சென்னையின் 44-ஆவது புத்தகத் திருவிழா, கொரோனா கால நெருக்கடிகளுக்கு நடுவிலும் களை கட்டிக்கொண்டிருக்கிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் 700 அரங்குகள் இடம் பிடிக்க, அவற்றில் 15 லட்சம் தலைப்புகள் கொண்ட புத்தகங்கள் வரிசைகட்டி நின்று வருபவர்களை வசீகரித்து வரவேற்கின்றன. முகக்கவசம் அணியாதோருக்கு அதைக் கொடுத்துதான் கவனமாக உள்ளே அனுமதிக்கிறார்கள்.

மார்ச் 9-வரை அறிவுத் திருவிழா நடைபெறுகிறது. பிரபல எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் நூலாசிரியர்களும் சங்கமிக்கும் படைப்பாளர்களின் சந்திப்புக் களமாகவும் இந்தத் திருவிழா அமைவது சுவாரஸ்யமான அனுபவங்களை அரங்கேற்றி வருகிறது.

bookfair

இதயத்துக்குக் கவரி வீசும் சங்க இலக்கியம் முதல், அறிவுக்கு ஆனந்தம் தரும் நவீன இலக்கியம் வரை, சகலவித நூல்களும் இங்கே குவிந்துகிடக் கின்றன. இதுபோல் குழந்தைகள், முதல், மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் முதியவர்களுக்கான படைப்புகள் வரை இங்கே ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. அறிவியலை ஆலாபிக்கும் படைப்பு களும் ஆன்மிகக் கீர்த்தனை செய்யும் நூல்களையும் அதிகம் மொய்க்கிறார்கள் பலரும்.

Advertisment

வழக்கமாக வாசகர்களின் அறிவுப்பசிக்கு விருந்தளிக்கும் நம் நக்கீரன் குழும அரங்குகளில், இந்த வருடத்தின் சிறப்பு வெளியீட்டு வரிசையில் உள்ள, "ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள்' , "கலைஞரும் இலக்கியமும்' , "சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்' , "நாயகன்' , "மாண்புமிகு முதல்வர்கள்', "ஆன்மீக அரசியல்', "திப்பு வரலாறு' உள்ளிட்ட படைப்புகள் வாசகர்களின் கவனத்தைப் பரவசமாய்க் கொத்தி இழுத்து வருகின்றன. அதுபோல் நக்கீரன் குழும பிளாக் பஸ்டர் படைப்புகளான நக்கீரன் ஆசிரியரின் "வீரப்பன்', தொ.திருமாவின் "அமைப்பாய்த் திரள்வோம்', ராமானுஜ தாத்தாச்சாரியாரின் "இந்து மதம் எங்கே போகிறது?' கோபிநாத்தின் "நிமிர்ந்து நில்', வலம்புரி ஜானின் "வணக்கம்', கல்கியின் "பொன்னியில் செல்வன்' உள்ளிட்ட நூல்களும் வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வருகின்றன.

உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்களும், இலக்கியவாதிகளும் நக்கீரன் அரங்கிற்கு ஆர்வமாய் வந்து செல்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இந்தமுறை புதிய புதிய கவிதை நூல்களின் அரங்கேற்றத்தையும் நம்மால் அறிய முடிந்தது. வாசகர்களின் ஆதரவால்தான் சோதனைகளுக்கு நடுவிலும் சாதனை படைக்கிறது புத்தகத் திருவிழா என்கிறார்கள், அதை வெற்றிகரமாக நடத்திவரும் பப்பாசி அமைப்பினர்.

புத்தகத் திருவிழா, சென்னை மாநகரையே அறிவுமணம் கமழ வைத்துக்கொண்டிருக்கிறது.

Advertisment