கிருஷ்ணகிரி பஸ் நிலையம் பின்புறமுள்ள, பல ஏக்கர் நிலங்களை போலியாக ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் மீது தங்கதுரை என்ற சமூக ஆர்வலர், மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறையிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகாரளித்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக தங்கதுரை மற்றும் மதன் கூறுவது, "நாமக்கல்லையடுத்த பட்டறைமேடு, கங்கா நகரில் வசித்து வருகிறேன். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மதியழகன். இவர் தி.மு.க.வின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராகப் பதவி வகிக்கிறார். மேலும், தமிழ்நாடு காவல்துறையின் ஊர்க்காவல் படைப்பிரிவின் தலைவராகவும் இருக்கிறார்.

ss

இவரின் தந்தை தேவராஜ் வருவாய்த்துறையில் பணியாற்றியவர். எம்.எல்.ஏ. மதியழகன் கிருஷ்ணகிரி மாவட்டம் அக்கலாபுரம், கொத்தப்பேட்டா கிராமத்தில் தனது மகன் கௌஷிக், மகள் ஷிவானி, மனைவி விஜயா பெயரில் கல்குவாரி மற்றும் எம் சாண்ட் நிறுவனத்தை நடத்திவருகிறார். அதே பகுதியில் மாம்பழக்கூழ் தயாரிக்கும் கம்பெனியும் உள்ளது.

அக்கலாபுரம் கொத்தபேட்டா கிராமத்திலுள்ள அனைத்து நிலங்களும் இனாம் நிலங்களாகும். அரசு இதனை ரயத்துவாரி முறைக்கு மாற்றும் பொருட்டு, தமிழ்நாடு இனாம் தோட்டங்கள் (அழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம் 26-ன் 1963 சட்டத்தை அமல்படுத்துகிறது. இந்த சட்டத்தின்படி யார் யாருக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், எந்த வகையான நிலங்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கக்கூடாது என்றும் தெளிவாக விவரிக்கின்றது.

Advertisment

எஸ்.எல்.ஆர். ஆவணப்படி அரசு புறம்போக்கு நிலமான சர்வே எண்கள் 87/1, 2, 3இல் உள்ள 21.57 சீகல்குட்டை மலையானது, குட்டை மலை என்றும், சர்வே எண் 78/1, 2, 3, 4, 5இல் உள்ள 16.43 ஹெக்டேர் வால்குட்டை மலையானது, குட்டை குன்று என்றும் பதியப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ. மதியழகன் நண்பரான முக்தாரின் குடும்பத்தினர், மதியழகன் தந்தையை பயன்படுத்தி, புறம்போக்கு நிலத்திற்கே ரயத்துவாரி பட்டா வாங்கி, ஆரம்பத்தில் கல் உடைத்து, பின்னர் மதியழகனோடு கூட்டு சேர்ந்து, தனிப்பட்டாவும் வாங்கி விட்டார். 2017-ல் மதியழகன் தனது பெயரிலும், மனைவி, மகள், மகன் பெயரிலும், சொத்தை மோசடி செய்து கிரையம் வாங்கிவிட்டார்.

அதேபோல சொத்தை கிரையம் வாங்குவதற்கு முன், முக்தார் குடும்பத்தினர் பெயரில் கல்லை வெட்டியெடுப்பதற்கும், கல்லை அரைப்பதற்கும் அரசிடம் அனுமதி பெற்றுள்ளனர். இதன்மூலம் வந்த வருமானத்தை மறைத்து, பெரிய அளவில் வருமான வரி ஏய்ப்பும், கனிம வளச் சுரண்டலும் நடந்துள்ளது.

Advertisment

ss

மேலும் சர்வே எண் 87, 28-ல் உள்ள புறம்போக்கு நிலங்களை, 2017-ல் கிருஷ்ணகிரி ஆட்சியராக இருந்த கதிரவன் துணையுடன், ஒரேநாளில் பதிவு செய் துள்ளனர். பத்திரப்பதிவில் சார்பதிவாளர் துணையுடன் வெறும் பட்டாவையும், சர்வே எண்களுக்கு தொடர்பே இல்லாத வற்றையும் காட்டி, 29.44 ஏக்கர் நிலத்தை மதியழகன் தனது மனைவி விஜயா பெயரிலும், மேலும் இதே தாய் பத்திரம் 2647/1947-ஐ பயன்படுத்தி விஜயா பெயரில் 4.86 ஏக்கர் இடத்தையும் முறைகேடாகக் கிரயம் செய்துள்ளார்.

மதியழகன் மகள் ஷிவானி பெயரில் சர்வே எண் 103/1.2 உள்ள 7.33 ஏக்கர், சர்வே எண் 102/2ல் 10.65 ஏக்கர், சர்வே எண் 101-ல் 2.84 ஏக்கர், சர்வே எண் 78/1ஏ, 2, 3, 4, 5, 10 ஏக்கர் நிலத்தையும், எம்.எல்.ஏ. மதியழகன் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளார். முக்தார் குடும்பத்தினர் கிருஷ்ணகிரியிலுள்ள கூட்டுறவு நிலவள வங்கியிலிருந்து கடன் தொகையாக 3,89,000 ரூபாயை கட்டி மீட்டுள்ளனர்.

1962 முதல் 1972 வரை அக்கலாபுரம் -கொத்தப்பேட்டா கிராமத்தின் மொத்த வரைபடத்தில், சர்வே எண் 87 சிக்கல் குட்டை என்றும், சர்வே எண் 78 வால்குட்டை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், மலை அரசு புறம்போக்கு என்றும், சர்வே எண் 78 வால்குட்டை என்றும், 1991 வரை ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன.

மதியழகனின் நண்பர் முக்தார் குடும்பத்தினர் உச்சவரம்பு நிர்ணயச் சட்டப்படி குடும்பச் சொத்தாக முப்பது ஏக்கர் வரை வைத்துக்கொள்ளலாம்.

ஆனால் குடும்பத்திலுள்ள மைனர்களையெல்லாம் பெரியவர்களாகக் காட்டி மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக எம்.எல்.ஏ. மதியழகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளித்துள்ளேன்'' என்றார்கள்.

மதியழகன் மோசடியாகச் சேர்த்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலங்களைக் காப்பாற்றவே 2019-ல் அப்போதைய தி.மு.க. மா.செ. செங்குட்டுவன் மூலம் தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் படிப்படியாக தி.மு.க.வில் தன்னை வளர்த்துக்கொண்டார்.

அதுவரை பணிவாக இருந்த மதியழகன், தன்னை வளர்த்துவிட்ட செங்குட்டுவனையே பின்னுக்குத் தள்ளினார். தற்போது இவரை லோக்கல் கட்சியினரே மதிப்பதில்லை என்கிறார்கள்.

இதுகுறித்து கருத்தறிய எம்.எல்.ஏ. மதியழகனை அவரது செல்போனில் தொடர்புகொண்டோம். அவர் போனை எடுக்கவில்லை. அவரது விளக்கத்தை அளித்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.