குற்றவாளிகளைக் கைது செய்வதைவிடவும் மிகச்சிக்கலான விஷயம் நீதிமன்றத்தில் அவர்கள் செய்த குற்றங்களை நிரூபிப்பது. எத்தனையோ வழக்குகளில் கையும் களவுமாக சிக்கிய குற்றவாளிகள், குற்றம் சரிவர நிரூபிக்கப்படாத தால் தப்பியிருக்கிறார்கள். மனைவியை பாம்பை ஏவி கொலைசெய்த குற்றவாளியின் குற்றத்தை நிரூபிக்க, கேரள போலீசார் பரீட்சார்த்தமான சோதனை நடத்தி, அதில் சாதித்துமிருப்பது கேரளத்தில் பரபரப்பு பேச்சாகியிருக்கிறது.
கொல்லம் மாவட்டத்தின் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த ரப்பர் எஸ்டேட் ஓனர் விஜயசேனன் சற்று குறைபாடுள்ள தனது ஒரே மகள் உத்ராவை பத்தனம்திட்டா அரூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பே தனது மகளின் குறைபாடு பற்றி சூரஜின் குடும்பத்தாரிடம் தெளிவாக தெரியப்படுத்திய பிறகுதான் அவர்களின் சம்மதத்தோடு திருமணத்தைத் தனது செலவில் நடத்தியிருக்கிறார்.
திருமணத்தின்போது 1 கிலோ தங்க நகைகள், 5 லட்சம் ரொக்கம், 70 சென்ட் நிலம், கார் மற்றும் சூரஜின் தங்கையின் படிப்பிற்கான முழுச்செலவு என்று வரதட்சணையாக வாரிக் கொட்டியிருக்கிறார் விஜயசேனன். லௌகீகத்தில், தாம்பத்ய உறவில் அத்தனை ஈடுபாடு இல்லாதவள் உத்ரா. இதனால் ஆத்திரமான சூரஜ், திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு விபரீத முடிவு எடுத்திருக்கிறார்.
முதல்முறை தன் வீட்டில் வைத்தே மனைவியை பாம்பை ஏவி கொல்ல முயன்று தோற்றார். இரண்டாம் முறையாக விஷத்தன்மை கொண்ட பாம்புடன் உத்ராவின் வீட்டிற்கே போன சூரஜ் இரவு அங்கே தங்கி பாம்பை ஏவி மனைவியைக் கொலை செய்திருக்கிறார்.
சிகிச்சை பலனின்றி மரண மடைந்த பிறகே உத்ராவின் பெற்றோருக்கு சூரஜால் ஏவிவிடப்பட்ட பாம்பு தான் தங்களின் மகளைக் கொத்தியிருக் கிறது என்ற விஷயமும் அவர்மீது சந்தேகமும் வந்திருக்கிறது. கொல்லம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக் கிறார்கள். அதையடுத்து நடந்த போலீஸ் விசாரணையின்போது, சூரஜின் திட்டமும் ஏற்கனவே அவன் பாம்பை ஏவிவிட்டு உத்ராவை கடிக்கவிட்ட சம்பவம் உட்பட அனைத்தையும் அவன் ஒப்புக்கொள்ள, போலீசார் சூரஜைக் கைது செய்திருக்கிறார்கள். கேரளாவை உலுக்கிய இந்தச் செய்தியை 2020, ஜூன் 6-9 நக்கீரன் இதழில், "சொத்தை அபகரிக்க மனைவியைக் கொன்ற கணவனின் விஷமத்தனம்!'’என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
இந்த வழக்கில் தற்போது போலீசாரால் நடத்தப்பட்ட பரீட்சார்த்தமான சோதனை தான் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
கொல்லம் ரூரல் எஸ்.பி.யான ஹரிசங்கர், கொலையாளிக்கு தண்டனை வாங்கித் தரவேண்டுமென்று தீவிரமாக ஈடுபட்டிருக் கிறார். சம்பவம் தொடர்பாக பல மெட்டீரி யல் எவிடென்ஸ்கள் போலீசாரால் சேகரிக்கப் பட்டாலும் பாம்பை ஏவியது சூரஜ்தான் என்பதற்கான சாட்சி அவர்களிடம் இல்லை. ஆனால் சம்பவத்தின் போது உத்ராவுடன் சூரஜ் மட்டும்தான் இருந் தது சாட்சிகளால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கெனவே சூரஜ், ஐந்து வயதுடைய 0.6 செ.மீ உயரமுள்ள பற்களைக் கொண்டதும் 152 செ.மீ நீளமுள்ள விஷப்பாம்பை சுரேஷ் என்பவரிட மிருந்து வாங்கியிருக்கிறான். இந்த வழக்கில் நடந்ததை உறுதிப்படுத்த மாறுபட்ட முறையில் கட்டிலில் படுத்திருந்த பெண்ணை பாம்பு எவ்வாறு கடித்திருக்கும் என்பதை சோதனை செய்துபார்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் கொல்லம் போலீசார். இதற்காக கொல்லம் ரூரல் க்ரைம் பிராஞ்ச் டி.ஒய்.எஸ்.பி. அசோகன் தலைமையிலான போலீசார், வனத்துறையினர் மற்றும் பாம்பு ஆராய்ச்சியாளரான மவீஷ்குமார் உள்ளிட்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பட்டனர்.
உத்ரா படுத்திருந்த ரூமைப் போன்று ஒரு இடத்தில் தனியாக ரூம் செட் செய்து அதில் கட்டிலும் போடப்பட்டது. உத்ரா உயரம்கொண்ட பொம்மை உருவாக்கப்பட்டு அதன் கைகளில் கோழிச் சதையை இணைத்துக் கட்டியிருக்கிறார்கள். ஒரிஜினல் விஷப் பாம்பைக் கொண்டு வந்தவர்கள் அதன் பற்களின் உயரங் களை முதலில் அளவெடுத்துக் கொண்டனர். பின்பு அந்தப் பாம்பை சாதாரணமாக பொம்மையைக் கடிக்கவிட்டிருக்கிறார்கள். இயல்பாகவும் சாதாரண நிலையில் இருக்கும் பாம்பு, ஒருவரை எவ்வாறு கொத்துமோ அதுபோன்று பொம்மையின் கையில் கொத்தியிருக்கிறது. உடனே அந்தக் கடிக் காயத்தின் தன்மை, ஆழம் போன்றவற்றைக் குறித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பின் அந்தப் பாம்பை சீண்டி ஆத்திரப்படவைத்த பின் கடிக்க விட்டபோது கடிக் காயத்தின் தன்மை, காயத்தின் ஆழம் போன்றவற்றை மார்க் செய்திருக்கிறார் கள். இரண்டையும் ஒப்பிட்டதில் விஷப் பாம்பை நோகவைத்து சீண்டிய பின்பு அது கொத்தியதைப் போன்ற காயமும் ஆழமும், உத்ராவின் கைகளில் பதிந்திருந்ததோடு ஒத்துப்போயிருக்கிறது. அதன்பின் இந்த ஆய்வின் அறிக்கையையும், வீடியோ ஆதாரத்தையும் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல்செய்திருக் கிறார்கள் கொல்லம் ரூரல் க்ரைம் ப்ராஞ்ச் போலீசார்.
நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப் பட்ட இந்த வீடியோ ஆதாரம் பல மாதங்களுக்குப் பின்பு தற்போது போலீசாரால் வெளியிடப்பட்டதுதான் வைரலாகி கேரளாவையே பரபரப்பாக திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இதுமாதிரியான சோதனை சம்பவம் ஒரு புதிய விஷயம். இந்தியாவின் குற்ற வரலாற்றில் வேறு எங்கும் இது போன்றதொரு பரீட்சார்த்தமான சோதனை நடத்தப்பட்டதில்லை என்கிறார்கள் கேரள போலீசார்.