1960-ஆம் ஆண்டுவாக்கில் நான் சென்னை மைலாப்பூரில் குடியிருந்தேன். மாலை நேரங்களில் நடந்தே செல்வது எனது வழக்கம். அப்படி ஒருநாள்... தண்ணீர்த்துறை மார்க்கெட் பக்கம் நான் நடந்து வந்தபோது...
பிளாட்பாரத்தில் நரிக்குறவப் பெண்கள் ஆறுபேர் வட்டமாக நின்று ஒரு சேலையைப் பிடித்தபடி இருக்க... அவர்களின் செய்கை எனக்கு விநோதமாக இருந்ததால்... “""ஏம்மா இப்படி நிக்கிறீங்க?''’என்று கேட்டேன்.
""சாமி... எங்க பொண்ணு ஒருத்திக்கு பிரசவம் நடக்குது...''’’என்றார்கள்.
"பிளாட்பாரத்தில் பிரசவமா?'’என நான் வியந்து நிற்க... திடீரென்று சூறைக்காற்று வீசி, சடசடவென மழை கொட்டியது.
"ரே... ரே...'’என அந்தப் பெண்கள் பதறியபடி... தாயையும், குழந்தையையும் தூக்கிக்கொண்டு... புகலிடம் தேடி ஓடினார்கள். ஒரு பிராமணர் வீட்டு வராண்டா திறந்திருந்தது. அதற்குள் புகுந்தார்கள். பதைபதைப்பும், ஆர்வமுமாக நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன்.
சத்தம் கேட்டு உள் வீட்டுக்குள்ளிருந்த ஐயர், ஜன்னலைத் திறந்து பார்த்து... முகச் சுழிப்புடன், "ஏய்... நாய்ங்களா... வெளிய போங்க...'’என கண்டபடி திட்டினார், விஷயம் தெரியாமல்.
""சாமி... இப்பத்தான் கொழந்த பொறந்திருக்கு... வெளிய மழையா இருக்கு சாமி. தொப்புள்கொடிய கத்திரிச்சதும் வெளிய போயிடுறோம் சாமீ...''’என்று அவர்கள் கெஞ்சியதைக் கண்டு என்னால் துக்கத்தை அடக்க முடியவில்லை.
""சாமி... மழை நின்னதும் நானே அவங்களை வெளிய அனுப்பிடுறேன்... கொஞ்சம் தயவு காட்டுங்க...''’என நான் சொன்னதும், ஐயர் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, ஜன்னல் கதவைச் சாத்தினார்.மழை நின்றதும்... ""சாமி... வர்றம் சாமீ...''’எனச் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
கிட்டத்தட்ட ஒருவாரம் வரை... அந்தச் சம்பவம் எனக்குச் சோகச்சுமையை ஏற்படுத்தியது. அவ்வப்போது அந்த பிரசவ நேரம் நெஞ்சில் நிழலாடியது.
1965ல் நான் எழுதிய கதை "காதல் படுத்தும் பாடு'‘ வெளியான பிறகு... மளிகைக்கடையில் உப்பு, புளி, மிளகா விற்பதுபோல... ஒரே மாதத்தில் ஆறு கதைகள உருவாக்கி விற்றேன். இறைவனால் நான் பெற்ற சாதனை இது. தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் மாடியில், நான்கு அறைகளை எடுத்து, என் பிரதான உதவியாளர் பனசை மணியன் தலைமையில், மேலும் சில உதவியாளர்களை வைத்து, திரைக்கதைகளை எழுதிக்கொண்டிருந்தபோது... ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காக... ஹோட்டலில் பின்புற மாடியிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போது... ஹோட்டல் தொழிலாளி ஒருகூடை எச்சில் இலைகளைக் கொண்டுவந்து தொட்டியில் கொட்ட... நான்கு நாய்கள் ஒன்றோடு ஒன்று குரைத்துக்கொண்டு... எச்சில் இலை உணவுகளை நக்கித் தின்றுகொண்டிருக்க... மறுபுறம் இருந்த தொட்டியில் இன்னொரு கூடை எச்சில் இலைகளை கொண்டுவந்து கொட்டியதும்... "அரே.. அரே...'’என கூவியபடி நரிக்குறவர்கள் சிலர் ஓடிவந்து, கிடைத்ததை தோளில் கிடந்த டால்டா டின்னில் போட்டுக்கொண்டும், சில எச்சில் உணவுகளை எடுத்து சாப்பிட்டுக்கொண்டும் இருக்க... எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.
"கடவுளே... இதென்ன கொடுமை? எச்சிஇலைச் சோத்துக்கு நாய்களும் சண்டை போடுது... நரிக்குறவர்களும் சண்டை போடுறாங்களே...'’என நொந்துபோனேன். இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. "இவங்களும் நம் நாட்டு மக்கள்தானே...? எப்படியாவது நரிக்குறவர்களோட வரலாறை தெரிஞ்சுக்கணும்'’என முடிவுசெய்தேன்.
மறுநாள் மாலை...
மைலாப்பூர் விவேகானந்தா காலேஜ் எதிரில் இருக்கும் பிளாட்பாரத்தில் ஒரு நரிக்குறவ குடும்பம் இரவு உணவுக்காக சமையல் செய்துகொண்டிருந்தது. அங்கு அமர்ந்திருந்த வயது முதிர்ந்த ஒரு கிழவரிடம்... ஒரு ரூபாய் கொடுத்தேன். (அப்போது ஒரு ரூபாய்க்கு மதிப்பு அதிகம்) கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டார்.
""பெரியவரே... நீங்க எங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தீங்கனு சொல்ல முடியுமா?''’எனக் கேட்டேன்.
""சொல்றேன் சாமி... நாங்க மராட்டிய மலைப்பகுதியில... ஆந்திராவ ஒட்டி வாழ்ந்தவங்க. அங்கருந்து... கொஞ்சகொஞ்சமா துங்கபத்ரா நதியோரம் குடியேறினோம். அப்படியே தமிழ்நாட்டுக்கு வந்துட்டோம். பல வருஷங்களானதாம் இங்க வர்றதுக்கு. எங்க மூதாதையர்கள் சொல்லியிருக்காங்க...’’
""நீங்க ஏன் பிளாட்பாரத்துல குடியிருக்கீங்க? நான் பார்த்தவரைக்கும் நரிக்கொம்பு, ஊசி#பாசி விக்கிறீங்க. வீடுகள்ல சோறு வாங்கிச் சாப்பிடுறீங்க. நாய்கள் உங்களைப் பார்த்தா குரைக்குது. நல்லபடியா ஒரு தொழில் செஞ்சு பிழைக்கலாமே? இடுப்புல கட்டவேண்டிய துணிய தலையில கட்டியிருக்கீங்க. தலையில கட்டவேண்டிய துண்ட... கோவணமா கட்டியிருக்கீங்க. நீங்கள்லாம் குளிக்கிற மாதிரி தெரியலயே...?''’’
""சாமீய்... அந்தக் காலத்துலருந்தே எங்களுக்குனு நிரந்தரமா ஒரு ஊரு கிடையாது. ஒரு நல்ல இடத்துல தங்கினாலும்... எங்கள துரத்தி அடிச்சிடுறாங்க. என்ன செய்றது சாமி? இன்னிக்கு ஆற்காடு... நாளைக்கி ஏற்காடுனு போய்க்கிட்டிருக்கோம். எந்த ஊருல கொழந்த பொறக்குதோ... அந்த எடத்தோட பேரத்தான் வைப்போம். நேத்து ஒரு கொழந்த கோடம்பாக்கத்துல பொறந்துச்சு. அதுக்கு "கோடம்பாக்கம்'’னுதான் பேரு. எம்மவன் திருச்சி மலைக்கோட்டயில பொறந்தான். அவம்பேரு "மலைக்கோட்ட'னுதான் வச்சேன்’’
""உங்க வாழ்க்கை முறைல ஏதாவது கட்டுப்பாடு, சட்டதிட்டம் இருக்கா?''’’
""என்ன சாமீ... இப்புடிக் கேட்டுப்புட்டீக? அதுல எங்கள மிஞ்ச யாருமில்ல சாமி. எங்க இனத்தச் சேர்ந்த ஒரு பொம்பள... ஊசி#பாசி விக்க வெளிய போனாலும்... இருட்டுறதுக்குள்ள தங்கியிருக்க எடத்துக்கு வந்துரணும். இருட்டுன பிறகு வந்தாலும்கூட எங்க ஜனங்க யார் கூடயாவது சேர்ந்துதான் வரணும். இருட்டுல தனியா வரவேகூடாது. அப்படி வந்தா... அந்தப் புள்ளய எங்க கூட்டத்துலருந்து விலக்கி வச்சிடுவாரு எங்க கூட்டத்தோட தலைவரு. அவ கொழந்த பெத்தவளா இருந்தா... அந்தக் கொழந்தய, அவ புருஷன்கிட்ட கொடுத்திட்டு... அவளுக்கு ‘பால் கூலி’ குடுத்து அனுப்பிச்சிருவோம்...''’’
""பால் கூலின்னா... தாய்ப்பால் குடுத்ததுக்கு கூலியா?''’’
""ஆமா... சாமி... அவ ரெண்டு கையையும் ஏந்தி நிக்கணும். எங்க சனங்க கைவசம் இருக்கிற காசுகள போடுவாங்க. கை நிறைஞ்சதும்... அந்தக் காசைக் கொண்டுபோய்... அவ எங்கயாவது பொழச்சுக்க வேண்டியதுதான். பொண்ணுகளுக்கு கற்பு அவ்வளவு முக்கியம். தனியா இருட்டுல வந்தவ மேல... "கெட்டுப்போயி வர்றாளோ'னு சந்தேகம் வலுக்கும். அதனாலதான்... இருட்டுறதுக்கு முன்னாடி... பொம்பளக் கூட்டத்தோட சேர்ந்திடணும்கிற கட்டுப்பாட வச்சிருக்கோம்''’என தன் கதையைச் சொன்னார் அந்தப் பெரியவர்.
அவர்களின் வாழ்க்கை முறையை சிந்தித்தபடியே... வீடு திரும்பினேன். "இந்த நரிக்குறவ மக்கள்... நம் நாட்டில் கடைசித் தட்டில் வாழும் மக்களாக இருக்கிறார்களே... இவர்களைப் பற்றி கதை எழுதலாமே... அதன் மூலம் இந்த மக்களுக்கு சில விழிப்புணர்வையும் தரலாமே...'’என முடிவு செய்து கதையை எழுதினேன்.
இயக்குநர் திலகம்’கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து கதையைச் சொன்னேன்.
உடனே கதையை வாங்கி, திரைப்படமாக எடுத்து வெளியிட்டார்.
திரைக்கதை அமைப்பதில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு இருக்கும் திறமைக்கு ‘"குறத்தி மகன்'’படமும் ஒரு நல்ல சான்று. உதாரணத்திற்கு ஓரிரு ஸீன்களைச் சொல்கிறேன்...
கதைப்படி... ஒருநாள் கே.ஆர்.விஜயா, தன் கூட்டத்திற்கு திரும்ப... நள்ளிரவாகிவிடும். அவசரமாக ஓடிவருவார்.
முன்பொருமுறை அந்த கூட்டத்தைச் சேர்ந்த ஓ.ஏ.கே.தேவரின் மனைவி நள்ளிரவில் திரும்பியதால், தலைவரான ஜெமினிகணேசன் அந்தப் பெண்ணை கூட்டத்திலிருந்து வெளியேற்றிவிடுவார். இந்த வருத்தத்தில் இருந்த ஓ.ஏ.கே.தேவருக்கு.. இப்போது தலைவரின் மனைவியே தாமதமாக வந்ததால்... தூக்கத்திலிருந்த சனங்களை கூவி எழுப்பி பஞ்சாயத்து கூட்டுவார். இப்படி ஒரு லீட் கொடுத்தார் கே.எஸ்.ஜி. "குப்பி... உன்னை கூட்டத்திலிருந்து விலக்கிவிடுகிறேன். நமது மகன் என்னிடம்தான் இருப்பான். கையை நீட்டி பால் கூலி வாங்கிக்கோ'’என ஜெமினி சொல்ல... விஜயாவும் கையை ஏந்த... கைநிறைய சில்லறைக்காசுகள் போடப்பட்டதும்... ‘"பால்கூலியை வச்சு பிழைச்சுக்கோ... நீ போகலாம்'’என்றார்கள்.
"என் உடம்புல உள்ள ரத்தம் உருகி, பாலாக மாறி, அதை என் பிள்ளைக்கி கொடுத்தேனே... அதுக்கா கூலி? போங்கடா... அறிவுகெட்ட ஜென்மங்களா... தாய்க்கு பால் கூலி குடுக்க... நீங்க மட்டுமில்ல... உங்களப் படைச்ச ஆண்டவனாலும் முடியாது'’என ஆவேசமாகச் சொல்லி... காசுகளை எறிந்துவிட்டு புறப்படுவார் விஜயா.
இந்தக் கட்டத்தில் கே.ஆர்.விஜயாவின் உக்கிரமான நடிப்பு, தியேட்டரையே உலுக்கியெடுத்துவிடும். படம் பார்த்த மக்கள் வாய்விட்டு அழுதுவிட்டார்கள்.
இந்தக் காட்சியமைப்பும், வசனமும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைத் தவிர வேறு எந்த இயக்குநரானாலும் படைக்க முடியாது. அவர் ஸீன்களில் இடம்பெறும் கேரக்டர்களாகவே மாறி நடித்துக் காட்டுவார். அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் அப்படியே அதை பிரதிபலித்து நடிப்பார்கள். ஒரு சாதாரண ஸீனைக்கூட தனிக்கவனம் செலுத்தி, உயிரூட்டி, விஸ்வரூபம் எடுக்கச் செய்துவிடுவார். குடும்பக்கதைகளை நம் கண் முன்னால் நிறுத்தி... நம்மை மயக்கிவிடுவார். ஒவ்வொரு ஸீனிலும் அவரின் முத்திரை இருக்கும். திரைக்கதை அமைப்பில் அப்படி ஒரு தனி ஆற்றல் பெற்றவர் கே.எஸ்.ஜி.
நிறைவேறிய எனது நோக்கம் ... நிறைவேற்றிய கலைஞர்...