"சாத்தான்குளம் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட தந்தை, மகன் கொலை வழக்கில் “கொடூர காயங்களே இருவரின் இறப்பிற்கு காரணம். கொரோனா நோய் அவர்களுக்கு இல்லை' என பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் செல்வமுருகன் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் சாட்சி கூற, வழக்கு வேகமெடுத்துள்ளது.
"திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சட்டம் சார்ந்த மருத்துவத்துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் 2019-ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வரு கின்றேன். 1999ம் ஆண்டு முதல் சட்டம் சார்ந்த மருத்துவத்துறையில் பணியாற்றி வரும் நான், இதுவரை 5000 பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கின் றேன். வருடத்திற்கு 4 அல்லது 5 போலீஸ் கஸ்டடி மற்றும் நீதி மன்றக் காவல் கஸ்டடி மரணங்களின் பிரேத பரிசோதனை செய்துள் ளேன். கடந்த 24.6.2020 அன்று நான் பணியிலிருந்தபோது கோவில் பட்டி கிழக்கு காவல் நிலைய எண் 649/2020, 650/2020 வழக்குகள் சம்பந்தப்பட்ட பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரது பிணங்களை பரிசோதனை செய்யவேண்டுமென கோவில்பட்டி நீதிமன்ற நடுவர் எண் 1 அவர்களிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக்கொண்டேன். இதேவேளையில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு அதில் நான், எங்கள் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் மருத்துவர் பிரசன்னா, போதகர் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவரான சுதன் ஆகியோர் இடம் பெற்றிருந்தோம்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யர் 24-06-2020 அன்றே பிரேத பரிசோதனை களை மேற் கொள்ள வேண்டு மென வேண்டு கோள் கடிதம் அனுப்பியதால், காவலர் எண்:1292 சிவக்குமார் பிரேதங்களை அடையாளம் காட்ட, அன்று இரவு 8.40க்கே பிரேத பரிசோதனையை ஆரம்பித்தோம். இப்பரிசோதனையின்போது கோவில்பட்டி நீதித்துறை நடுவர் 1 உடனிருக்க, பிரேதப் பரிசோதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டது. அதனை செய்தவர் தூத்துக்குடி ஆயுதப்படைக் காவலர் கோபி. பிரேதங்கள் குளிர்பதன அறையில் வைக்கப்பட்டிருந்ததால் இரண்டு பிரேதங்களும் விறைப்புத் தன்மையுடன் இருந்தது. கை மற்றும் கால் விரல்கள் நீல நிறத்தில் காணப்பட்டன. முதலில் பரிசோதிக்கப்பட்ட பென்னிக்ஸ் உடலில்,
வலது முன்னங்கை வெளிப்புறத்தின் நடுவே 1.5 ல 1 செ.மீ. அளவிலான காயம் காணப்பட்ட நிலையில், அதனை அறுத்துப் பார்த்ததில் அதன் கீழுள்ள சதை களில் அடர்ந்த கருமை நிற ரத்தக்கட்டு, வலது ஆள்காட்டி விரலின் கீழ் 1ல0.2 செ.மீ. அளவில் ஒரு காயம், இடது மேல் கையின் உட்பகுதியிலோ 8ல5 செமீ அளவில் ஒரு காயம். அதனை அறுத்துப் பார்த்ததில் அதனிலும் அடர்ந்த கருமைநிற ரத்தக்கட்டு, இடது முழங்கையின் பின்புறம் 2ல0.5 செ.மீ. அளவில் ஒரு காயம், இடது முழங்காலின் முன்புறத்தில் 0.5ல0.5 செ.மீ. அளவில் ஒரு காயம், இடது காலின் முன்புறம் 2ல0.5 செ.மீ. அளவில் ஒரு காயம், வலது பிட்டப்பகுதியில் 8 முதல் 30 செ.மீ., 8 முதல் 17 செ.மீ அளவில் இறப்பிற்கு முன்பு ஏற்பட்ட தோல் உரிதலும், அதனை அறுத்துப் பார்த்ததில் அதனின் கீழ்ச்சதைகளில் அடர்ந்த கருமைநிற ரத்தக்கட்டு, இடது பிட்டப்பகுதியில் 7 முதல் 17 செ.மீ., 6 முதல் 14 செ.மீ. அளவில் இறப்பிற்கு முன்பு ஏற்பட்ட தோல் உரிதலும், அதனை அறுத்துப் பார்த்ததில் அதனின் கீழ்ச்சதைகளில் அடர்ந்த கருமை நிற ரத்தக்கட்டும், இடது கால்பாதத்தில் 6ல6 செ.மீ. அளவில் காயம், வலது மேல்கையின் கீழ்புறத்தில் 5ல4 செ.மீ அளவில் காயம், வலது முழங்கையின் உட்புறம் 19ல5 செ.மீ. அளவில் கருமை நிற ரத்தக்கட்டு, இடது உள்ளங்கையில் 7ல6 செ.மீ. அளவில் கருமை நிற ரத்தக்கட்டு, ஆசனவாய் பகுதியில் 7ல5 செ.மீ. அளவில் இறப்பிற்கு முன் ஏற்பட்ட தோல் உரிதல் உள்ளிட்ட 13 காயங்கள் இருந்தன. இதன்படி பென்னிக்ஸ் உடம்பில் ஏற்பட்டிருந்த ஊமைக்காயங்களின் அடிப் படையிலேயே இறந்திருக்கலாம் என முடிவு செய்தோம்.
அதன்பின் இரவு 10.15-க்கு துவக்கப்பட்ட ஜெயராஜின் பிரேதப் பரிசோதனையில், முதுகின் இடப்புறத்தில் 3.5ல1 செ.மீ அளவுள்ள கருமை நிற சிராய்ப்புக் காயம், முதுகின் வலப்புறம் 4ல1 செ.மீ அளவுள்ள சிராய்ப்புக் காயம், இடது பிட்டப் பகுதியில் 8 முதல் 15 செ.மீ நீளத்திலும், 5 முதல் 8 செ.மீ. அகலத்திலும் தோல் உரிதலும், அது போல் வலது பிட்டப் பகுதியில் 14 முதல் 20 செமீ நீளத்திலும், 9 முதல் 17 செ.மீ. அகலத்திலும் தோல் உரிந்து காணப் பட்டது. இடது மேல்கை பகுதியில் 10ல9 செ.மீ. அளவில் சிராய்ப்புக்காயம்.
அதை அறுத்துப் பார்த்ததில் கருமை நிறத் திட்டும், வலது கால்பாதத்தில் 7ல7 செ.மீ. அளவுள்ள கருமை நிறத்திட்டும், வலது மேல் கையில் 7ல6.5 செ.மீ. அளவில் இரத்தக்கட்டும், அதே இடத்தில் 2.5ல3.5 செ.மீ. அளவில் மூன்று இடங்களில் மூன்று சிராய்ப்பும், 4 செ.மீ. அளவில் வலது கையின் கீழ்புறத்திலும், வலது முழங்கையின் உட்புறம் 4.5ல1.5 செ.மீ. அளவில் காயமும், வலது முழங்காலின் முன்புறத்தில் 1ல0.5 அளவிலும், வலது முழங்கையின் பின்புறம் 6ல5 செ.மீ. அளவில் காய சிராய்ப்புக்களும் அதை அறுத்துப் பார்த்ததில் கருமைநிறத் திட்டும் காணப்பட்டன. வலது கால்பாதத்தில் 4ல3 செ.மீ. அளவிலும், வலது கையில் 4ல3.5 செ.மீ. அளவிலும் ரத்தக்கட்டு காணப்பட்டது. அதனை அறுத்துப் பார்க்கையில் கருமை நிறத்திட்டும் காணப்பட்டது. 30ல28 செ.மீ. அளவில் பிட்டப்பகுதியின் கீழும், வலது தொடையின் பின்புறம் 26ல13 செ.மீ. அளவிலும் ரத்தக்கட்டும் அதனை அறுத்துப் பார்க்கையில் கருமை நிற திட்டும் காணப்பட்டது. இடது கால் கீழ்ப்பகுதியில் 4ல1 செ.மீ. அளவில் காணப்பட்டது. மேலும் அவருக்கு கொரோனா நோய் பாதிக்கவில்லை. ஊமைக்காயங்களின் பின்விளைவு களாலேயே ஜெயராஜ் இறந்திருக்கலாம் என சான்றிதழ் வழங்கினோம்'' என்றார் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் சாட்சியம் கூறிய மருத்துவர் செல்வமுருகன்.
அன்றைய தினத்தில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் மேற்கண்ட வற்றைக் குறிப்பிட்டும், மேற்பட்ட காயங்கள் மரணம் ஏற்படுவதற்கு 1 முதல் மூன்று நாட்களுக்குள் ஏற்பட்டிருக்க வேண்டுமெனவும், இருதயத்தின் இடது வென்ட்ரிகிள் பகுதியில் 3ல2 செ.மீ. அளவில் இடம் சிவந்தும், வலது மற்றும் இடது வென்ட்ரிகிள் பகுதியில் சிவப்பு நிற மாறுதலும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளையில் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை எனவும், நுண்ணோக்கிப் பரிசோதனை அறிக்கையில் மூளையில் எவ்வித மாறுதல்களும் ஏற்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில் மரணத்திற்கான காரணியாக உடலில் காணப்பட்ட காயங்களின் பின் விளைவுகளின் அடிப்படையிலே மரணம் சம்பவித்திருக்கும் எனவும், காயங்களின் தன்மையை கூர்ந்து நோக்கும்போது, மழுங்கலான பொருட்கள் கொண்டு தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டி ருந்தது.
மருத்துவரின் சாட்சியம் வழக்கிற்கு வலுச்சேர்த்த நிலை யில், தந்தை, மகன் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ள போலீஸார் தவிர அவர்களுக்கு உறுதுணை யாக அன்றைய தினத்தில் தாங்களும் பங்கு கொண்டு ஜெயராஜ், பென்னிக்ஸை பிடித்துக்கொண்டும், மூர்க் கத்தனமாக தாக்கியதாகவும் கூறப்பட்ட ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் குறித்து சி.பி.ஐ. இந்த வழக்கில் வாய் திறக்கவில்லை.
இதே வேளையில் என்னை அடித்துக் காயப்படுத்திய போலீஸாருக்கு உதவியவர்கள் இந்த ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸே என சி.பி.சி.ஐ.டி. முன் ஆஜராகி அமுதுன்னாக்குடி கோகுல், சுந்தரேஷையும், தஞ்சை நகரம் எலிசாவையும் அடையாளம் காட்டியிருக்கின்றார் கோவில்பட்டி கிளைச்சிறையில் காயத்துடன் இருந்த ராஜாஜெபசிங்.
"பேய்க்குளத்தில் நடந்த கொலையில் சந்தேகத்தின் பேரில் என்னையும் நவீன், தசரதன் மற்றும் அழகு கார்த்திக் ஆகியோரை சாத்தான்குளம் போலீஸிடம் ஒப்படைத்தது ஸ்பெஷல் டீம். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர், "நாங்கள்தான் அந்த கொலையை செய்தோம்' என ஒப்புக்கொள்ளக் கூறி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அடித்துக் காயப்படுத்தினர். திடுமென அங்கிருந்து தட்டார் மடம் காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று அங்கும் அடிக்க ஆரம்பித்தனர். இதில் எங்களை பிடித்துக் கொள்வதற்கும், அடிப்பதற்கும் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் சிலர் உதவினர். போலீஸாருடன் சேர்ந்து தொடர்ச்சி யாக மூன்றுநாள் அடித்தனர் அந்த ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸார்.
அதன்பின் பேரூரணி, பாளையங்கோட்டை சிறைகளில் வைக்கப்பட்ட நான் கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பொழுதுதான் இறந்துபோன ஜெயராஜையும், பென்னிக்ஸையும் பார்த்தேன். எனக்கு எப்படியோ, அதே மாதிரி அவங்க இரண்டு பேருக்கும் காயம். இதுகுறித்து நீதிபதியிடம் கூறியுள்ளேன். அதுபோல் என்னுடைய வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகின்றது. கடந்த வாரத்தில் தூத்துக்குடி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரக் கூறிய அதிகாரிகள் என்னைக் காயப்படுத்திய, சாத்தான்குளம் போலீஸாருக்கு உதவியாக இருந்த ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸை அடையாளம் காண்பிக்கச் சொன்னார்கள். ஐந்து பேர் வரவேண்டிய நிலையில் இருவர் மட்டும் வந்ததால் அவர்களை அடையாளம் காட்டினேன். என்னைக் காயப்படுத்தியது மட்டுமல்ல, இறந்த ஜெயராஜ், பென்னிக்ஸை அடிக்க உதவியாக இருந்ததும் இவர்களே'' என்றார் ராஜாஜெபசிங்.
சி.பி.ஐ.க்கு உதவியாக அடுத்த அத்தியாயத்தை எழுதத் துவங்கியுள்ளது சி.பி.சி.ஐ.டி.
-நாகேந்திரன்