அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் 157 நாட்களில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பை அறிவித்திருக்கிறார். மே 28ஆம் தேதி வெளியான இந்த தீர்ப்பு, அன்றைய தினம் வெளியான மாநிலங்களவை தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலைவிட பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மாலை ஏழரை மணிக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த அண்ணா பல்கலை மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மூலையில் அமர்ந்து தனது காதலனோடு இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது பல்கலைக்கழக பின் வாசல் வழியாக வந்த ஞானசேகரன் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் அந்த மாணவியை எப்படியெல்லாம் துன்புறுத்தினார் என்பதை அவர் மீது போடப்பட்ட குற்றச்சாட்டுகளின் மீதான சட்டப் பிரிவுகள் விளக்குகிறது.
மாணவியின் விருப்பத்திற்கு மாறாக அத்துமீறி ஞானசேகரன் நடந்துகொண்டார். மாணவியை அசையக்கூட விடாமல் தடுத்து நிறுத்தினார். மாணவியை அவர் இருந்த இடத்திலிருந்து கடத்திச் சென்று ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். ஞானசேகரன் அந்த மாணவியை கடுமையாகத் தாக்கினார். இதனால் அந்த மாணவியின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. மாணவியை அவரது விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன் கொடுமை செய்தார். மாணவியின் தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினார். அத்துடன் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்தக் கொடு மைகளை அவர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைப் போல வீடியோ பதிவும் செய்தார். அந்த வீடியோக்களை அவர் அழித்துவிட்டார் எனப் புதிய பாரதிய நியாய சன்ஹிதா 9 சட்டப் பிரிவுகளிலும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டப் பிரிவிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ராஜலட்சுமி அறிவித்துள்ள இந்த தீர்ப்பின் தண்டனை விபரங்கள் வருகிற ஜூன் 2ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஞானசேகரனுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் முனைப்புடன் செயல்பட்ட வர் அரசுத் தரப்பு வழக்கறிஞராக வாதாடிய மேரி ஜெயந்தி.
எப்படி குற்றவாளிக்கு 157 நாட்களில் தண்டனை பெற்றுத் தந்தீர்கள் என அவரிடமே கேட்டோம்.
"இந்த வழக்கில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். வழக்கமாக கோர்ட்டில் வழக்கை காலதாமதமாக் கும் ‘வாய்தா’ வாங்காமல் நடந்த வழக்கு. 75 சாட்சி ஆவணங்கள், 29 பேர் சாட்சியம் அளித்த இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மகளிர் கோர்ட்டில் கடந்த மாதம்தான் விசாரணை தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக நாங்கள் விரைவாக வழக்கை நடத்தினோம். நான் தூங்கவேயில்லை. ஆரம்பத்தில் குற்றவாளி ஞானசேகரன் ரொம்ப ‘ரிலாக்ஸாக இருந்தான். வழக்கு சீரியஸாக வேகம் பெற்றதைப் பார்த்தவுடன் இறுதிநாளன்று கதறி அழுதான். அவன் ஒரு திருட்டுக் குற்றவாளி. அவன்மீது உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 35. அதில் சில வழக்குகளில் அவன் தண்டனையும் பெற்றிருக்கிறான். சி.பி.சி.ஐ.டி.யில் அவனுக்கு எதிராக ஒரு வழக்கும் இருக்கிறது. இவனை விடக்கூடாது என நாங்கள் கடுமையாக உழைத்தோம். அதன் பலன் கிடைத்துள் ளது''’என்றார்.
குற்றம் நடந்த ஐந்து மாதங்களில் வழக்கு நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க. உட்பட அனைவரும் வரவேற் றுள்ளனர். அ.தி.மு.க. மட்டும் "யார் அந்த சார்?' என்பதை கண்டு பிடிக்கவில்லை என அறிக்கை வெளியிட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த வழக்கில் முதலில் புலனாய்வு செய்த சென்னை நகர போலீசாரை பாராட்டியுள்ளார். ஞானசேகரன் தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என ஹைகோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. அதற்கு பதிலளித்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண், "இந்த வழக்கில் ஞானசேகரன் என்ற தனி நபர்தான் ஈடுபட்டுள்ளார். அவர் தனது மொபைலை ப்ளைட் மோடில் வைத்துவிட்டு ஒரு சாரிடம் பேசுவது போல நடித்துள்ளார்'' எனக் கூறினார்.
உயர் நீதிமன்றம், ஐ.பி.எஸ். அதிகாரிகள் சினேகப்பிரியா, பிருந்தா, ஜமான் ஜமால் ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. பொள்ளாச்சி விவகாரத்தைப் போல மிகவும் பெரிதாக அரசியல் செய்ய நினைத்த அ.தி.மு.க.வின் முயற்சி இந்த விவகாரத் தில் படுதோல்வியடைந்துள்ளது. “எந்த சாரையும் ஹைகோர்ட் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடிக் கவே இல்லை. ஏனென்றால் அப்படி ஒரு சாரே இல்லை’என்கிற கமிஷனர் அருணின் அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்வரை அ.தி.மு.க. சென்றும் இந்த வழக்கில் ஞானசேகரன்தான் குற்ற வாளி. அவன் ‘சார்’ என பொய் சொல்லி நடித்திருக்கிறான் என்பதை தமிழக போலீஸ் கோர்ட்டில் நிரூபித்துள்ளது. மலிவான அரசியல் செய்யத் துடித்த அ.தி.மு.க.வின் எண்ணம் தவிடு பொடியானது என சமூக வலைத்தளத் தில் முதல்வர் அறிவித்தார்.
ஞானசேகரனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.