னி நபருக்கு உள்ள பிரச்சினை சாதிப் பிரச்சனையாய் மாறி விஸ்வரூபமெடுத்த நிலையில், "நாங்க இருக்கிறோமென' அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பில் சாதித்தீயை அணைத்து அமைதியை நிலை நாட்டியுள்ளார் தூத்துக்குடி மக்களவை எம்.பி.யான கனிமொழி.

"தூத்துக்குடி மாவட்டம் உசிலம்பட்டி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் 12 பிள்ளைகள் படிக்கின்றார்கள். இதில் 2 பிள்ளைக மட்டும் தான் காலை உணவை சாப்பிடுது. மீதமுள்ள பிள்ளைக சாப்பிட மறுக்கிறார்கள். கடந்த 10 நாளா இது தான் நடக்குது. பட்டியலினப் பெண் சமைத்த தாலேயே இந்த புறக்கணிப்பு. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும்'' என பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆடியோ பதிவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட, சற்று தாமதமாகவே விழித்துக்கொண்டது கோவில்பட்டி வருவாய் கோட்டம்.

kk

மொத்தம் 70 குடும்பங்களே வாழும் உசிலம்பட்டி கிராமத்தில் 60 குடும்பங்கள் குறிப்பிட்ட ஒரே சமூகத்தினையும், மீதமுள்ள 10 குடும்பங்கள் பட்டியலின சமூகத்தினையும் சார்ந்தது. எனினும் இந்த கிராமம் தனித் தொகுதியாக ஒதுக்கப்பட்ட நிலையில் கார்த்திகா செல்வி என்பவர் தலைவராக செயல்பட்டு வருகின்றார். கிராம மக்களுக்குள் எவ்வித பாகுபாடும் இல்லாத நிலையில், அரசு விதிமுறைகளின்படி ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி முதல் துவக்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்திற்கு, உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த முனிய செல்வி சமையலராக நியமிக்கப் பட்டார். அன்றிலிருந்து தான் இவ்விவகாரம் பெரிதாகத் தொடங்கியது.

சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி கிராம மக்கள் அனைவரும் உசிலம்பட்டி யிலுள்ள தொடக்கப்பள்ளி யில் திங்கட்கிழமையன்று (11-09-2023) ஆஜராக வேண் டும் என கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜோன் கிறிஷ்டி பாய் உத்தரவிட்ட நிலை யில், எட்டய புரம் வட்டாட் சியர் மல்லிகா, எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்தம்மாள் மற்றும் அதிகாரி கள் குழு பள்ளியில் குழுமி "ஏன் இந்த பிரச்சனை? முதலமைச் சரின் காலை உணவுத் திட்டத்தினை புறக் கணிப்பது ஏன்?' என்ற கேள்விகளுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கினர்.

"கடந்த பத்து நாட்களுக்கு மேலாகவே சமைத்து வருகிறேன். காலை உணவை ஒரு பிள்ளைகளும் எடுத்துக் கொள்ளவில்லை. பிள்ளைகளை சாப்பிடு என்றால் அழுகிறாங்க. எங்க அப்பா அம்மா சாப்பிடக் கூடாதென சொல்லிட்டாங்க.. என்னுடைய இரண்டு பிள்ளைக மட்டும் தான் இங்க சாப்பிடுது. மற்ற யாரும் எடுத்துக் கொள்ளாததால் ஒவ்வொரு நாளும் உணவு வீணாகுது. அதுபோக பருப்பு ஊறவச்ச தண்ணீரைக்கூட வெளியில் ஊற்றக்கூடாதென சொல்றாங்க. பட்டியிலினப் பெண் என்பதால் என்னைப் புறக்கணிக்கிறாங்க.. முன்னமே அதிகாரிகளிடம் சொன்னோம். நடவடிக்கை இல்லை. இப்ப கேட்பதால் சொல்றேன்'' என்றார் சமையலர் முனிய செல்வி.

கிராமத்தை சேர்ந்த பெரியவர்களோ, "நாங்கதான் சாப்பிட வேண்டாமென சொன் னோம். இனிமேலும் அப்படித்தான். எங்களைப் பொறுத்தவரை எந்த பாகுபாடும் கிடையாது. இருந்தாலும் இந்த சமையலரை இடமாற்றம் செய்தால் மட்டுமே பிள்ளைகளை சாப்பிட சொல்வோம். இது எங்களது கோரிக்கையும்கூட'' என்றனர் அவர்கள்.

"அப்படியெல்லாம் எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவு செய்ய இயலாது. அரசு விதிமுறைகளைப் பின்பற்றித்தான் சமையலர் நியமிக்கப்பட்டார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கூறுகிறோம். அதன்பின் இறுதி முடிவு. அதுவரை குழந்தைகள் சாப்பிடக்கூடாதென நீங்கள் தடுக்கக்கூடாது'' எனக் கூறிவிட்டு ஆட்சியரை நேரில் பார்க்க சென்றார் கோவில்பட்டி வருவாய் கோட் டாட்சியர்.

இதற்கடுத்த அரைமணி நேரத்தில் சம்பந்த தொடக்கப் பள்ளியில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் அரசு துறை அதிகாரிகளுடன் ஆஜரான சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், அங்கிருந்த மதியநேர சமையலர், கிராம மக்கள் மற்றும் சமையலர் முனியசெல்வியிடம் விசாரணை நடத்தினார். பின், "உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே சாப்பிடுவதாகவும், மற்ற மாணவர்கள் தவிர்ப்பதாகவும் தகவல் வந்தது. ஆகவே நேரில் ஆய்வு செய்ய வந்தேன். பள்ளி மாணவ மாணவிகளுடன் பேசினேன். அவர் களுக்கு எதுவும் தெரியவில்லை. பெர்சனல் மோட்டிவில் சமையலர் பெண்ணுடன் சண்டை போட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு நாளையே முற்றுப்புள்ளி வைக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் அவர்.

இதில் பிரச்சினை என்னவென்றால், "ஆடி மாதத்தின் பொழுது அதே கிராமத்திலுள்ள குறிப்பிட்ட சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அம்மன் கோவில் ஒன்றில் திருவிழா நடந்தது. அத்திருவிழாவில் மைக் செட் கட்டி பாடல் ஒலிப்பரப்பாக, பாடலுக்கு தகுந்தாற்போல் அங்குள்ள சிறார்கள் ஆடி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் மைக் செட் சப்தம் தன்னுடைய தூக்கத்தை கெடுப்பதாக அவசர போலீஸ் 100க்கு டயல் செய்திருக்கின்றார் சமையலர் முனிய செல்வியின் கணவரான செந்தில்முருகன். இது எங்களுக்கு தகவலாக வர நாங்கள் அங்கு சென்று மைக் செட்டை நிறுத்தினோம். இதுதான் அவர்களுக் கிடையே பகையானது. சாதாரண தனிமனித மோட் டிவ் இப்பொழுது சாதிப் பிரச்சனையாக மாறியிருக் கின்றது. பிஞ்சுகளின் மனதில் சாதி நஞ்சை விதைத்துள்ள னர்'' என்கின்றது போலீஸின் தனிப்பிரிவு.

இந்தத் தகவல் அனைத்தும் மக்களவைத் தொகுதி எம்.பி.யான கனிமொழிக்கு கூறப்பட்ட நிலையில், "நாளை நானே வருகின்றேன்' எனக் கூறியதோடு மட்டுமில்லாமல் செவ்வாய்க்கிழமையன்று ஆஜரானார். அங்கிருந்த ஊர் பெரியவர்களிடம், "தனிமனித பிரச்சினையை சமூகப் பிரச்சனையாக மாற்றாதீர்கள். அது சட்டப்படி தவறு. உங்களுடைய கிராமத்திற்கு என்ன வேண்டுமோ அதனைக் கேளுங்கள், நான் செய்து தருகின்றேன். இது மட்டும் வேண்டாமே?'' எனக் கூறியவர், சமையலர் முனியசெல்வி பக்கம் திரும்பி, "நாங்க இருக்கிறோம்'' என தோளில் தட்டிக்கொடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அத்துடன் இல்லாமல் அங்கிருந்த குழந்தைகளுடன் அமர்ந்து சமையலர் முனிய செல்வி சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு புறப்பட்டார்.

"அவசர போலீஸ் 100க்கு போன் செய்து உள்ளூர் பிரச்சினைகள், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு விஷயங்கள், போதைப்பொருள்கள் புழக்கம், விடிய விடிய அரங்கேறும் கலை நிகழ்ச்சிகள் குறித்து சிலர் தகவல் அளிப்பது வழக்கமான ஒன்று. கண்ட்ரோல் ரூம் போலீசார் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவலை பரிமாற்றம் செய்கின்றனர். அங்கிருந்து சம்பவம் நடைபெற்ற ஏரியாக்களுக்கு செல்லக்கூடிய காவல்துறையினர், தகவல் அளிப்பவரின் விவரங்களை ரகசியம் காக்காமல், எதிர்த்தரப்பினரிடையே விலாவாரியாக விளக்கிச் சொல்லி பகையை ஏற்படுத்தி விடுகின்றனர். அப்படி நடந்ததுதான் இந்த சாதிப் பிரச்சனை. போலீஸார் ரகசியம் காத்திருந்தால் இப்பிரச்சினை எழ வாய்ப்பே இல்லை'' என்கின்றனர் உள்ளூர் சமூக ஆர்வலர்கள்.

திருத்திக்கொள்வார்களா போலீஸார்?

படங்கள்: மூர்த்தி