கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடிக்கு எதிராக சயான் மட்டும் வாக்குமூலம் அளிக்கவில்லை. இறந்துபோன முக்கிய குற்றவாளியான ஜெ.வின் கார் டிரைவர் கனகராஜின் மனைவியான கலைவாணி கனகராஜும் பரபரப்பான வாக்குமூலத்தை தந்திருக்கிறார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பப் போகும் முக்கிய வாக்குமூலம் அதுதான் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

jj

கலைவாணி சென்னையைச் சேர்ந்தவர். கனகராஜ் சேலம் மாவட்டம் எடப்பாடி நகரத்தையொட்டிய சமுத்திரம் என்கிற ஊரைச் சேர்ந்தவர். கனகராஜ், எடப்பாடியின் சமூகத்தைச் சேர்ந்தவர். கலைவாணி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரின் திருமணம்.... பாதி காதல் பாதி பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம்.

கனகராஜ் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தற்பொழுது வேலைக்குப் போய் வயிறு கழுவும் கலைவாணிக்கு கனகராஜ் பற்றிய எல்லா விவரமும் தெரியும். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறந்துபோனாலும் கனகராஜும் எடப்பாடியும், வேலுமணியும் சேர்ந்து நடத்திய கொடநாடு கொலை வழக்கின் அனைத்து விவரங்களும் அறிந்தவர் கலைவாணி.

Advertisment

கனகராஜ் தனது காதல் மனைவியிடம் அனைத்தையும் சொல்வார். கொடநாடு கொள்ளை, ஒரு கொலையில் முடிந்ததும் காவல்துறையில் சரணடைய தீர்மானித்த கனகராஜ், தனது மனைவியை சென்னையிலிருந்து அழைத்து வந்தார். சென்னையிலிருந்து ஆந்திராவுக்குச் சென்றது கனகராஜ் குடும்பம். பின்னர், சமுத்திரம் கிராமத்தில் தனது குடும்பத்தை தங்க வைத்திருந்தார்.

கொடநாடு கொலை வழக்கைப் பற்றி போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்த கனகராஜ், விபத்தில் சாகடிக்கப்பட்டார் என்பதுதான் கலைவாணி முன்வைக்கும் வாதம். அந்தக் கொலையை, விபத்தாக மாற்ற கனகராஜின் உறவினரான ரமேஷை சம்பவம் நடந்த இடத்துக்கு காவல் துறை வரவழைத்தது. கனகராஜ் பாக்கெட்டில் இருந்த செல்போன்களை மறைத்து வைக்கச் சொல்லி காவல்துறை உத்தரவிட் டது. யார் கேட்டாலும் அங்கிருக்கும் மதுக் கடையில் குடிக்கத்தான் கனகராஜ் சென்றார், அவர் எழுபது கி.மீ. வேகத்தில் பைக்கை ஓட்டிவந்தார் என கிளிப்பிள்ளையைப் போல் சொல்லவேண்டும் என போலீஸார் பிறப்பித்த உத்தரவை அச்சுப்பிசகாமல் ரமேஷ் உளறிக்கொண்டிருந்தார். சொந்த சகோதரரான கனகராஜ் பற்றி ஏடாகூடமாக உளறும் ரமேஷ், எடப்பாடி போலீஸ் செட்-அப் செய்த சாட்சி என்கிறார் கலைவாணி.

kk

Advertisment

அதேபோல் கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் பழனிவேல், கனகராஜின் சாவுக்குப் பிறகு எடப்பாடியிடம் நிறைய காசு பார்த் திருக்கிறார் என ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளார் கலைவாணி.

2019-ஆம் ஆண்டு நக்கீரனில் சயானின் பேட்டி வந்தபிறகு தனபால், "எனது தம்பி கனகராஜ் மரணத்திற்கு எடப்பாடிதான் காரணம்' என பேட்டியளித்தார். அதன்பிறகு சென்னைக்கு அழைக்கப்பட்ட தனபாலுக்கு ஒரு பெரிய செட்டில்மெண்ட் செய்தார் எடப்பாடி. அதைவைத்து இரண்டு விசைத்தறி மெஷின், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏகப்பட்ட சொத்துகளை வாங்கினார் தனபால். ஒரு வேலையும் செய்யாமல் சுற்றும் தனபாலின் ஒட்டுமொத்த ஃபைனான்ஸியர் எடப்பாடிதான் என்பது கலைவாணியின் வாதம். இதுபோல பலமுறை எடப்பாடி தனபாலுக்கு பணம் கொடுத்துள்ளார். கனகராஜின் இன்னொரு சகோதரரான பழனிவேல்தான் தனபாலை விட எடப்பாடிக்கு நெருக்கமானவராக இருக் கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது எடப்பாடியின் அண்ணன், அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக இருக்கும் பழனிவேலுவை எடப்பாடிக்கு வரச் சொல்லியிருக்கிறார். கனகராஜ் சமுத்திரம் கிராமத்தில் பல ஏக்கர் நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறார். அவற்றை விற்றுத்தருமாறு கலைவாணி, பழனிவேலுவை கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை விற்க மறுத்து விட்ட பழனிவேல் அதில் கனகராஜுக்கு உள்ள பங்கையும் தர மறுத்துவிட்டார். இந்த பேச்சுவார்த் தையின்போது பழனிவேல் திடீரென ஒரு ஆஃபர் பற்றி கலைவாணியிடம் பேசியிருக்கிறார்.

கனகராஜ் இறந்தபோது கலைவாணியின் கழுத்திலிருந்த ஏழரை பவுன் தாலிக் கொடியைப் பறித்துக்கொண்டார் தனபால். அவர்கள் திடீரென ஆஃபர் தருகிறார்கள். அது என்ன ஆஃபர் என கலைவாணி கேட்டார். சென்னையில் ஒரு விலை உயர்ந்த அபார்ட்மென்ட், அரசாங்க வேலை, கோடிக்கணக்கில் பணம்... இதுதான் அந்த ஆஃபர். ஆஃபரை தந்தவர் எடப்பாடியின் சகோதரர் என பழனிவேல் சொல்-யிருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலில் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தை தி.மு.க. முன்னிறுத்து கிறது. அதற்குப் பதிலடியாக கலைவாணி, எடப்பாடிக்கும் கொடநாடு கொலை வழக்கிற்கும் எந்த தொடர்புமில்லை என மீடியாக்களில் பேட்டி கொடுக்க வேண்டும் என்பதுதான் கலைவாணி யிடம் தெரிவித்த ஆஃபர்.

kk

முதலில் அன்பாக எடப்பாடியின் ஆஃபர் பற்றிப் பேசிய பழனிவேல் உனக்கு கனகராஜின் சொத்துகள் வேண்டுமென்றால் நீ எடப்பாடிக்கு ஆதரவாக பேசவேண்டும் என மிரட்டத் தொடங்கினார். பயந்துபோன கலைவாணி கனகராஜின் நண்பர்களை தொடர்புகொண்டார். அவர்கள் சயானின் வழக்கறிஞ ரான ஆனந்த்திடம் இது பற்றி சொன்னார்கள். அவர் கலைவாணியிடம் தொடர்பு கொண்டு பேசினார்.

ஆனந்த்திடம் கலைவாணி, எடப்பாடி கும்பலின் மிரட்டலைப் பற்றிச் சொல்ல... அவர்கள் சொன்ன வார்த்தைகளால் தெம்பாகி பழனிவேலிடம், எடப்பாடிக்கு ஆதரவாக பேச முடியாது என தெளிவாகச் சொன்ன கலைவாணியை அடுத்த கட்டமாக அவரது நண்பர்கள் மூலம் மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இறுதியாக கலைவாணி போகுமிடமெல்லாம் போலீசாரை வைத்து பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தார்கள். கலைவாணியின் முகநூல் பக்கத்தில் இந்த தொல்லை தொடர்ந்தது. இதுபற்றி உணர்ச்சிப் பிழம்பாக வாக்குமூலம் அளித்துள்ளார் கலைவாணி என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

இதற்கிடையே கலைவாணிக்கு போலீசார் வழங்கிய கனகராஜின் இறப்புச் சான்றிதழிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். கனகராஜ் இறந்த சாலை விபத்து நடைபெற்ற சேலம்-பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் ராஜேந்திரன் என்பவர் வீட்டருகே நடந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு சென்று போலீசார் விசாரித்தபோது, ராஜேந்திரன் வீடு விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் இடத்திலிருந்து சற்று தொலைவில் இருந்தது. நான் இடத்தைப் பார்க்கவில்லை. எனக்கும் கனகராஜ் மரணமடைந்த விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அலறியிருக்கிறார்.

விபத்தில் சிக்கிய கனகராஜின் மோட்டார் சைக்கிளை அந்த மோட்டார் சைக்கிளுக்கு ஃபைனான்ஸ் செய்த மார்வாடி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். கனகராஜின் மோட்டார் சைக்கிளோடு மோதிய காரை, அந்தக் காரின் உரிமையாளர் விற்றுவிட்டார்.

eps

விபத்து வழக்கை விசாரித்த ஆத்தூர் தாலுகா காவல்நிலையத்தில் இதுபோல ஒரு விபத்து நடந்து, கனகராஜ் மரணமடைந்தார் என்பது பற்றி எந்த ஒரு பதிவேடும் காணப்படவில்லை. இப்படி கனகராஜின் மரணம் ஒரு மர்ம மரணமாகவே திட்ட மிட்டு ஆக்கப்பட்டி ருந்தது. விபத்தை ஏற்படுத்தி, ஒருவரின் மரணத்தை உரு வாக்கியதாக சொல்லப்படும் டிரைவர் கைது செய்யப்படவில்லை. விபத்து நடந்ததும் கனகராஜின் செல்போனை கைப்பற்றவே அவரது உறவினர் ரமேஷ் அனுப்பப்பட்டார். அவர் கனகராஜின் அண்ணன்களான தனபால் மற்றும் பழனிவேல் மூலம் அதை மறைத்துள்ளார்.

இந்த வழக்கில், விபத்தில் சிக்கிய கனகராஜ், சயான் ஆகியோர் ஒரே நாளில் தங்களது செல்போன்களை இழந்துள்ளார்கள். சயானின் செல்போனில் கனகராஜ் எடப்பாடியுடன் உள்ள படம் இருந்தது. அதே படம் கலைவாணியின் செல்போனில் இருக்கிறது. அத்துடன் கனகராஜின் நெருங்கிய நண்பரான ஆத்தூர் மூர்த்தி என்பவரைப் பிடித்து போலீஸ் விசாரித்திருக்கிறது. அவர் கனகராஜின் மரணத்தில் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் மற்றும் சேலம் இளங்கோவனுக்கும் தொடர்பு இருக்கிறது என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

எடப்பாடிக்கு மிக நெருக்கமான இளங்கோவனையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கொடநாடு கொலை கொள்ளைக்குப் பிறகும் மிகவும் ரிலாக்ஸாக இருந்த கனகராஜ், தங்கையின் குழந்தை பிறப்பு மற்றும் உறவினர் ரமேஷின் குழந்தை பிறப்புகளை கொண்டாடியிருக்கிறார். ரமேஷின் வீட்டில் காரை நிறுத்திவிட்டு, ஆத்தூரில் கடைசியாக மூர்த்தி என்பவரை சந்தித்துவிட்டு ரமேஷின் வீட்டிற்குத் திரும்பும்போதுதான் விபத்தில் சிக்கியுள்ளார்.

அ.தி.மு.க.வில் பதவியில் இருக்கும் ரமேஷின் கைகளில்தான் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. இப்படி ஏகப்பட்ட மர்மங்களுடன் இருக்கும் கனகராஜின் மரணத்தில் எடப்பாடிக்குள்ள தொடர்பு, அவரது மனைவி கலைவாணி மூலம் வெளிப்படுகிறது என்கிறார்கள் வழக்கை விசாரிக்கும் போலீஸார்.

படங்கள்: நவீன்