ல்வேறு கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் தமிழகம் எங்கும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த அடிப்படையில் கள்ளக் குறிச்சி மாவட்ட அ.தி.மு.க மாசெவும் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ.வுமான குமரகுரு அவரது தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று நிவாரண உதவிகளை வழங்குகிறார்.

mmகடந்த மே 27ஆம் தேதி பரிந்தல் என்ற கிராமத்திற்கு இரவு 8 மணியளவில் நிவாரண உதவி வழங்க சென்றுள்ளார். அந்த ஊரில் அவரது கட்சி காரர்கள் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் நிவா ரணம் பெற டோக்கன் வழங்கியுள்ளனர். இதனால் எம்.எல்.ஏ நிவாரணம் வழங்க ஆரம்பித்ததும் பொதுமக்கள் மத்தியில் கோபம் உண்டானது. “மூன்று மாதமாக எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. வரு மானம் இல்லாமல் கொரோ னா ஊரடங்கால் பசி பட்டினியோடு வீட்டிலேயே இருக்கும் எங்களை பார்ப்பதற்கு உங்களுக்கு இப்போதுதான் வழிதெரிந்ததா? நிவாரணம் கொடுப்பதிலும் உங்கள் கட்சிகாரர்களாக பார்த்து கொடுக்கிறீர்கள். இதற்காக இந்த இரவு நேரத்தில் மணிக்கணக்கில் சாலையோரத்தில் காத்துகிடக்க வேண்டுமா? வரும் தேர்தலில் எங்கள் ஓட்டு உங்களுக்கு தேவை இல்லையா?'' எனக் கொந்தளித்துள்ளனர்.

அதில் ரவி, கலியன் என்ற இரு இளைஞர்களும் எம்.எல்.ஏ.விடம் நேருக்குநேர் கேள்வி கேட்டனர். கோபமான எம்.எல்.ஏ குமரகுரு, ""எவன் அப்பன் வீட்டு காசிலும் நான் இந்த உதவியை செய்யவில்லை. என் சொந்த பணத்தில் வாங்கிகொடுக்கின்றேன் கொடுக்கிறத வாங்கிக்க. அடுத்த முதல்வரே நான்தான். எங்கிட்டயே எதிர்த்து கேள்விகேட்க உங்களுக்கு அவ்வளவு தைரியமா?'' என ஆவேசமாக பேசியபடி, தனது பாதுகாப்புக்கு வந்திருந்த எலவாசனூர்கோட்டை எஸ்.ஐ மாணிக்கத்தை கோபத்துடன் திரும்பிப்பார்க்க, இரு இளைஞர்களையும் காவல் நிலையம் கொண்டு சென்றார் எஸ்.ஐ மாணிக்கம். எம்எல்ஏவும் நிவாரணத்தை அரைகுறையாக கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து, 500க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் எலவாசனூர்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். இந்த தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை திமுக ஒ.செ வைத்தியநாதன் அங்கே வந்தார். அவரும் எஸ்.ஐ.யிடம் கேள்வி கேட்டுள்ளார். ஆனால் எஸ்.ஐ மாணிக்கம் அந்த இளைஞர்களை விடுதலை செய்ய முடியாது என கறாராக பேசியுள்ளார். இது பற்றி நாம் திமுக ஒ.செ வைத்தியநாதனிடம் கேட்டோம். சட்டத்திற்குப் புறம்பாக அந்த இரு இளைஞர்களையும் கைது செய்தது தவறு என கூறி வாக்குவாதம் நடந்தது. இந்த தகவல் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி விஜயகுமார் அறிந்து அவர் கோட்டை காவல்நிலையத்திற்கு விரைந்து வந்தார். அங்குள்ள நிலைமையை பார்த்து புரிந்துகொண்ட அவர் அந்த இளைஞர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு எஸ்.ஐ மாணிக்கத்திடம் கூறினார். அதற்கு மாணிக்கம் இவர்களை வெளியே அனுப்பமுடி யாது. எம்.எல்.ஏ சொன்னால்தான் அனுப்பு வேன் என்று டிஎஸ்பியிடமே எதிர்விவாதம் செய்தார். டி.எஸ்.பி. கோபமாகப் பேசியபிறகே அந்த இளைஞர்களை எஸ்ஐ மாணிக்கம் வெளியில் அனுப்பினார். மக்கள் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் எஸ்ஐ மாணிக்கம், தன் உயர் அதிகாரியின் உத்தரவை கூடமதிக்காமல் எம்எல்ஏவின் உத்தரவுக்காக காத்திருந்தது கண்டிக்கத்தக்கது. ஆளும் கட்சி எம்எல்ஏவின் ஏவல் ஆளாக பணிசெய்யும் இந்த எஸ்.ஐ.மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisment

mla

எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த வாக்களித்த மக்கள் கேள்விகேட்பது சனநாயக உரிமை. அதுகூட தெரியாமல் வாக்களித்த மக்களையே சிறைக்கு அனுப்பப் பார்க்கும் இவர், கடந்த 15 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக உள்ளார். தொகுதிமக்களுக்கு உருப்படியான திட்டங்களை கொண்டு வரவில்லை. தொகுதி முழுக்க விவசாயம், அதை சார்ந்த கூலிவேலை இதைமட்டுமே நம்பி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சரியான வேலை யின்றி ஆயிரக்கணக்கான மக்கள் கேரளா, கர்நாடகா, மும்பை, சன்டிகர், சென்னை இப்படி பல்வேறு மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி சென்றுவிட்டனர். இங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரு சிறுதொழிற்சாலைகூட கொண்டு வராத எம்.எல்.ஏ பின்தங்கிய பகுதியான இப்பகுதி பிள்ளை கள் படிப்பதற்கு அரசு சார்ந்த கல்லூரிகள்கூட துவக்க வில்லை. ஆனால் இவர் சொந்தமாக கல்லூரியையும் பள்ளியையும் துவக்கிகொண்டுள்ளார். இப்படிப் பட்டவர் மக்களின் தேவைகளை நிறைவேற்றாவிட் டாலும்கூட பரவாயில்லை அவர்களை காவல்துறை யை ஏவிவிட்டு வதைக்காமல் இருந்தாலே போதும்'' என்கிறார் தி.மு.க. ஒ.செ வைத்தியநாதன்.

இந்த பிரச்சனை குறித்து எம்.எல்.ஏ. குமரகுரு என்ன பதில் சொல்கிறார் என்பது பற்றி அவரிடமே கேட்டோம்.

""கொரானா நிவாரணம் கட்சி பார்க்காமல் எனது தொகுதி முழுவதும் உள்ள 1,25,000 ரேஷன் கார்டுகளுக்கும் பத்து கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை கடந்த 41 நாட்களாக இரவு பகல் பாராமல் வழங்கிவருகிறேன். அன்று பரிந்தல் கிராமத்திற்கு நிவாரணம் வழங்க சென்ற போது நிவாரணம் பெறும் மக்களுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங் கப்பட்டதில் எனக்குத் தெரியா மல் சில தவறுகள் நடந்துள்ளன. மக்கள் கோபத்துடன் பேசினார் கள். அப்போது நான் தவறாக எதையும் பேசவில்லை. அடுத்த முதல்வர் நான் என்று எந்த அடிப்படையில் கூறுவேன்? அதற்கான தகுதி எனக்கு இல்லை என்பதை அறிந்தவன். மேலும் அம்மா அவர்கள் மறைவுக்கு பிறகு தெய்வமாக முதலமைச்சரை பார்க்கிறேன். என் கூட பிறவாத சகோதரர் அவருக்கும் எனக்குமான நெருங்கிய நட்பு பற்றி பலருக்கும் தெரியும்.

mlaஎன் பெயருக்கும் எங்கள் கட்சிக்கும் கெட்டபெயர் உருவாக்குவதற்கு திட்டமிட்டு தி.மு.க ஒ.செ வைத்தியநாதனை முன்னிறுத்தி செயல்படுகிறார்கள். அந்த ஊரில் ஏற்பட்ட அந்த சின்ன சலசலப்பின் போது போலீசாரால் அழைத்துச்செல்லப்பட்ட அந்த இருவரையும் விட்டுவிடுமாறு போலீசாரை கேட்டுகொண்டேன். அவர்களை நான் கைது செய்ய சொல்லவில்லை. என்னை பற்றி தவறான தகவலை வாட்சப்பில் வெளியிட்ட ஒரு தி.மு.க பிரமுகர்மீது போலீஸ் நடவடிக்கை எடுப்பதாக கூறியதைக்கூட நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். தொகுதிமக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளையும் திட்டங்களையும் செய்துவருகிறேன். என்னை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். தி.மு.க.வினர் சூழ்ச்சி பலிக்காது .போலீசாரால் அழைத்துச்செல்லப்பட்ட அந்த இரு இளைஞர்களும் ஊர்மக்களும் மறுநாள் காலை என்னிடம் வந்து நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து விட்டு சென்றனர். எந்த பாகுபாடுமில்லாமல் அந்த ஊரில் அனைத்து மக்களுக்கும் கொரோனா உதவியை வழங்கியுள்ளோம். எனவே நான் முதல்வருக்கும் கட்சிக்கும் மக்களுக்கும் விசுவாசமாக நடந்து வருகிறேன். என்னை பற்றி தொகுதியில் நன்கு விசாரித்து கொள்ளுங்க'' என்றார்.

சம்பவத்திற்கு மறுநாள் எலவாசனூர் கோட்டை எஸ்.ஐ. மாணிக்கம் சம்பந்தப்பட்ட பரிந்தல் இளைஞர்கள் ரவி, கலியன் ஆகிய இருவரையும் சில அ.தி.மு.க.வினருடன் காவல் நிலையம் வர வழைத்து, அங்கிருந்து அவர்களை எம்.எல்.ஏ வீட்டிற்கு அழைத்து சென்று எம்.எல்.ஏ.விடம் மன்னிப்பு கேட்கவைத்து அவர்களை அனுப்பிவைத்துள்ளார் என்கிறார்கள் கிராமஇளைஞர்கள்.

தொகுதியில் எம்.எல்.ஏ.விற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் இருக்கவே செய்கிறது. 31ஆம் தேதி மடப்பட்டு அருகே உள்ள கருவேப்பிலபாளையம் கிராமத்திற்கு நிவாரணம் வழங்கசென்ற எம்.எல்.ஏ.வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எம்.எல்.ஏ. நிவாரணம் வழங்கும்போது அவருக்கு எதிராக பலர் கோஷமிட்டனர். அப்போது ஏகப்பட்ட போலீஸ் அவர்களை தடுத்து நிறுத்தியது பெயரளவிற்கு சிலருக்கு மட்டும் நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ மற்றவர்களுக்கு லோக்கல் கட்சிக்காரர்கள் மூலம் வழங்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.

இப்படிப்பட்ட எதிர்ப்புகளையடுத்து எம்.எல்.ஏ. குமரகுரு வரும் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியை குறிவைத்துள் ளாராம். இதற்கு முன்னோட்டமாக திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கொரோனா நிவாரணத்தை மாவட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தை அழைத்து வந்து இருவரும் வழங்கியுள்ளனர். திருக்கோவிலூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ.வாக உள்ள பொன்முடி மீண்டும் விழுப்புரம் தொகுதிக்கு மாற உள்ளதாகவும் விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள மந்திரி சண்முகம் அவரது சொந்த தொகுதியான மைலம் தொகுதிக்கு மாற உள்ளதாகவும் இதனடிப்படையிலேயே திருக்கோவிலூருக்கு உட்பட்ட கிராமங்களில் குமரகுரு நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கிவருகிறார்'' என்கிறார்கள் அ.தி.மு.க. உடன்பிறப்புக்கள்.

-எஸ்.பி.சேகர்