முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகனை தரிசிக்க, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு ஆன்மீகப்பயணமாக வருகிறார்கள். இப்படி வரக்கூடிய முருக பக்தர்கள், நடைபாதையில் நடந்து மலையேறியும், வின்ச் மற்றும் ரோப் கார் மூலமாகவும் சென்று முருகனை தரிசித்துவிட்டுச் செல்வது வழக்கம்.

ff

பெரும்பாலான முருக பக்தர்கள், ரோப் காரில் மலைக்குச் சென்று முருகனை தரிசிப்பதையே விரும்புகிறார்கள். அதனால் எப்பொழுதுமே ரோப் காருக்காகக் காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பழைய ரோப் கார் பெட்டிகளுக்குப் பதிலாக, புதிய ரோப் கார் பெட்டிகளை (எட்டுப் பெட்டிகள்) மாற்றியிருக்கிறார்கள். முருக பக்தர்களின் வசதிக்காக மற்றொரு ரோப் கார் சேவையைத் தொடங்குவதற்கான பணிகளும் வேகமாக நடந்துவருகின்றன.

Advertisment

இந்நிலையில், கொடைக்கானலி-ருந்து பழனி மலைக்கு புதிய ரோப் கார் இயக்கும் திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. இந்தியா முழுக்க 18 இடங்களை ரோப் கார் வசதியை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு தேர்ந்தெடுத்ததில், இந்த வழித்தடமும் ஒன்று. ரோப் கார் திட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்றால், அப்பகுதியிலுள்ள மலைகளின் தன்மை, காலநிலை, இயற்கை இடர்பாடுகள் போன்ற பலவற்றையும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். இதற்கென ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு அங்கு வந்து மலைப்பகுதிகளைப் பார்வையிட்டு ஆலோசனை நடத்தியது. இந்தத் திட்டத்துக்கென மத்திய அரசு சுமார் 450 கோடி வரை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த ரோப்கார் திட்டம், கொடைக்கானலி-ருந்து 12 கி.மீ. தொலைவில் தொடங்கி, பழனி மலை வரை அமைக்கப்படும். இதற்கான பணிகள் ஆறு மாத காலங்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தால், தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவதோடு, பழனிக்கு வரும் பக்தர்கள் கூட்டமும் அதிகரிக்குமென்பதால், மிகவும் பயனுள்ள திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இத்திட்டத் துக்கு பொதுமக்கள் மத்தில் பெரிய வரவேற்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, ஏற்கெனவே செயல்பாட்டிலிருக்கும் ரோப் கார் இயக்கத்தில் அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்பக்கோளாறுகள், விபத்துகள் காரணமாக அப்பகுதி மக்களிடையே அச்சமும் ஏற்படுகிறது.

"கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரோப் காரில் உள்ள நான்கு பெட்டிகளில், பெட்டிக்கு நான்கு பேர் வீதம் 16 பேரை ஏற்றிக் கொண்டு பயணிக்கையில், ரோப் காரில் இருந்த கடைசிப் பெட்டி திடீரென பழனி மலைப் பாறையில் மோதியது. அதைக்கண்ட பக்தர்கள் 'முருகா!, முருகா!' எனச் சத்தம் போடவே, உடனே ஊழியர்கள் ரோப் காரின் வேகத்தைக் குறைத்து மேலே ஏற்றிவிட்டு, ரோப் கார் செல்லும் பாதையில் இடையூறாக இருந்த பாறையை உடைத்துச் சமப்படுத்தினார்கள். அதோடு, புதிய ரோப் கார் பெட்டிகளைக் கழற்றிவிட்டு மீண்டும் பழைய ரோப் கார் பெட்டிகளையே மாட்டியிருக்கிறார்கள்.

Advertisment

பழைய பெட்டிகளைவிட புதிய பெட்டிகள் உயரமாக இருந்ததால் தான் பாறைகளில் உரசிச் சென்றிருக்கிறது. மீண்டும் பெட்டிகளை மாற்றியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு ரோப் கார் அறுந்து விழுந்து திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆவின் அதிகாரி தர்மராஜ் உள்பட ஆறு பேர் இறந்திருக் கிறார்கள். ரோப் கார் பெட்டி களைப் புதிதாக வாங்கும்போது, அதன் அளவுகளைச் சரியாகக் கவனித்து வாங்கியிருக்க வேண் டும். ரோப் கார் கூடுதல் உயரத்தில் வாங்கிய தால்தான் பக்தர்களின் எடை தாங்காமல் பாறை யில் உரசியிருக்கிறது. தற்போது, பக்தர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் தான் மலைக்குச் சென்று வருகிறார்கள். அதுபோல் தற்போது பழைய ரோப் கார் அருகிலேயே மற்றொரு ரோப்கார் பணியும் தொடங்கி இருக்கிறார்கள். ரோப் காரின் உயரத்தால் பழனி மலைக்கு சேதம் ஏற்படாதபடி இரண்டாவது ரோப் கார் சேவை இருக்க வேண்டும். மீறி சேதப்படுத்தினால் போராட்டத்தில் குதிப்போம்'' என்கிறார் இந்து வியாபாரிகள் நலச் சங்கத்தின் மாநிலச் செயலாளரான பழனிஜெகன்.

இது சம்பந்தமாக பழனி கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் விளக்கம் கேட்க செல்போனில் முயன்றும் பிடிக்க முடியாததால், கோவில் அலுவலர்கள் சிலரிடம் கேட்ட போது, "பழைய ரோப் கார் பெட்டிகளின் நிறம் மங்கிப் போனதால் தான் புதிய ரோப்கார் பெட்டிகளை கமிட்டி மூலம் வாங்கினார்கள். அதில் உயரம் கூடுதலாக இருந்ததால் தான் பாறையில் உரசியது. அதைச் சரிப்படுத்திக் கொடுக்கச் சொல்லியிருக்கிறோம். அதுவரை, பழைய ரோப் கார் பெட்டியையே மாட்டியிருக் கிறோம். இதனால் பக்தர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. இரண்டாவது ரோப் கார் பணியும் விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. அதில் ஒரு பெட்டிக்கு 30 பேருக்கு மேல் மலைக்கு போய் வருமளவுக்கு வெளிநாட்டு நவீன தொழில்நுட்பத்துடன் வாங்க இருக் கிறோம்'' என்று கூறினார்கள். முழுப்பாது காப்போடு வரட்டும் ரோப் கார் திட்டம்!

-சக்தி