செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 6 மணி. ஜீவா நகரிலுள்ள மசூதிக்கு சென்று தொழுகையை முடித்துக்கொண்டு தனது 7 வயது மகனுடன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார் வசீம் அக்ரம். அப்போது மாஸ்க் அணிந்த ஆறு மர்ம நபர்கள் அவரை மடக்கி வெட்ட முயன்றனர். உடனே தன் மகனை கீழே தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து ஓடத் துவங்கினார். ஆறுபேர் கொண்ட கும்பல் வசீமை விரட்டி மடக்கி சரமாரியாக வெட்டினர். கழுத்தை குறிவைத்து வெட்டிய அந்தக் கும்பலுக்கு பாதுகாப்பாக மாருதி எர்டிகா காரொன்று பின்னாடியே வந்து, அக்ரமின் உயிர்போய்விட்டதா என உறுதிசெய்துகொண்டு, பின் அந்த கும்பலை ஏற்றிக்கொண்டு புயல் வேகத்தில் கிளம்பி மறைந்தது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம் பாடி நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம். வாணியம்பாடி நகராட்சியில் சில ஆண்டு களுக்கு முன்பு கவுன்சிலராக இருந்தவர். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர், இப்போது இஸ்லாமிய கூட்டு இயக்கங்களின் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்துவந் தார். வாணியம்பாடியில் ஏதாவது சட்ட விரோத சம்பவங்கள் நடந்தால் காவல் துறைக்கு சொல்லி நடவடிக்கை எடுத்துவந்தார்.
வசீம் அக்ரம், குடியிருப்பு சாலையில் ஓடஓட விரட்டப்பட்டு கொலைசெய்யப் பட்டதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். படுகொலை தகவல் காவல்துறைக்கு சொல்லப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், கொல்லப்பட்டவர் உடலைக் கைப்பற்றி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வசீம் அக்ரமின் ஆதரவாளர்கள், கட்சியினர், பொதுமக்கள் வாணியம்பாடி நகர பேருந்து நிலையத்தில் சாலைமறியல் செய்தனர். இதனால் வாணியம்பாடி நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.
வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு, திருப்பத் தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) செல்வகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து விசா ரணை நடத்தினார். வடமாவட்ட காவல் துறை அலர்ட் செய்யப் பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான பாலுச்செட்டிசத்திரத்தில் வாகன சோதனையின் போது வண்டலூரைச் சேர்ந்த 19 வயது பிரசாத், 24 வயது டெல்லிகுமாரை போலீஸார் கைது செய்தனர். விசாரணை யில், சென்னை வண்ட லூர் பிரபல கூலிப்படை தலைவன் சீஸிங் ராஜா, செல்லா கேங்கில் உள்ள எபி, டில்லிகுமார், ராஜன், மினிஸ், பிரவின், சிதம் பரம் கதிர், பிரசாந்த், அகஸ்டின், சத்யா ஆகியோர் இந்த கொலையைச் செய்துள்ளதாகக் கூறப்படு கிறது. கைதான இருவரும் இம்தியாஸ் சொல்லித் தான் கொலை செய்தோம் என்றுள்ளார்கள்.
யார் இந்த இம்தியாஸ்?
வாணியம்பாடி நகரைச் சேர்ந்த இம்தியாஸ், 15 வருடங்களுக்கு முன்பு லாரி ஒன்றைத் திருடிவிட்டு அந்த வழக்கிலிருந்து தப்பிக்க சென்னை ஓடி அங்கேயே பழைய இரும்பு வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வாணியம்பாடிக்கு வந்தவர், இங்கேயும் பழைய இரும்பு வியாபாரத்தில் இறங்கியுள்ளார். வெளிப்படை தொழில் அதுவாக இருந்தாலும் மறைமுகமாக ஆட்களை வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
தொடக்கத்தில் வசீம் -இம்தியாஸ் இருவரும் நண்பர்களாகத்தான் இருந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இம்தியாஸின் கஞ்சா விற்பனை குறித்து வாணியம்பாடி போலீஸாரிடம் வசீம் தகவல் சொல்ல அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதன் பின்னர் எஸ்.பி. சிபிசக்கரவர்த்திக்கு தகவல் சொல்லப்பட்டதும் அவரது குழு ஜூலை மாதம் வாணியம்பாடி ஜீவா நகரிலுள்ள இம்தியாஸ் கிடங்கில் ரெய்டு செய்து 8 கிலோ கஞ்சா, 10 பட்டா கத்தி, 10 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
அப்போதுதான் கஞ்சா விற்பனை, ரவுடிகள் அடைக்கலம், ரவுடிகள் தொடர்பு என்பது பலருக்கும் தெரியவந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ் முக்கிய குற்றவாளியான இம்தியாஸை கைது செய்யவில்லை. வாணியம் பாடியில் கஞ்சா விற்பனை நடப்பது குறித்து வசீம் அக்ரம்தான் போலீஸுக்கு தகவல் சொன்னாரென போலீஸிலுள்ள கருப்பு ஆடுகளே இம்தியாஸிடம் கூறியுள்ளனர். அதனைக் கேட்டு கோபமான இம்தியாஸ் ஆட்கள் வசீமுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
தனக்கு கொலை மிரட்டல் வருவது குறித்து வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகாரளித் துள்ளார் வசீம். போலீஸ் அதிகாரிகளோ புகாரை வாங்காமல் அலட்சியப்படுத்தியுள்ளனர். மிரட்டல் இறுதியில் கொலையில் முடிந்துள்ளது என் கிறார்கள் இருவர் குறித்தும் விவரம் அறிந்தவர்கள்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, கொலை செய்யப்பட்ட வசீம் குடும்பத்துக்கு நேரில்வந்து ஆறுதல் கூறினார். இந்த வழக்கை ஒரு கண்துடைப்பாக இருக்காமல் கூலிப்படை சென்னையில் எப்படி இயங்குகிறது என்பதைக் கண்டறிந்து ஒடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றவாளிகளை பிடிக்க ஒருபக்கம் போலீஸ் தீவிரம் காட்டினாலும், கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்தது மட்டும்தான் கொலைக்கு காரணமா? வேறு ஏதேனும் காரணங்களுண்டா… எனவும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது தனிப்படை.