eee

"இங்கேதான் நம்ம பொண்ணு இருக்கணும்... பயலுக்கு எங்க பொண்ணு கேட்குதா' என, சாதி மறுப்புத் திருமணம் செய்துவைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை அடித்ததோடு மட்டுமில்லாமல்... அலுவலகத்தையே சூறையாடினர் பெண் தரப்பினர்.

நெல்லை பாளையங்கோட்டை ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த பட்டியலினத்தவரான மதனும், பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினியும் காதலித்து வந்தனர். இந்நிலையில், இருதரப்பு பெற்றோரிடம் காதல் விவகாரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் திருமணத்திற்கு மறுப்பே பதிலாகக் கிடைத்திருக்கின்றது பெண் தரப்பிலிருந்து. இதன் தொடர்ச்சியாக, தங்களுக்கு திருமணம் செய்து வைக்க நெல்லை ரெட்டியாப்பட்டி சாலையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர் காதலர்கள். இரு தரப்பையும் நன்கு விசாரித்து, காதலுக்கு சாதி மட்டுமே காரணம் எனக் கருதி கடந்த வியாழக்கிழமையன்று கட்சி அலுவலகத்திலுள்ள லெனின் சிலை முன்பு இருவருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர் கட்சி நிர்வாகிகள். இதன் தொடர்ச்சியாக, பதிவுத் திருமணம் செய்து வைக்க வேண்டி அவர்களுக்குப் பாதுகாப்பும் வழங்கியுள்ளனர்.

Advertisment

வெள்ளிக்கிழமை மாலை வேளையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பழனி, எஸ்.எப்.ஐ. சைலேஷ் அருள், அலுவலக செயலாளர் முருகன் உள்ளிட்ட கட்சியினர் அலுவலகத்தில் இருக்கும்போது அங்குவந்த 20-க்கும் மேற்பட்ட பெண் தரப்பினர், கட்சி அலுவலகத்தில் மணமக்கள் இருக்கின்றார்களா? என ஒவ்வொரு அறையாக தேடிப் பார்த்தனர். கிடைக்காததால் அங்கிருந்தவர்களை தாக்கி, டேபிள், நாற்காலிகள் மற்றும் கண்ணாடிகளை உடைத்து அலுவலகத்தையே சூறையாடிச் சென்றனர்.

Advertisment

இதற்கு மாநில அளவில் கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில்... நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா கட்சி அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ச்சியாக பெண் உறவினர்கள் மற்றும் பெண்ணின் சமூகம் சார்ந்த அமைப்பினை சேர்ந்த 12 நபர்களை கைது செய்தனர் பெருமாள்புர போலீஸôர்.

""நாங்கள் திருமணம் செய்து வைத்த மணமக்கள் இங்கே தான் இருக்கின்றார்கள் என நினைத்து அலுவலகம் தேடிவந்தனர் பெண்ணின் பெற்றோர் மட்டும் குறிப்பிட்ட சமூகத்தின் நிர்வாகி பந்தல்ராஜா உள்ளிட்டோர். ".... பயலுக்கு எம்பொண்ணு கேட்குதா.? அதற்கு நீங்க துணையா.?' என காது கூசும் வார்த்தைகளை பிரயோகித்தப்படியே அனுமதியே கேளாமல் ஒவ்வொரு அறையாகத் தேடிப் பார்த்தனர். இதில் பெண்ணின் உறவுக்காரர் ஒருவர் அலுவலக அறைக் கண்ணாடியை உடைக்க, ஏனையோர் கையில் கிடைத்தப் பொருட்களையெல்லாம் உடைக்க ஆரம்பித்தனர். அவர்களது தேடுதல் வேட்டையில் சமையற்கட்டும் தப்பவில்லை. தடுக்கச் சென்ற நான், தோழர்கள் சைலேஷ் அருள், முருகன் உள்ளிட்டோர் அவர்களது தாக்குதலில் சிக்கிக்கொண்டோம். "இவ்வளவு சாதி வன்மம் தேவையா?' என்கின்றார் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பழனி.