கடந்த சில மாதங்களாக, அடுத்தடுத்து, ஜி.எஸ்.டி., மருந்துப் பொருட்கள், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், பிரிண்டிங் பேப்பர், ஜவுளி நூல் என அனைத்தின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதால் இந்தியாவிலுள்ள நடுத்தர, அடித்தட்டு மக்கள் விழி பிதுங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே கடந்த இரண்டாண்டுகளாகக் கொரோனாவின் தாக்கத்தால் வருமான இழப்பைச் சந்தித்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருபவர்களுக்கு, இந்த விலைவாசி உயர்வு, எதிர்கொள்ள முடியாத மிகப்பெரிய அபாயமாக உருவெடுத்துவருகிறது.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாயைத் தாண்டிவிட்டது. டீசல் விலையும் நூறைத் தொட்டுவிட்டது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது. இதிலும், மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் கதி கலங்கியிருக்கிறார்கள். வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை, சரசரவென உயர்ந்து, 2,500 ரூபாயை நெருங்கியுள்ளது. ஒரே நாளில் 268 ரூபாய் விலையேற்றமெல்லாம் செய்து அதிர்ச்சியளித்தது மோடியின் ஒன்றிய அரசு.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வால், டீ, காபி, சமோசா தொடங்கி, ஹோட்டல் உணவு வரை அனைத்தின் விலையும் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய் விலையும் தொடர்ச்சியாக அதிகரித்த நிலையில், ரஷ்யா -உக்ரைன் போர் காரணமாக, சூரியகாந்தி இறக்குமதியில் ஏற்பட்ட பாதிப்பால், சூரியகாந்தி எண்ணெயின் விலை எகிறியுள்ளது. ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெயின் விலை தற்போது 150 ரூபாயிலிருந்து 230 ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது. கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெயின் விலையும் லிட்டருக்கு 190 ரூபாயாக ஏறியுள்ளது. பாமாயில் இறக்குமதியில் பெருமளவு இந்தோனேஷியாவை நம்பியுள்ள நிலையில், பாமாயில் ஏற்றுமதி செய்வதற்கு இந்தோனேஷியா விதித்த தடையால், பாமாயில் விலை ஏறி, இப்போது தடை நீக்கப் பட்டுள்ளது.
இதெல்லாம் விடக் கொடுமை, உடம்புக்கு ஒரு நோவென்றால் வாங்கக்கூடிய மருந்து மாத்திரை களின் விலையையும் ஏப்ரல் 1 முதல் 10.7% அளவுக்கு உயர்த்தப்பட்டுள் ளது. இப்படி விலையேற்றம் செய்யப்பட்ட மருந்து மாத்திரைகள் அனைத்துமே, வலி நிவாரணி, ஆண்டிபயாடிக், ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவற்றுக் காகப் பயன்படுத்தக்கூடியவை. இவைபோக, பிரிண்டிங் பணிக்குத் தேவையான பேப்பர், போர்டுகள் உள்ளிட்ட அனைத்தின் விலையும் அதிகரித்துள்ளதால், ஸ்டேஷனரி செலவும் அதிகரிக்கும். ஜவுளிக்கான நூல் விலை அதிகரித்துள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
பொதுமக்களின் சராசரி வருமானமும், விலைவாசியும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால், வருமானம் குறைந்து, விலைவாசி ஏறியிருப்பது பொதுமக்களின் வாங்கும் திறனைச் சிதைத்திருக்கிறது. வாங்கும் திறன் குறைந்திருப்பதற்கு, கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது டூ வீலர்கள் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவே சாட்சியாக உள்ளது. டூ வீலர்கள் விற்பனையில் கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தோடு ஒப்பிட்டால், நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 21% அளவுக்கு அடிவாங்கியிருக்கிறது. வாங்கும் சக்தி குறைந்திருப்பதே இதற்கான காரணமாகும்.
இப்படி அனைத்தின் விலையும் ஜெட் வேகத்தில் அதிகரிப்பதால் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துவோரின் நிலை மிகவும் சிக்கலாகிறது. ஒன்றிய அரசோ அதானியை உலகின் நம்பர் ஒன்னாக முன்னேற்றுவதில் மட்டுமே அக்கறை காட்டுகிறது.
தற்போது, அப்பளம், சாக்லேட், வெல்லம் உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தும் எண்ணத்தில் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசித்து வருகிறார். விலைவாசி மேலும் எகிறக்கூடும். இப்படி வரி வரியென சாமானிய மக்களின் வருமானத்தை அடிதண்டமாக அபகரிப்பது, இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சீரழிவு நிலைக்குத்தான் இந்தியாவையும் இழுத்துச் செல்லக்கூடும்.
-தெ.சு.கவுதமன்
----------------------------------
இசையரசு (ஆட்டோ ஓட்டுநர்)
இன்றைய விலைவாசியில், ஆட்டோவுக்கு 1 லிட்டர் பெட்ரோல் போட, ஆயிலோடு சேர்த்து 150 ரூபாய்வரை ஆகிறது. 150 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு ஆட்டோ ஓட்டினால், 500 -600 ரூபாய் வரையாவது சம்பாதித்தால்தான் கட்டுப்படியாகும். ஆனால் ஓலா, ஊபர், ரேப்பிடோ போன்ற தனியார் நிறுவனங்கள் எங்களுக்குப் போட்டியாக இறங்கி எங்கள் வாடிக்கையாளர்களை வசப்படுத்துகிறார்கள். எனவே செலவழிக்கும் பெட்ரோல், கேஸ் விலைக்கேற்ற வருமானத்தைப் பெற இயலவில்லை. இந்த விலைவாசி உயர்வால் ஏற்படும் மன உளைச்சலின் வெளிப்பாடு, குடும்ப வன்முறையும், குற்றச்செயல்களும் அதிகரிக்கவே வழிவகுக்கிறது”
எஸ்.விஜயலட்சுமி பாலமுருகன் (குடும்பத் தலைவி)
இப்போது சிலிண்டர் விலை, மளிகைப் பொருட்களின் விலை ஏறிவிட்டதால் மாத பட்ஜெட் ரொம்ப இடிக்குது. அதனால தேவை யான செலவைக்கூட குறைச்சுக்க வேண்டியிருக்கு. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவர ஸ்கூட்டரைப் பயன்படுத்தி வந்தேன். தற்போது பெட்ரோல் விலை கட்டுப்படியாகாமல் இலவசப் பேருந்தில் சென்று வருகிறேன். வாங்கும் பொருள் ஒவ்வொன்றிலும் விலை ஏறியிருந்தாலும் அதற்கேற்ப சம்பளம் உயராததால் எங்க பாடு திண்டாட்டம்தான்.’