மிழக அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப் படவிருக்கிறார்கள் என்பதை கடந்த இதழ் அட்டைப்பட ஸ்டோரியில் குறிப்பிட்டி ருந்தோம். அதன்படி, 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்திருக்கிறது தி.மு.க. அரசு.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக, உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்.சை நியமித் திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

IAS

கடந்த 3 ஆண்டுகளாக முதல்வரிடமிருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி 4 அதிகாரிகளின் ராஜ்ஜியம் கோட்டையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறது. இதனால், நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக பல விசயங்கள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படாமல் அந்த அதிகாரிகளால் தடுக்கப்பட்டன. நேர்மையானவர்கள் என காட்டிக்கொண்ட அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பல ஊழல், முறைகேடுகளில் கூட நடவடிக்கை எடுக்காமல் ஊழல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக இருந்தனர்.

Advertisment

இப்படிப்பட்ட சூழலில், துணை முதல்வர் நியமனம் அந்த 4 பேரை கவலைகொள்ள வைத்திருக்கிறது. தற்போது, உதயநிதிக்கு செக்ரட்டரியும் நியமிக்கப்பட்டிருப்பதால், இனி உதயநிதியை சுற்றி அதிகாரிகள் லாபி உருவாகும். இதுவரை முதல்வர் ஸ்டாலினை நெருங்கவோ அல்லது முக்கிய தகவல்களைச் சொல்லவோ முடியாதிருந்த சூழல் மாறும்; உதயநிதி மூலமாக பல உண்மையான தகவல்கள் ஸ்டாலினுக்குப் போய்ச்சேரும். அந்த 4 பேரின் ஆதிக்க ராஜ்ஜியத்துக்கு முற்றுப்புள்ளி விழும் என்கிறது தலைமைச் செயலக வட்டாரங்கள்.

மேலும், 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் குறித்து கோட்டையில் விசாரித்தபோது, ‘’அதிகாரிகள் மாற்றத்தில் அந்த 4 பேரின் தலையீடுகள் அதிகம் இருக்கின்றன. மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குந ராக இருந்த கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானியை அங்கிருந்து மாற்றி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கமிஷனராக நியமித்திருக்கிறார்கள். மின்சார வாரியத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததால் ராஜேஷ் லக்கானி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமைச்செயலகத்துக்குள் இவர் வந்துவிடக்கூடாது என்கிற வகையில் ஐ.ஏ.எஸ். லாபி விளையாடியது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கமிஷனர் பதவி அமுதா ஐ.ஏ.எஸ்.சிடம் கூடுதலாக இருந்தது. ஏற்கனவே வருவாய்த் துறை செக்ரட்டரி, முதல்வரின் முகவரி துறையின் செக்ரட்டரி ஆகிய 2 துறைகள் அமுதாவிடம் இருக்கும்போது கூடுத லாக கமிஷனர் பதவியும் கொடுக்கப்பட வேண்டுமா? என்கிற முணுமுணுப்புகள் இருந்து வந்தது.

Advertisment

ias

இந்த நிலையில், கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தை மீட்பது தொடர்பான வழக்கில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமனுக்கு தெரியாமலே, வேறு ஒரு வழக்கறிஞரை நியமித்து கோர்ட்டில் வாதிட வைத்திருக்கிறார் அமுதா. இது, ராமனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே, "இது சரிபட்டு வராது; தலைமை வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்' என முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்து விட்டார் ராமன்.

இது தொடர்பான பிரச்சனையை ஸ்டாலின் ஆராய்ந்த போது, அமுதா செயல்பட்ட சில வில்லங்கங்கள் தெரிய வந்துள்ளன. இதனையடுத்தே, அமுதா விடமிருந்த வருவாய்த்துறை கமிஷனர் பதவி பறிக்கப்பட்டு, அந்த பதவியில் ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டிருக்கிறார். பருவமழை கடுமையாக இருக்கப்போகும் சூழலில் இந்த பதவி இவருக்கு சவால் மிகுந்ததுதான்''” என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.

மின்சார வாரியத்தின் புதிய தலைவராக நந்தகுமாரை நியமித்துள்ளனர். இவரது நியமனம்தான் அதிகாரிகள் மாற்றத்திலேயே அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக் கிறது. கோட்டையில் கோலோச்சும் அந்த அதிகாரிகளின் செல்லப் பிள்ளையாக இருப்பவர் நந்தகுமார். எப்படிப் பார்த்தாலும் 6 மாதங் களுக்கு ஒருமுறை பவர்ஃபுல் போஸ்டிங்கில் இவர் நியமிக்கப் படுவார். அப்படித்தான் இந்த நியமனமும் நடந்துள்ளது.

இதுகுறித்து சீனியர் ஐ.ஏ.எஸ்.களிடம் விசாரித்தபோது, "முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் கரூர் விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி ஆகியோருக்கு உறவு ரீதியாக மிக நெருக்கமானவர் நந்தகுமார். அவர்களின் ஆசி எப்போதும் இவருக்கு இருந்து வருகிறது. ஆனால், மேற்கண்ட 4 அ.தி.மு.க.வினருக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

ias

இப்படிப்பட்ட சூழலில், அ.தி.மு.க. முன்னாள்களை எதிர்க்கும் செந்தில்பாலாஜியின் துறைக்குள் அ.தி.மு.க.வின் ஆதரவாளரான நந்தகுமாரை கொண்டு வந்திருப்பதுதான் பல கேள்விகளை உருவாக்குகிறது. குறிப்பாக, செந்தில்பாலாஜிக்கு செக் வைக்க, கோட்டையில் கோலோச்சும் அதிகாரிகளின் கைங்கரியமா? அல்லது எடப்பாடியின் சிபாரிசா?

ஏற்கனவே, பள்ளிக்கல்வித்துறையில் நந்தகுமார் நியமிக்கப்பட்டபோது நிறைய பிரச்சனைகளை அதிகாரிகளும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் எதிர்கொண்டனர். துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் செயல்பட முடியாமல் தவித்தார். அதிருப்திகள் கட்டுக்கடங்காமல் வெடித்த நிலையில்தான் அவர் மாற்றப்பட்டார். அதன்பிறகு அவர் நியமிக்கப்பட்ட எல்லா துறைகளிலும் பிரச்சனைகள்தான் வெடித்தன. இந்த நிலையில், செந்தில்பாலாஜி துறையில் அவர் நியமிக்கப் பட்டிருக்கிறார். துறையில் என்ன கலகம் வெடிக்குமோ? போகப்போகத்தான் தெரி யும்”என்கிறார்கள் அழுத்தமாக.

பொதுவாகவே, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றத்தில் நிறைய சர்ச்சைகள் இருந்துவருகிறது. துணைமுதல்வராக உதயநிதி பொறுப்பேற்றிருப்பதால் இனி கோட்டையின் சூழலும் மாறும் என்கிற எதிர்பார்ப்பு அதிகாரிகளிடம் எதிரொ லிக்கிறது.