள் குத்தகை தொகைகளை சுப்பிர மணியசாமி தேவஸ்தானத்திற்கு நிலுவையில்லாமல் கட்டி வருகிறோம். எங்க குத்தகை சாகுபடி பாத்தியத்திற்கு உட் பட்ட நிலங்களை ஆதீனத்தில் தலைமை அதிகாரியாக இருந்து வரும் மணிப்பிள்ளை என்பவர் சிலரோடு கூட்டணி சேர்ந்து வீட்டுமனைகளாக்க அனைத்து வேலைகளையும் செய்யுறாங்க. நிலத்தை விட்டு வெளியேறுங் கன்னு எங்களுக்கு கொலைமிரட்டல் விடுக்குறாங்க. உங்களையெல்லாம் எப்படி வெளியேற்றுவதென எனக்குத் தெரியும் என மணிபிள்ளை மிரட்டி சட்டஒழுங்கு பிரச்சனையை உருவாக்க நினைக் கிறார். இந்த ஏரியாவுக்கு சம்பந்தமேயில்லாத சமூக விரோதிகளைக் கொண்டு மறைமுகமாக மிரட்டுகிறார். எங்க வாழ்வாதாரத்திற்கு இந்த இடத்தைவிட்டால் வேறு வழியில்லை.
ஆதீனம் விழித்துக்கொண்டு ஆதீனத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் எங்களைப்போன்ற கடைக்கோடி மக்களின் நிலைமையில் அக்கறை காட்டவேண்டும்'' என்கிறார்கள் கண்ணீர்மல்க.
ஆதீனத்தில் வேலை பார்த்துவரும் ஆதீன கர்த்தருக்கு நெருக்கமான ஒருவர் நம்மிடம் கூறுகையில், “"திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனங் களின் ஆதீனகர்த்தர்கள் சிலரது கட்டுப்பாட்டு வளையத்திற்குள் மாட்டிக்கொண்டனர். அவர் களால் அந்த வளையத்தை மீறி எதுவும் செய்திடமுடியாத கையறுநிலை. அதைத் தாண்டி அரசியலை மிஞ்சிடும் அளவிற்கு இரு ஆதீனகர்த்தர்களுக்கும் இடையே போட்டா போட்டி நீடிக்கிறது. இதை சாதகமாக்கிக்கொண்டு சிலர் அதை ஊதிப் பெரிதுபடுத்தி ஆதாயமடையுறாங்க. தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரியாரை பல்வேறு சர்ச்சைகளுக் குள் சிக்கவைத்துவிட்டனர். ஒருசில வருடங்களுக்கு முன்பு கிளம்பிய ஆபாச ஆடியோ, வீடியோ விவகாரம் இன்றுவரை அவரை ஆட்டிப் படைக்கிறது. அதனை மறைமுக மாக பெரிதுபடுத்தியவர்களே இன்று அவரிடம் பல கோடிகளை ஆதாயம் பார்க்கின்றனர்.
ஆதீனத்தின் விவசாய நிலங்கள் சமீபகாலமாக வீட்டுமனைகளாக மாறுவதும், விற் பனைக்கு போவதும் பட்டா மாறுதல் நடப்பதும் அதிகரித்துவிட்டது. சீர்காழியில் தருமபுரம் ஆதீனத் தின் கட்டுப்பாட்டிலுள்ள சட்டநாதர் கோயிலுக்குச் சொந்தமான ஈசானிய தெருவிலுள்ள 7 ஏக்கர் விவசாய நிலம், பைபாஸ் ஓரமுள்ள 7 ஏக்கர் விவசாய நிலம், திருப்புங்கூரில் கடந்த ஆண்டுவரை சாகுபடிசெய்யப்பட்ட நிலத்தை பள்ளிக்கூடம் கட்டப்போகிறோம் எனக்கூறி பிடுங்கி வீட்டுமனை களாக விற்றுவருகின்றனர். இப்படி பல நூறுகோடி மதிப்புடைய நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விட்டனர். வீட்டு மனைகளாவதைத் தடுக்கவேண் டும் என நீதிமன்றம்வரை சென்ற சீர்காழி பாலுப் பிள்ளை என்பவரை ஆதீனத்திற்கு நெருக்கமாக இருக்கும் ரியல் எஸ்டேட் மாபியா ஒருவர், தனது ஆதரவாளர் ஒருவர் மூலம் பி.சி.ஆர். வழக்கு கொடுக்கவைத்து மிரட்டியதோடு, குடும்பத்திற்கே கொலைமிரட்டல் விடுத்து ஆதீனத்தின் காலில் விழ வைத்து அவமானப்படுத்தி ஓடவிட்டனர். அந்த ரியல் எஸ்டேட் மாபியாமீது கொலை வழக்கு நடக் கிறது. அப்படிப்பட்டவரோடு ஆதீனம் எதற்காக நட்புகாட்டுகிறார்? ஆதீனம் நினைத்தால் எந்த அமைச்சரை கொண்டும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் திருஞானசம்பந்தரின் இடத்தை வாங்கி யிருக்க முடியும். ஆனால் சீர்காழி ரியல் எஸ்டேட் மாபியா மூலம் வாங்குவதுபோல வாங்கவைத்து நாடகம் நடத்தி பல தவறுகளுக்கு நியாயம் காட் டும்விதமாக ஒரு பிம்பத்தை உண்டாக்கிவிட்டனர்.
காலகாலமாக சாகுபடி செய்துவரும் நிலம் தேசிய நெடுஞ்சாலை ஓரமாகவோ அல்லது நகர்ப்புறத்தின் அருகாமையிலோ நல்ல விலைபோகும் வகையிலோ இருந்தால் அவர்களைக் குறிவைத்து ஏதாவது காரணத்தைக் கூறி இடத்தைப் பிடுங்கிடுவாங்க. பட்டா நிலம் குழி 30,000 போனால் ஆதீனத் திடம் 15,000 வீதம் பேரம்பேசி முடிப்பாங்க. ஆர்.டி.ஆர்.க்கு ஆதீனத் திடம் போனா போதும், சதுர அடிக்கு ஒரு அமௌண்ட் வாங்கு வாங்க. அந்த இடத்த பிளாட் போட்டு விற்றால் சதுர அடி குறைந்தது 700 ரூபாய்வரை போகும். முதலீடு தேவையே இல்ல. ஏக்கருக்கு எல்லா செலவும்போக ஒன்றரை கோடி கிடைக்கும். ஏழு ஏக்கர் போட்டால் 10 கோடி முதலீடே இல்லாமல், ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு போகாமல், ஆதீனத்தை வைத்து சம்பாதிக்கிறாங்க. அப்படி சம்பாதிக்கிறவர்கள் ஒரு கோடி ஆதீனத் திற்காக செலவு செய்யும்போது பொதுமக்கள் பார்வையில் வள்ளலாகக் காட்டிக்கொள்வார்கள். இதற்கு ஆதீனகர்த்தரும் உடந்தை. அப்படி ஒரு பிரச்சனைதான் குளிச்சார் கிராம விவசாயிகளுக் கும் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஒரு நபர் இடங் களாகப் பிடுங்கியதால் பிரச்சனை பெரிதாகவில்லை, குளிச்சார் கிராமமே நிலங்கள் வைத்துள்ளது. இதில் ஆதீனம் தலையிட்டு பிரச்சினையை முடிக்கவில்லை என்றால் வரலாற்றுப்பிழை செய்தவராகக் கருதப்படுவார்''’என்கிறார் ஆதங்கமாக.
இதுகுறித்து தருமபுரம் ஆதீனத்திடம் கேட்க அவர்களை தொடர்புகொண்டோம், நமது அழைப்பை ஏற்கவில்லை. ஆதீனத்தின் தலைமை சூப்பிரண்ட் மணிப்பிள்ளையிடம் கேட்டோம், "குளிச்சார் கிராமத்தில் ஆதீனம் கட்டுப்பாட்டி லுள்ள குமாரகட்டளைக்குச் சொந்தமான 250 ஏக்கர் நிலம் குத்தகைதாரர்களிடம்தான் இருக்கு. அதுல இந்த ஐந்து ஏக்கர் 20 வருடங்களாக சாகுபடி செய்யாமல், முறையாகக் குத்தகை கட்டாமல் போட்டிருந்தாங்க. காடாக இருந்த அந்த நிலத்தை ஒருவர் சாகுபடிக்கு கேட்டார். பிறகு அவர் முடியாது எனப் போய்விட்டார். பிறகு சென்னையை சேர்ந்த ஒருவர் வாங்கினார். அவர் ஆக்கிரமிப்புகளை அகற்றப் போனபோது பிரச்சினை செய்யுறாங்க. அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை. நான் முன்னின்று செய்த தால் என்மீது பழிபோட்டு காவல்நிலையம்வரை பிரச்சனையாகிக் கிடக்கு''’என்கிறார்.