ஜூலை 28, 2021 அதிகாலை. ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் பகுதி. அதிகாலை 5 மணிக்கு தனது வழக்கமான ஜாகிங்குக்காக வீட்டிலிருந்து கிளம்புகிறார் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தம் ஆனந்த். அது தன் கடைசி ஜாகிங் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
சாலையோரமாக ஜாகிங் போய்க்கொண்டிருந்த ஆனந்த் மீது சம்பந்தமே இல்லாமல் இடப்பக்கமாக சீறிப்பாய்கிறது ஒரு ஆட்டோ. கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கியெறியப்பட்ட நீதிபதி ஆனந்தின் உயிர் பறிபோனது.
இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் வழக்கில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் இல்லாத நிலையில், உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தானாகவே விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மாநில அரசை ஒரு பிடி பிடித்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரமணாவும், நீதிபதி சூர்ய காந்தும், “"இது மாநில அரசின் அலட்சியத்தால் விளைந்த மரணம். தன்பாத் மாபியா நிறைந்த பகுதி. இதற்கு முன்பும் இங்கு சில வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நீதிபதிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்''’என விமர்சனம் செய்தனர்.
ஜார்கண்ட் மாநில சிறப்பு விசாரணைக் குழு, நீதிபதி உத்தம் ஆனந்தின் மரணம் விபத்தா, கொலையா என்ற முடிவுக்கு வராதநிலையில், வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. விஜய் குமார் சுக்லா தலைமையிலான 20 நபர் களைக் கொண்ட குழு ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் இவ்வழக்கை விசாரித்துவரு கின்றனர்.
இந்த வழக்கில் நீதிபதியை ஆட்டோவை மோதிக் கொலை செய்ததாகக் கூறப்படும் ராகுல் வர்மா, லக்காந்த் வர்மா இருவரையும் சி.பி.ஐ. போலீசார், சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச்சென்று விபத்து நடந்தது எப்படி என்பதை திரும்ப நிகழ்த்தச் சொல்லி விசாரணை செய்தனர். விபத்து நடந்த இடத்தில் ரத்தம் தோய்ந்த மண்ணையும் சேகரித்து விசாரணைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆட்டோ சுக்னி தேவிக்குச் சொந்தமானது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் சம்பவத்துக்கு ஒருநாளுக்கு முன் ஆட்டோ காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி உத்தம் ஆனந்த் சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கில்லர் ரவி தாக்கூர், ஆனந்த் வர்மா இருவருக்கும் ஜாமீன் மறுத்தார். இவர்கள் அமன் சிங், அபினவ் சிங் எனும் தாதாக்களுடன் தொடர்புடைய வர்கள். ரஞ்சய் சிங் என்பவரின் கொலை தொடர்பான வழக்கில் ரவி தாக்கூர் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.
சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரண மர்ம வரிசையில், செஷன்ஸ் கோர்ட் நீதி பதி உத்தம் ஆனந்தும் இணைந்திருக்கிறார். நீதிபதிக்கு பாதுகாப்பில்லை என்றால் நீதிக்கும் பாதுகாப்பில்லை என்றுதான் அர்த்தமென அதிருப்தியாக முனகுகிறார்கள் நீதித்துறையினர்