கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதியில் இந்துக்கள் 48 சதவிகிதமும், கிறிஸ்தவர்கள் 46 சதவிகிதமும், முஸ்லிம்கள் 4 சதவிகிதமும் உள்ளனர்.
11-ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் 2021-ல் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸின் விஜய்வசந்த்திடம் 1,34,374 வாக்குகள் வித்தி யாசத்தில் தோல்வியடைந்தார்.
தி.மு.க.வில் சுமார் 35 ஆண்டுகாலமாக பயணித்த பசிலியான் நசரேத், அங்கு எம்.எல்.ஏ. சீட்டும் இல்லை, கட்சியில் முக்கிய பொறுப்பும் தரவில்லை என்ற அதிருப்தியில் 3 மாதத்துக்கு முன் அ.தி.மு.க. வில் இணைந்து சீட் வாங்கி களத்தில் நிற்கிறார். துபாயில் மாதம் 8 லட்சம் சம்பளத்தில், பிரபல கம்பெனியொன்றின் சி.இ.ஓ.வாக இருந்த மரியம் ஜெனிபர், நாம் தமிழர் பெண் வேட்பாளராக களத்தில் குதித்திருக்கிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்துக்கு அவரது தந்தையின் புகழும் செல்வாக்கும் சாதகம். அவரைப் போலவே எப்போதும் சிரித்த முகத்துடன் வலம்வருகிறார். காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் அசைன்மெண்ட் வகுத்து பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக் குத் தேவையான வைட்டமின் "ப'வை தாராளமாகக் கொடுத்துவருகிறார் விஜய்வசந்த்.
"எந்த பகுதியில் ஓட்டுகள் குறைவாகக் கிடைக்கிறதோ அந்த பகுதி பொறுப்பாளரின் கட்சிப் பதவி பறிக்கப்படும்' என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்த பிறகும், கிறிஸ்தவர்கள் அதிகமாகக் காணப்படும் மந்திரி மனோதங்கராஜின் மே. மாவட்டத்தில் கோஷ்டி யுத்தத்தால் தி.மு.க.வினர் சுணக்கம் காட்டிவந்தனர். பிரச்சாரத்துக்கு வந்த கனிமொழி எம்.பி. சம்பந்தப் பட்ட நிர்வாகிகளை எச்சரித்திருக்கிறார்.
நான்குவழிச் சாலை திட்டத்தால் அதிருப்தியிலிருக்கும் மக்களிடம், "ஒன்றிய பா.ஜ.க. அரசு நிதி ஒதுக்காததினால்தான் அந்த திட்டம் அப்படியே கிடக்கிறது. இதற்காக எம்.பி. பலமுறை பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். துறை மந்திரியிடம் 14 முறை மனு கொடுத்திருக்கிறார்' என்பதை காங்கிரசார் ஆதாரத்துடன் மக்களிடம் விளக்கிவருகின்றனர்.
தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் ஓட்டுகளில் சரி பாதியும், கிறிஸ்தவர்கள், மீனவர்கள், முஸ்லிம், தலித் ஓட்டுக்கள் என அனைத்து மாக தன்னை கன்னியாகுமரியில் கரைசேர்க்கும் என முழுநம்பிக்கையோடு இருக்கிறார் விஜய்வசந்த்.
"இதுதான் என்னுடைய கடைசி தேர்தல் என்று பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலத்தைச் சுட்டிக்காட்டி, மக்களிடம் அனுதாப வாக்குகளைத் தேடும் பொன். ராதாகிருஷ்ணனிடம், 10 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சியில் இந்த மாவட்டத்துக்கு ஒன்றிய அரசு கொண்டுவந்த ஒரு திட்டத்தை உங்களால் கூறமுடியுமா?' என்ற கேள்வியை நடுநிலையாளர்கள் வைக்கிறார்கள். தொடர்ந்து பா.ஜ.க.வில் பொன்னாரே போட்டியிடுவதால் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தியின் ஆதரவாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, இளைய தலைமுறையினரின் மத்தியிலும் அதிருப்தி என்கின்றனர் கட்சியினரில் சிலரே.
2019 தேர்தலில் சுமார் 75,000 மீனவர்கள் ஓட்டை அவர்களுக்கே தெரியாமல் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியது தேர்தலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கோபம் பொன்னாருக்கு எதிராக மீனவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. அ.தி.மு.க.வுடன் நல்லதொரு கூட்டணி அமையும். சீட் வாங்கிவிட வேண்டுமென்று கனவுடன் இருந்தனர் மாஜி பச்சைமால், மே.மா.செ. ஜான்தங்கம், எக்ஸ். மா.செ.க்கள் அசோகன், சிவசெல்வ ராஜன் போன்றோர். பசிலியான் அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தி இப்போதும் தொடருகிறது.
மீனவரான பசிலியான் நசரேத் கடற்கரை மற்றும் உள்நாட்டு மீனவர்கள் ஓட்டு தனக்குக் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறார். ஆனால் மீனவர்கள் மத்தியிலோ "மீனவர் ஓட்டை பிரித்து பொன்.ராதாகிருஷ்ணனை வெற்றி பெறவைக்க தளவாய்சுந்தரம் திட்டமிட்டு பசிலியானை நிறுத்தியிருக்கிறார்' என்ற பேச்சு பலமாக எதிரொலிக்கிறது. 1951- லிருந்து இதுவரை குமரியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதில்லை. இந்த முறையும் வெற்றிவாய்ப்பு குறைவு. 3-வது இடத்துக்கே வாய்ப்பு.
அசல் போட்டி காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும்தான்!