ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்கினாலே எந்தளவிற்கு மக்களுக்கு கோலாகலமோ, அதே அளவிற்கு கிரிக்கெட் சூதாட்டம் ஆடுபவர்களும் கோலாகலமாக இருக்கிறார்கள். குறிப்பாக, சென்னை சௌகார்பேட்டை பகுதிகளில் பெருமளவுக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுகிறது. இந்த சூதாட்டத்துக்கு ஆன்ட்ராய்டு போன் ஆப்களையும், வாட்ஸ்ஆப்பையும் பயன்படுத்துகிறார்கள். எந்த அணி வெற்றிபெறும் எனப் பந்தயம் கட்டுவதில் தொடங்கி, இந்த அணி இவ்வளவு ரன் தான் எடுக்கும், இந்த ஓவரில் விக்கெட் விழும் என ஆட்டத்தின் ஒவ்வொரு தருணத்திலும் சூதாட்டம் நடக்கிறது. இப்படி பந்தயம் கட்டுபவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பந்தயப் பணத்தை வாரத்தின் முதல் நாளான திங்களன்று தான் செட்டில் செய்வார்களாம்.
இந்த சூழ்நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் நடத்தும் குணால் என்பவரும், எஸ்.ஐ. சன்னிலாய்ட் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். குணாலும், சன்னிலாய்டும் சேர்ந்து சரக்கடிக்கும் போது கிரிக்கெட் சூதாட்டம் குறித்து பேசியிருக்கின்றனர். பேசியதனைத்தையும் பூக்கடை ஏ.சி. தட்சணாமூர்த்தியிடம் சொல்லவே, உடனே ஏ.சி. சைகை காட்ட, ஏட்டு சதீஷ், எஸ்.ஐ. ஜனார்த்தனம், சன்னிலாய்ட் ஆகியோர் சேர்ந்து, கடந்த 15ஆம் தேதி அதிரடி சோதனை செய்ய, சூதாட்டம் நடந்ததையும், பணப்பரிமாற்றம் நடந்ததையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அப்போது சிக்கிய 30 லட்சம் ரூபாய் பணத்தை இவர்களே ஆட்டையைப் போட்டிருக்கிறார்கள்.
இந்தத் தகவல் பூக்கடை டி.சி. ஸ்ரேயா குப்தாவிற்கு கிடைத்ததும், உடனடியாக அன்றிரவே அவர்களை விசாரணை செய்து, அந்த பணத்தை எடுத்துவரும்படி ஏ.சி. தட்சணா மூர்த்திக்கு உத்தரவிட்டுள்ளார். தட்சிணா மூர்த்தியோ, அப்படியெல்லாம் பணம் எதுவு மில்லை என்று மறுக்கவே, அதற்கு டி.சி., "அதெல்லாம் எனக்கு தெரியும். உடனடியாக அந்த பணம் இங்கே வந்தாக வேண்டும்'' எனக் கோபமாகக் கூறியுள்ளார். அதையடுத்து, உட னடியாக 30 லட்ச ரூபாயை கொடுத்துள்ளனர். பின்னர் வருமானவரித்துறை அதிகாரி பால சுந்தரத்தை வரவழைத்து, அப்பணத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார். இவ்விவகாரத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள். விசாரணையில் சிக்கிய ஏட்டு சதீஷ், எஸ்.ஐ. சன்னிலாய்ட் ஆகியோர் ஏ.ஆர்.க்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள னர். சதீஷ் பணியில் சேர்ந்துவிட்டார். சன்னிலாய் டோ மருத்துவ விடுப்பெடுத்துவிட்டு, வீட்டிலிருக்கிறார். தேர்தலுக்கு பின்னர் தனது பழைய பணியையே வாங்கித்தருவதாக நண்பன் குணால் சொன்னதால் இப்படி காலம்கடத்துகிறார்.
சன்னிலாய்ட் இப்படி செய்வதெல்லாம் புதிதல்ல என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். அவர் 1997ஆம் ஆண்டு கிரேட் 2 போலீசாக பணியில் சேர்ந்து, 2012ஆம் ஆண்டு ஏட்டாக சி.2 போலீஸ் ஸ்டேசனில் பணியில் சேர்ந்துள்ளார். அப்போதுதான் இவருக்கும், சூதாட்டம், ஹவாலா பணம் என இல்லீகல் பிசினஸில் இருக்கும் குணாலோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. 2016ஆம் ஆண்டு சன்னிலாய்ட் ட்ராஃபிக் பிரிவுக்கு மாறியதும், டிசம்பர் மாதம் சன்னியும், ராஜாசிங் என்ற போலீசும் சேர்ந்து 1 கோடியே 25 லட்சம் ஹவாலா பணத்தை பிடித்துள்ளனர். அதில் பாதியை ஆட்டையைப் போட்டுள்ளனர். இந்த விவகாரம் அப்போதைய கமிஷனருக்கு தெரியவந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு, டி.1 காவல் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்துள்ளனர். அங்கு சென்றும் 2018ஆம் ஆண்டு குருவியாக இருந்த ஒருவனை, அதாவது தங்க நாணயம் கடத்தும் ஒருவனைப் பிடித்து அவனிடமிருந்த பணத்தை பிடுங்கியுள்ளனர். அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு திருவண்ணாமலைக்கு மாற்றம் செய்யப்பட்டார். குணாலுக்கோ சன்னி இல்லாமல் மற்ற போலீசாருடன் இணைந்து செயல்பட முடியவில்லை. எனவே குணால் தனக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரிகள் உதவியால், திருவண்ணாமலையில் பணியாற்றிய சன்னிக்கு மீண்டும் சி.2 காவல் நிலையத்திலேயே எஸ்.ஐ.யாக பணி வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்த சூழ்நிலையில்தான் ஐ.பி.எல். கிரிக்கெட் வந்ததும், சூதாட்டத்தில் ஈடுபட்டு, லட்சக்கணக்கில் பணம் கைமாறும்போது தகவல் கொடுத்து அந்தப் பணத்தை லூட்டடித்து சிக்கியுள்ளனர். இப்படி உயரதிகாரிகளுக்கு தெரிந்தது கொஞ்சமே! தெரியாமல் எக்கச்சக்கமாக இருவரும் பூந்து விளையாடுகிறார்களாம். இதை கருத்தில்கொண்டு தான் மீண்டும் உயரதிகாரியின் மூலமாக சி.2 காவல் நிலையத்திற்கே கொண்டு வருகிறேன் எனச் சொல்லியுள்ளாராம் குணால். அதனால்தான் மருத்துவ விடுப்பில் காத்திருக்கிறார் சன்னிலாய்ட்.
இந்த சன்னிலாய்ட் மற்றும் குணால் குறித்து விசாரித்தாலே இருவரும் இதுவரை எவ்வளவு ஹவாலா பணத்தை இதுபோல் அடித்துள்ளார்கள் என்றும், இவர்களுக்கு உதவி செய்யும் உயரதிகாரி கள் யார் என்றும் நிச்சயம் தெரியவரும் என போலீஸ் அதிகாரிகளே புலம்பித்தள்ளுகிறார்கள்.
-சே