கோலிவுட்டை நிலைகுலைய வைத்திருக்கிறது வருமானவரித்துறையின் அதிரடி ரெய்டு. தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் சினிமா ஃபைனான்ஸியருமான மதுரை அன்புச்செழியன், கோலிவுட்டில் கோலோச்சும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல்ராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு ஆகிய சினிமா பிரபலங்களை குறிவைத்து 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில் நிலைகுலைந்து போயிருக்கிறது தமிழ் சினிமா. இது உதயநிதிக்கு வைக்கப்பட்ட குறி என்ற உண்மையை ரகசியமாகச் சொல்கிறார்கள் ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையினர்.
அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள்தான் இந்த ரெய்டில் அதிகம் சிக்கியிருக்கிறது. கணக்கில் காட்டப்படாத பல லட்சம் கோடிகள் மதிப்புடைய சொத்து ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறது வருமானவரித்துறை.
ஏற்கனவே, கடந்த 2020-ல் நடிகர் விஜய்யின் பிகில் படத்தை விநியோகம் செய்ததில் அன்புச்செழியன் வரி ஏய்ப்பு செய்ததாகக் கண்டறிந்த விவகாரத்தில் அவருக்கு எதிரான ரெய்டை வருமானவரித்துறை நடத்திய போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு முறையான பதிலை அன்புச்செழியன் தரவில்லை. இந்த நிலையில், 2 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து வருமானவரித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது,”"அன்புச்செழியன் உள்பட முக்கியமான 5 தயாரிப்பாளர்களை குறி வைத்து தனித்தனியாக சோதனை நடத்தத்தான் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், ஒரே சமயத்தில் அனைவரையும் குறி வையுங்கள் என டெல்லியில் இருந்து உத்தரவு வந்ததால், அதற்கேற்ப திட்டமிட்டு ஒரே சமயத்தில் 200 அதிகாரிகள் களத்தில் குதித்தனர். இதில், இதற்கு முன்பு சினிமா ரெய்டுக்குள் செல்லாத அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டு ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த ரெய்டுகளின் சூத்ரதாரி தமிழகம் மற்றும் புதுச்சேரி யின் வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரா.ரவிச்சந்திரன். கடந்த ஜூன் மாதம்தான் இந்த பதவியில் இவர் நியமிக்கப்பட்டார். வருமானவரித்துறை தொடர்பான பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்தவர். பணமோசடி தடுப்புச் சட்டம், எல்லை தாண்டிய வரிவிதிப்பு உள்ளிட்ட விவகாரங் களுக்காக நியமிக்கப்பட்ட பல குழுக்களில் இடம்பெற்றவர்.
செபியின் ஒருங்கிணைந்த சந்தை கண்காணிப்புகள் திட்டத்தை ஒன்றிய அரசு கட்டமைத்தபோது எடுக்கப்பட்ட முடிவுகளில் ரவிச்சந்திரனின் பங்களிப்பு அதிகம். கிரிப்டோ கரன்சி, பிட்காயின் பரிவர்த்தனைகள் தொடர்பான விவகாரங்களை அதிகம் கையாண்டு வெளியிடப்படாத பணத்தை அதிக அளவில் வெளிக்கொண்டு வந்தவர் ரவிச்சந்திரன்.
அவர் பொறுப்பேற்றதுமே விவாதித்த விவகாரங்களில், அரசியல்வாதிகளுக்கும் சினிமா துறையினருக்கும் இடையே உள்ள பணப்பரிவர்த்தனைதான் மிக முக்கியமானது. அதில்தான் சீரியஸ் காட்டினார். அதன் விளைவுதான் இந்த அதிரடி மெகா ரெய்டு. இது இத்துடன் முடியாது. சில அரசியல் பிரபலங்களும் தொழிலதிபர்களும் குறி வைக்கப்பட்டுள்ளனர்'' என்று விவரிக்கிறார்கள்.
வருவாய் புலனாய்வுத் துறை தரப்பில் விசாரித்த போது,’"தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் தமிழ்த் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் தயாரிக்கப்படும் 90 சதவீத தமிழ் சினிமாக்களின் விநியோக உரிமை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம்தான் கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக, வருமானவரித்துறையின் தலைமை ஆணையருக்கு பல தயாரிப்பாளர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதில், சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம்-2 படம் தொடர்பானது.
அதாவது, சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் சுமார் 50 கோடி கடன் பெற்றிருக்கிறார் கமல்ஹாசன். அதை குறிப்பிட்ட காலத்தில் திருப்பித் தர இயலவில்லை. அதனை அடைப்பதற்காக, விக்ரம்-2 படத்தின் தமிழக விநியோக உரிமையை அன்புச்செழியனிடம் விற்க சம்மதித்துள்ளார் கமல். ஆனால், இந்த படத்தின் விநியோக உரிமையைப் பெறுவது தொடர்பாக கமல்ஹாசனிடம் பேசியுள்ளார் உதயநிதி. அப்போதுதான், அன்புச்செழியனிடம் பெற்ற கடன், அதற்காக விநியோக உரிமை கொடுக்க சம்மதித்தது போன்ற விபரங்களை கமல் சொல்லியிருக்கிறார். "அன்புச் செழியனிடம் நீங்கள் பெற்ற கடன் பாக்கியை நான் ஏற்கிறேன். அதற்கு பதிலாக விநியோக உரிமையை எங்களுக்குத் தரவேண்டும்' என விவாதித்திருக்கிறார் உதயநிதி. இது குறித்து அன்புச் செழியனிடம் கமல் விவாதிக்க, உதயநிதியை எதிர்த்து பிசினெஸ் செய்ய விரும்பாத அன்புச் செழியன் விட்டுக் கொடுத்துவிட்டார். இதனையடுத்து விக்ரம்-2 படத்தின் விநியோக உரிமை ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
"கமல் பெற்ற கடன் தொகை, அன்புச்செழியனுக்கு ஹாட் கேஷாக உதயநிதி தரப்பில் செட்டில் செய்யப் பட்டது' என்பதாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சிலர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித் திருக்கிறார்கள். இது மாத்திரமல்லா மல், ஆளுந்தரப்பினர் சிலரும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் கணக்கில் காட்டப்படாத தங்களின் பணத்தை முதலீடாக கொடுத்து வைத்துள்ள தகவலும் கிடைத்திருக்கிறது.
இதற்கான ஆதாரங்களை எடுப்பதற்கான பின்னணிகளில்தான் ரெய்டுகள் நடத்தப்பட்டன. ரெய்டு களில் சிக்கிய ஆவணங்களை ஆராய்ந்த பிறகே இனி யார் சிக்குவார்கள் என தெரியும். அதன் மூலம் உதயநிதியையும் தி.மு.க. தரப்பினரையும் குறி வைப்பது தான் ரெய்டின் நோக்கம்'' ” என்று சுட்டிக் காட்டினார்கள்.