மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு சென்று விட்டு திரும்பியிருக்கிறார் இந்திய அரசின் இணையமைச்சர் எல்.முருகன். இந்த பயணத்தில் முருகனுடன் சென்ற அண்ணாமலையை இந்திய-இலங்கை அரசுகள் கேவலப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.

இந்தியாவின் நிதிஉதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்தை மக்களுக்கு அர்ப்பணித்தல், மீனவர் பிரச்சனை, 13-வது சட்டத் திருத்தம், ஈழத்தமிழர்களுக்கு நல உதவி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங் களை முன்னிறுத்தி இலங்கைக்கு சென்ற இணையமைச்சர் எல்.முருகனுக்கு இலங்கை அரசும், இந்திய தூதரகமும் சிறப்பான வரவேற்பை கொடுத்தன. முருகனுக்கு கலாச்சார ரீதியிலான வரவேற்பை கொடுத்தார் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

இந்த பயணத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்துப் பேசிய முருகன், இந்திய மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் குறித்து விரிவாக ஆலோசித்தார். இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் ரணிலிடம் எடுத் துரைத்திருக்கிறார். அப் போது, நான் அதிபரான தற்கு பிறகு, இந்திய மீனவர்கள் தாக்கப்பட்ட னர் என்கிற நிகழ்வு நடக்கவில்லை. இந்திய மீனவர்கள் பிரச்சனை யில் மிகவும் அக்கறை கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் உத்தர வாதம் தந்திருக்கிறார் ரணில். மேலும், இரு நாடுகளுக்கிடையே மீன்வளம், பால்வளம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக் கிறது. இதனையடுத்து ஈழத்தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதில் இலங்கை அரசு உறுதியாக இருப்பதாக இணையமைச்சர் முருகனிடம் தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்கே.

திரிகோணமலை துறைமுக வளர்ச்சிக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையையும் முருகனிடம் அழுத்தமாக வைத்திருக்கிறார் ரணில். இப்படி மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இணையமைச்சர் முருகனை இலங்கைக்கு அனுப்பி வைத்து பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்த வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், இந்த பயணத்தின் உண்மையான நோக்கம் என்னவென்பது குறித்து பல்வேறு தகவல்கள் இலங்கையில் பரவியிருக்கின்றன.

Advertisment

இலங்கையை சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடிகள் இன்னும் விடுபடவில்லை. அந்த சிக்கல்களிலிருந்து இலங்கை யை மீட்க, சர்வதேச நிதியத்திடம் மிகப்பெரிய அளவில் கடன் உதவியைக் கேட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே. அந்த நிதி உதவி கிடைத்தால் இலங்கையை பொருளாதார ரீதியாக மீட்டெடுத்துவிடலாம் என்பது ரணிலின் நம்பிக்கை.

இலங்கை எதிர்பார்க்கும் அளவிலான கடன் நிதி உதவியை அளிக்க வேண்டுமாயின் இந்தியா, சீனா உள்ளிட்ட பெரிய நாடுகளில் ஏதேனும் ஒன்று, உத்தரவாதச் சான்றிதழ் கொடுக்க வேண்டும். அதாவது, சுருக்கமாக சொல்வதானால், இலங்கைக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு உத்தரவாதச் சான்றிதழ் கொடுக்கப்பட்டால் இலங்கைக்கு சர்வதேச நிதியம் உடனடியாக கடன் உதவி செய்யும். இந்த உத்தரவாதச் சான்றிதழை தருவதற்கு சீனா தயாராக இருந்தது. இதனையறிந்த இந்திய அரசு, சீனாவின் முயற்சியை முறியடிக்கும் வகையில், இலங்கைக்கு உதவ அவசரம் காட்டியது. இதற்காக கடந்த மாதம் இலங்கைக்கு பறந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். ரணிலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், சர்வதேச நிதியத்திற்கு உத்தரவாதச் சான்றிதழை இந்தியா வழங்கும் என்கிற உத்தரவாதத்தைக் கொடுத்தார் ஜெய்சங்கர். அடுத்தடுத்த நாட்களில் இந்த உத்தரவாதச் சான்றிதழும் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட 13-வது சட்டத்திருத்தத்தை அமல் படுத்துவதை உறுதி செய்ய ரணிலிடம் வலியுறுத்தினார் ஜெய்சங்கர். தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர் களை சந்தித்தும் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

Advertisment

இந்த 13-வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து கடந்த சில மாதங்களாகவே இலங்கைக்குள் பல்வேறு மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, 13-வது அரசியல் சட்டத்திருத்தம் என்பது இலங்கைக்குள் மீண்டும் பிரிவினைவாதத்தை உருவாக்கும் என்று சிங்களவர்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

srllankavisit

ஈழத்தமிழர்களிலிலும் இந்த 13-வது சட்டத் திருத்தம் எதிர்ப்பையும் ஆதரவையும் உருவாக்கி யிருக்கிறது. தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளில் ஒரு பிரிவினர், இந்த சட்டத்திருத்தத்தால் எந்த அரசியல் தீர்வோ, அதிகாரப் பரவலோ, உரிமைகளோ ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கப் போவதில்லை. மீண்டும் ஒரு சர்வதேச பொறிக்குள் தமிழர்களை சிக்கவைக்கவே உதவும் என்று கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மற்றொரு பிரிவினரோ, இந்தியாவின் முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில், அந்த சட்டத் திருத்தத்தை ஆதரித்து குரல் கொடுக்கின்றனர்.

ஆக, 13-வது சட்டத்திருத்தத்தை முன்னிறுத்தி பெரிய பஞ்சாயத்தே இலங்கைக்குள் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி நடந்துகொண் டிருக்கும்போதுதான் இலங்கைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டுப் போனார் ஜெய்சங்கர். இந்த சூழலில், இலங்கையின் சுதந்திரதின விழாவில் கலந்துகொள்ள இந்திய அரசின் இணை யமைச்சர் முரளிதரன் திடீர் பயணமாக இலங்கைக் குச் செல்கிறார். அவரும் ரணிலை சந்தித்து 13-வது சட்டத்திருத்தம் குறித்து பேசுகிறார். தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து ஆலோசிக்கிறார். சில நலத் திட்ட உதவிகளையும் செய்கிறார் முரளிதரன்.

ஜெய்சங்கர் வந்து சென்ற சுவடு மறைவதற்குள் ளேயே இந்தியாவிலிருந்து மற்றொரு அமைச்சர் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதால், என்னதான் நடக்கிறது என சிங்களவர்கள் ஆவேசம் காட்டுகிறார்கள். 13லிவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தக்கூடாது என்கிற எதிர்ப்பு வலுக்கிறது. இந்த நிலையில்தான் முரளிதரன் சென்று வந்த அடுத்த வாரமே இணையமைச்சர் முருகன் இலங்கைக்கு செல்கிறார் என அறிவித்த இந்திய அரசு, முருகனின் பயணத்திட்டத்தையும் தெரிவிக்கிறது.

எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது இந்தியா ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறது என்பதற்கும் சில பின்னணிகள் இருக்கிறது என்கிறார்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர்.

அதாவது, வடகிழக்கில் இந்தியா தற்போது செய்யும் அனைத்து விசயங்களையும் ஏற்கனவே சீனா செய்து முடித்துவிட்டது. குறிப்பாக, வடகிழக்கில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், பாதுகாக்கவும் அத்தனை உதவிகளையும் செய்திருக்கிறது சீனா; செய்து கொண்டுமிருக்கிறது.

sr

இதற்கு பின்னணியிலிருந்து சீனாவுக்காக உதவியது இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாதான். இவர், சீனாவின் எடுபிடி! சீனாவின் உளவாளி! மீன் வளத்துறை அமைச்சர் என்கிற அதிகாரத்தை வைத்து வடக்கிழக்கில் உள்ள மீனவர்களை அப்படியே சீனாவுக்காக தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார் டக்ளஸ் தேவானந்தா.

ஆக வடகிழக்கில் உள்ள மீனவர்கள், தமிழர்கள் எல்லோரும் சீனாவின் ஆதரவாளர்களாக மாறியிருப்பதை உடைக்கவே இந்திய அரசு தொடர்ச்சியாக போராடி வருகிறது. இதற்காகத்தான் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தல், மீனவர்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள், தமிழர்களுக்கான அத்யாவசிய பொருள் உதவிகள் எனத் தொடர்ச்சியாக செய்யத் துணிகிறது. அதற்காகவே வாரத்திற்கு ஒரு அமைச்சர் என்கிற அளவில் இலங்கைக்கு தனது அமைச்சர்களை அனுப்பி வைத்தபடி இருக்கிறது இந்திய அரசு என்கிறார் கள் இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள்.

இந்திய அமைச்சர்களின் இலங்கை பயணத்தின் பின்னணிகள் இப்படியிருக்க, எல்.முருகனுடன் இணைந்து சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு இலங்கை அரசு சார்பில் எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. அதாவது, முருகனும் அண்ணாமலையும் ஒரே விமானத்தில் பயணம் செய்து இலங்கையில் தரையிறங்கியபோது, முருகனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வரவேற்றது இலங்கை அரசு. முருகன் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை கலந்து கொண்டாலும் அவருக்கான மரியாதையை இலங்கை அரசு தரவில்லை. இலங்கை அரசு சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படங்களிலும் கூட அண்ணாமலையைத் தவிர்த்தே வெளியிட்டது இலங்கை அரசு.

srlanka0visit

அண்ணாமலைக்கு எந்த முக்கியத்துவமும் தரவேண்டாம் என இந்திய அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே அண்ணாமலையை புறக்கணித் திருக்கிறது இலங்கை. மேலும், இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட செய்திக்குறிப்புகளிலும் புகைப்படத்திலும் அண்ணாமலையின் பெயரை பயன்படுத்தவில்லை. அதேபோல, இலங்கை பத்திரிகைகளும் சரி, இந்திய பத்திரிகைகளும் சரி அண்ணாமலையைப் பற்றி பெரிதாக எழுதவில்லை.

இந்த பயணத்தில் எல்.முருகனின் அலுவலக உதவியாளராகவே (ஆஃபிஸ் அசிஸ்டெண்ட்) அண்ணாமலையை இந்திய-இலங்கை அரசுகள் ட்ரீட் செய்துள்ளன. தமிழ் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் அழைத்ததன் பேரில் இலங்கைக்கு அண்ணாமலை சென்றதால் அந்த தலைவர்கள் கொடுத்த வரவேற்பைக் கடந்து வேறு எந்த முக்கியத்துவமும் அண்ணாமலைக்கு அரசு சார்பில் இலங்கையில் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க. வினர்,’"13-வது சட்டத்திருத்தம், மீனவர்கள் பிரச்சனை, தமிழர்களுக்கான அதிகார பரவல் குறித்தெல்லாம் இலங்கையில் பேசுவேன் என சென்னையில் உதார் விட்டிருந்த அண்ணாமலை, அது குறித்து எந்த பேச்சுவார்த்தையையும் இலங்கை அரசுடன் நடத்தவில்லை. இலங்கை அரசுடன் அதிகாரப்பூர்வமாக விவாதித்தது, ஆலோசித்தது அனைத்தும் இணையமைச்சர் முருகன் தான். இந்த பயணத்தினூடாக அண்ணாமலையை அசிங்கப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு'' என்கிறார்கள்.