"ஹலோ தலைவரே, முத்தமிழறிஞர் கலைஞரின் 102-ஆவது பிறந்தநாளை செம்மொழி நாளாக, தமிழக அரசு கோலாகலமாகக் கொண்டாடியிருக்கு.''”
"ஆமாம்பா... விருதளிப்பு, பரிசளிப்பு, நலத்திட்ட உதவிகள்னு விதவிதமாகக் கொண்டாடப்பட்டிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதியை, செம்மொழி நாளாக தமிழக அரசு ஏகத்துக்கும் கொண்டாடிச் சிறப்பித்திருக்கிறது. தமிழகம் முழுக்க விழாக்கள் நடந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் தலைமையில் அரசு சார்பிலான விழா நடந்தது. இதில் தமிழறிஞரான முனைவர் தாயம்மாள் அறவாணனுக்கு 2025ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினையும், விருதுத் தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கிச் சிறப்பித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கன்னியாகுமரி மாவட்ட சேந்தன்புதூரில் பிறந்த தாயம்மாள், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து, அதே கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டமும், கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டமும் பெற்றவர். ‘குழந்தை இலக்கியம் -ஒரு பகுப்பாய்வு’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்தைப் பெற்ற சிறப்புக்குரியவர். இவரும், மறைந்த இவரது இணையரான தமிழறிஞர் க.ப.அறவாணனும் பல்வேறு ஆய்வுப்பணிகளைச் செய்து, தமிழுக்குச் சிறப்பு சேர்த்திருக் கிறார்கள்.''”
"உண்மைதாம்ப்பா. இப்படிப்பட்ட அறிஞர்களைக் கொண்டாடுவது, தமிழ் அன்னையையே கொண் டாடுவதற்குச் சமமாச்சே!''”
"ஆமாங்க தலைவரே, அதேபோல் இன்னொரு பெரிய சாதனையையும் தமிழக அரசு செய்திருக்கிறது. மாதந்தோறும் தமிழறிஞர்களுக்கு 4,500 ரூபாயும், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு 3,500 ரூபாயும், எல்லைக் காவலர்களுக்கு 5,500 ரூபாயும் உதவித்தொகையாக இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இது, இந்த ஆண்டு முதல், 7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என சட்ட சபையில் அறிவிக்கப் பட்டிருந்தது. அதற்கான அரசாணையை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட தோடு, ஐந்து பேருக்கு புதிய உதவித்தொகையை வழங்கி, இதன் விரிவான பயனைத் தொடங்கி வைத்தார். கலை, பண்பாட்டுத் துறையின் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியோடு தொடங்கிய இந்த விழாவில் சுகி.சிவம் தலைமையில் சிறப்புப் பட்டிமன்றமும் நடந்தது. இதில் திருவாரூர் இரெ.சண்முகவடிவேல், புலவர் இராமலிங்கம், கவிதா ஜவஹர், பர்வீன் சுல்தானா ஆகியோர் உரையாற்றினார்கள். நகைச்சுவை உணர்வு ததும்ப, சொற்பொழிவாளர்கள் கருத்துக்களை எடுத்து வைத்தபோது, அரங்கம் உற்சாகத்தில் அதிர்ந்தது.''”
"கலைஞர் விழாவில்கூட துணை முதல்வர் உதயநிதியைப் பார்க்க முடியவில்லையே?''”
"மதுரை தி.மு.க. பொதுக்குழு கூடிய நேரத்தில் உதயநிதிக்கு கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்க இருக் கிறார்கள்னு தகவல் கிளம்பியது. உதயநிதியோ, எனக்கு என்னிடம் இருக்கும் இளைஞரணி பதவியே போதுமானது. வேறு எந்தக் கட்சிப் பதவியும் வேண்டாம்னு சொல்லிவிட்டாராம். பொதுக்குழு முடிந்து சென்னை திரும்பிய நிலையில், உதயநிதிக்கு லேசான காய்ச்சலோடு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்ததாம். அதனால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே அவரது நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் உதயநிதிக்கும் முதல்வருக்கும் மன வருத்தம்... அதனால் அவர் வெளியே தென்படவில்லை என்று எதிர்த்தரப்பினர் கதைகட்டி, செய்தி பரப்பி வருகிறார்கள். இதை அறிவா லயத் தரப்பு புன்னகையோடு வேடிக்கை பார்த்து வரு கிறது.''”
"ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைகள் பற்றி உலக நாடுகளுக்கு விளக்கிச் சொன்ன, கனிமொழி தலைமை யிலான குழு சென்னை திரும்பியிருக்கிறதே?''
"ஆமாங்க தலைவரே, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு நடத்திய போர் குறித்து, உலக நாடுகள் சில, இந்தியா மீது நம்பிக்கை யின்மையை வெளிப்படுத்தின. எனவே, இப்படிப்பட்ட நாடுகளுக்கு இதுகுறித்து விளக்கம் சொல்ல இந்திய எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை அமைத்து, அவற்றை பல்வேறு நாடுகளுக்கும் பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். அவற்றில் தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமை தாங்கிய குழுவும் ஒன்று. இந்தக் குழு, ரஷ்யா, க்ரீஸ், லாட்வியா, ஸ்பெயின், ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்குச் சென்றது. அங்கே இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்தும், சிந்தூர் ஆபரேசன் குறித்தும் இந்த டீம் விரிவாக எடுத்துரைத்தது. அங்கே கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் தெளிவான ஆதாரங்களுடன் இந்தக் குழுவினர் விளக்கியிருக்கிறார்கள். சுமார் 12 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டிருக்கு. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, பயணம் குறித்த அனுபங்களைப் பகிர்ந்துகொண்டி ருக்கிறார் கனிமொழி.'' ”
"சிறப்பு!''”
"மேலும், அந்த நாடுகளில் உள்ள அரசின் செயல்பாடுகள் எப்படிப்பட்டதாக இருக்கிறது என முதல்வர் கேட்க, அங்கெல்லாம் தான் கவனித்த அரசியல் நடவடிக்கைகள் பற்றி விவரித்துள்ளார் கனிமொழி. ஸ்பெயினில் நடந்த அரசு பிரதி நிதிகளுடனான சந்திப்பின்போது, இந்தியாவின் தேசிய மொழி எது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அப்போது, வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி என்று பட்டென்று சொன்னதை, ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகள், கைத்தட்டி பாராட்டியுள்ளனர். கனிமொழியின் இந்த பதில், சோசியல் மீடியாவில் ட்ரண்ட் ஆனது. ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளுக்குச் சொன்ன இந்த பதிலை, ஸ்டாலினிடம் கனிமொழி பகிர்ந்து கொண்டபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த ஸ்டாலின், "இந்தியாவின் குரலாக தமிழ் நாட்டின் ஒற்றுமை மொழியை பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்'னு தெரிவித்திருக்கிறார்.''”
"உதயநிதி பெயரைச் சொல்லி சென்னை தி.மு.க. பகுதிச்செயலாளர் ஒருவர், வசூல் நடத்துகிறார் என்று ஒரு பரபர புகார் கிளம்புதே?''”
"ஆமாம் தலைவரே... கடந்த மாதம் சென்னை மாநகராட்சி சார்பில், தனது தொகுதிக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் கட்டப்பட்ட 84 கடைகளைக் கொண்ட நவீன மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்தார். இந்தக் கடைகளுக்கு மாத வாடகையாக 650-ஐ மாநகராட்சி நிர்ணயம் செய்தது. இந்த நிலையில், பகுதி தி.மு.க. செயலாளரான மதன் மோகன், உங்களுக்குக் கடை வேண்டுமானால், முன்புறக் கடைகளுக்கு தனியாகவும், பின்புறக் கடைகளுக்குத் தனியாகவும் பணம் தரவேண்டும் என்றபடி, மீன் வியாபாரிகளிடமிருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய்வரை வசூலித்து வருகிறாராம். இது மேலிடத்து உத்தரவு என்று, துணை முதல்வர் பெயரை அவர் சொல்லியே இந்த வசூலில் ஈடுபடுகிறாராம். தன் தொகுதியை வளப்படுத்த உதயநிதி கடுமையாக உழைத்து வரும் நிலையில், பகுதிச் செயலாளரே அவர் பெயரை இப்படிக் கெடுக்கலாமா? என்று, அங்கிருக்கும் தி.மு.க. உடன்பிறப்புகளே வருந்துகிறார்களாம்.''”
"சரிப்பா, நடிகர் கமலுக்கு கர்நாடகத்தில் இருந்து எதிர்ப்புகள் வலுத்துவருகிறதே?''”
"தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்று நடிகர் கமல், தனது ’"தக் லைஃப்'’ படவிழாவில் சொன்னதற்கு, கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்காக அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று அங்கே பலமாக குரலெழுப்பி வருகிறார்கள். அங்குள்ள நீதிமன்றமும் இதற்காக கமலைக் கடுமையாகக் கடிந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் "கமல் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகளின் தாய் என்று சொன்ன உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதற்காக மன்னிப்புக் கேட்பாரா?' என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. தரப்பிலிருந்து இதுபோன்ற ஆதரவுக் குரல் பெரிதாக எழவில்லையே என்கிற ஆதங்கம் கமல் தரப்புக்கு ஏற்பட்டதாம். இந்தச்சூழலில், "கமல் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. தமிழில் இருந்துதான் அனைத்து மொழிகளும் வந்தது' என்று அமைச்சர் நேரு, அவருக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். இது மக்கள் நீதி மையத் தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.''”
"தனது பேச்சை தன் அரசியல் எதிரிகள் திசை திருப்புவதாக நடிகர் விஜய் ஆதங்கப் படுகிறாரே?''”
"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை அழைத்து, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விருதும் ஊக்கத் தொகையும் வழங்கிப் பாராட்டி வருகிறார் த.வெ.க. தலைவரான நடிகர் விஜய். இந்த ஆண்டுக்கான இந்த விருது வழங்கும் விழா, முதல்கட்டமாக கடந்த 30ஆம் தேதி நடந்தது. இரண்டாம் கட்ட விழா 4ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மாணவர்களை மகிழ்ச்சிப் படுத்திப் பேசிய விஜய் ‘ "நீட் தேர்வு எழுதுவது மட்டுமே உலகம் என்றும், அது மட்டும்தான் படிப்பு என்றும் நினைக்காதீர்கள். அதையும் தாண்டி எத்தனையோ படிப்புகள் இருக்கிறது. ஏராளமான வாசல்கள் உங்களுக்காகத் திறந்திருக்கின்றன'’என்றார். இதன்மூலம், டாக்டர் சீட் கிடைக்காவிட்டால், தற்கொலைதான் தீர்வு என்று நினைக்கக்கூடாது என்கிற கருத்தை மாணவர்கள் மனதில் பதிய வைத்தார். அங்கிருந்தவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலேயே அவரது பேச்சு அமைந்திருந்தது. எனினும் ’இந்த பேச்சின் மூலம், டாக்டராகும் கனவில் இருக்கும் ஏழை எளிய மாணவர்களை விஜய், திசை திருப்பப் பார்க்கிறார். பா.ஜ.க.வின் மறைமுக அஜெண்டாவை இப்படி விஜய் திணிக்கிறார்’ என்று, அ.தி.மு.க. தரப்பிலிருந்து சிலர் விஜய்க்கு எதிர் குரலை எழுப்பினர். இதையறிந்த விஜய், "என்னைத் தாக்குவதற்காக, இப்படியெல்லாமா அவர்கள் மலின அரசியல் செய்கிறார்கள்' என்று தன் நண்பர்களிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி னாராம்.''”
"அ.தி.மு.க.வின் ராஜ்யசபா வேட்பாளர்கள் பற்றி, விதவிதமான செய்திகள் உலவுகிறதே?''”
"அ.தி.மு.க. அறிவித்திருக்கும் ராஜ்யசபா வேட்பாளர்களில் தனபாலுக்கு சிபாரிசு செய்திருப்பவர், அக்கட்சியின் மாஜி மந்திரி தங்கமணி தானாம். சென்னை முதல் புதுச்சேரி வரை, தங்கமணிக்கு இருக்கும் பினாமி சொத்துக் களை பராமரித்து வருகிறவர் இந்த தனபால் என்கிறார்கள். அந்த கரிசனத்தில்தான் தனபாலை அவர் சிபாரிசு செய்தாராம். அதேபோல் வழக்கறிஞர் இன்ப துரைக்கு ராஜ்யசபா சீட்டை வாங்கிக்கொடுத்தவர், மற்றொரு மாஜியான வேலுமணிதானாம். மேலும் இன்ப துரைக்காக பிரபல தொழிலதிபர் ஹெச்.சி.எல். ஷிவ் நாடாரே, எடப்பாடியிடம் பேசியிருக்கிறாராம். இதற்கிடையே, அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தால், நான் சட்டத்துறை அமைச்சராவேன் என்று இன்பதுரை சொல்லிவந்தாராம். இதனால் இவர் தனது ரூட்டுக்கு குறுக்கே வந்துவிடக்கூடாது என்று மாஜி சி.வி.சண்முகமும், அவரை டெல்லிக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டினார் என்கிறார்கள். இப்படி இரண்டு ராஜ்யசபா வேட்பாளர்கள் குறித்தும் அ.தி.மு.க.வில் ஏராளமான காரணக் கதைகள் சொல்லப்படுகின்றன.''”
"சென்னை ஸ்பென்சர் பிளாசா மீது புகார்கள் எழுந்து வருகிறதே?''”
"சென்னை அண்ணாசாலையில் இருக்கும் ஸ்பென்ஸர் ப்ளாசா என்கிற அடுக்கு மாடி வர்த்தகக் கட்டிடம், பிரபல மானது. அந்த ஸ்பென்சர் நிர்வா கம், மாநகராட்சி யையும் மெட்ரோ நிர்வாகத்தையும் ஏமாற்றி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற வணிக வளாகங்களில் உள்ள கழிவு நீரை, சுத்திகரித்த பிறகுதான் மெட்ரோ நிர்வாகம் உருவாக்கி வைத்திருக்கும் கழிவு நீர் கால்வாய்களில் விடவேண்டுமாம். அது, கூவம் ஆற்றுக்குச் சென்று விடும் வகையில் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. கூவம் அதிகமாய் அசுத்தமாகக் கூடாது என்பதற் காகவே, வணிக நிறுவனங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், சுமார் 1000 கடைகளுக்கும் அதிகமாக உள்ள ஸ்பென்சர் ப்ளாசா நிர்வாகம், கழிவு நீரை சுத்திகரிப்பதில்லை என்றும், மொத்த கழிவுகளையும் அப்படியே கழிவு நீர் கால்வாய்களில் இணைத்து விடுகிறது என்றும் மாநகராட்சி மற்றும் மெட்ரோ நிர்வாகத்துக்கு புகார்கள் பறந்துள்ளன. இதை உறுதிப்படுத்திக்கொண்ட நிலை யிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைதியாக இருக்கிறார்களாம். காரணம், அவர்களின் பாக்கெட்டு களுக்கு லஞ்சம் சாக்கடையாய்ப் பாய்கிறதாம்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அண்ணா பல்கலைக்கழக விவகா ரத்தில் அமைச்சர் மா.சு.வைத் தொடர்புபடுத்தி, பா.ஜ.க.வின் மாஜி மாநில நிர்வாகி, ’"யார் அந்த சார்?'’ என்று ஒரு ஃபைலை வெளியிட்டு புழுதி கிளப்பிவரு கிறார். இது தி.மு.க. தரப்பை ஏகக்கடுப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பி, விசா ரணைக்கு அழைக்கவிருக்கிறதாம் காவல்துறை.''
___________________
மனஉளைச்சலில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள்!
பா.ம.க.வில் நடக்கும் பஞ்சாயத்து முடிவுக்கு வருகிற மாதிரி தெரியவில்லை என பா.ம.க.வினர் கவலையடைந்துள்ளனர். இந்தநிலையில், அமைச்சர் துரைமுருகனை சந்தித்துப் பேசியிருக்கிறார் பா.ம.க. ஜி.கே.மணி. அந்த சந்திப்பில், "நடக்கும் பிரச்சனையை முடித்து வையுங்கள்'' என்று ஜி.கே.மணி கோரிக்கை வைக்க, "இதோ பாரு மணி... என்ன நீயும் பாக்கலை; உன்ன நானும் பாக்கலை... விடு, அவங்களே சமாதானமாவாங்க. இல்லையா பேசாம, தி.மு.க.வுல ஜாயின்ட் பண்ணிடு. மீண்டும் நீ எம்.எல்.ஏ.'' என்று சொல்லி மணியை அனுப்பி வைத்துள்ளார் துரைமுருகன். அந்த யோசனையிலேயே மணியும் வந்துவிட்டார். மணிக்கு போடப்பட்ட தூண்டில்போல பா.ம.க. எம்.எல்.ஏ. சேலம் அருளுக்கும் தூண்டில் வீசப்பட்டுள்ளது. துரைமுருகனை போல, சீனியர் அமைச்சர் ஒருவர் இதனை வீசியுள்ளார். பா.ம.க.வில் நடக்கும் மோதலால் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் எல்லோருமே மன உளைச்சலில் இருக்கிறார்கள். மீண்டும் நாம் போட்டியிட்டால் ஜெயிப்போமா? என்கிற மனநிலையில் இருப்பதால், தி.மு.க.வில் அருள் இணைவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் விபர மறிந்தவர்கள். இந்த தகவல்கள் தி.மு.க. மற்றும் பா.ம.க.வில் வேகமாகப் பரவி வருகின்றன.
-இளையர்