"வேடர் நாட்டில் சிங்கங் களும் புலிகளும்' என்ற வரலாற்று ஆய்வு நூலை எழுத்தாளரும் வழக்கறிஞருமான தி.லஜபதிராய் எழுதியுள்ளார். இந்நூல் முழுக்க முழுக்க இலங்கையின் தோற்றம், பூர்வக்குடிகள், தமிழர், சிங்களவர் இடையிலான இன, மொழி, கலாச் சாரத் தொடர்புகள், விடுதலைப்புலிகளின் போராட்டம், இறுதி யுத்தம், அதன் பின்னுள்ள அரசியல் போன்றவற்றை எண்ணற்ற தரவுகளிலிருந்து பதிவு செய்கிறது.
இலங்கை, மடகாஸ்கர் தீவு, செசல்ஸ் தீவுகள், இந்தியாவுடன் இணைந்து பெரும் நிலப்பரப்பாக ஐம்பது மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்து, காலப்போக்கில் அவை பிளவுபட்டுப் பிரிந்துள்ளன. ஏறக்குறைய 7,000 வருடங்களுக்கு முன்பு இந்தியாவும் இலங்கையும் பிரிந்துள்ளன போன்ற புவியியல் விவரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இலங்கையின் பூர்வகுடிகளான வேடர்கள், தமிழருமல்ல, சிங்களருமல்ல என்று குறிப்பிடுகிறார்.
இந்நூலில், விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன், எளிமையாக வாழ்ந்ததாகவும், இலங்கை பொருட்கள் எதையும் பிரபாகரன் பயன்படுத் தியதில்லை என்றும், அவர் மது அருந்துவதில்லை என் றும் அவரது குணநலன்கள் குறித்து பதிவுசெய்யப்பட் டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இளம் பெண்கள் ஆர்வத்தோடு பங்கெடுத்ததையும், கண்ணி யமான தலைவரான பிரபாகரன், தனது படையணி யிலுள்ள பெண்களை சகோதரத்துவத்துடன் வழி நடத்தினார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
புலிகளின் எளிமையான திருமணங்களில் இந்து சமயச் சடங்குகளோ, வேத மந்திரங்களோ இல்லையென்றும், தாலியில் தமிழ்க் கலாச்சாரச் சின்னங்கள் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர்களின் வாழ்வியல் குறித்த செய்தி கள் பதியப்பட்டுள்ளன. அதேபோல், விடுதலைப் புலிகள் சாதியொழிப்பை கொள்கையாகக் கொண்டிருந்த தையும், மணக்கொடைத் தடுப்புச் சட்டங்கள் நிறைவேற்றப் பட்டதையும் குறிப்பிட்டுள்ளது.
"சூசை தலைமையில் செயல்பட்ட விடுதலைப்புலிகளின் கடற்படை பிரிவு, பல கடற்சமர்களில் ஈடுபட்டு சிங்களக் கடற்படை கப்பல்களை அழித்தது' எனக் கூறப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கப்பலான சாகர வர்த்தனா, விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட பிறகு தற்செயலாகத் தப்பிப் பிழைத்த கமாண்டர் அஜித் போயகொட, சூசையுடன் கைகுலுக்கியதை பெருமையாகச் சொல்கிறார். சூசையின் கட்டுப்பாட்டில் இயங்கிய கடற்புலிகள், வரைபடங்களோ, நவீன கருவிகளோ இல்லாமல், விண்மீன்கள் உதவியுடன் செயல்படக்கூடிய திறன்மிக்கவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
சூசை, சொர்ணம், தீபன், கருணா, துர்கா, விதுசா, தமிழ்செல்வன், பானு, பால்ராஜ், பொட்டு அம்மான் என ஆற்றல்மிகு தளபதிகளைக் கொண்ட பிரபாகரனின் முன்பாக, இலங்கை முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனா, பிரேமதாசா, சந்திரிகா குமாரதுங்கா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் மண்டியிட்டதாக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பல்வேறு பெருமைகளைக் குறிப்பிட்டுள்ள இந்நூலில், புலிகளின் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் அலசப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில்... இலங்கையின் அரசியல் குறித்த புதிய பரிமாணத்தை நூலில் காணலாம்!
வெளியீடு : நீலம் பதிப்பகம்
விலை : ரூ. 380
-தெ.சு.கவுதமன்