heritors

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி, என்.டி.ஏ. கூட்டணி இரண்டிலுமே பிரபல தலைவர்களின் வாரிசுகள் போட்டியிட்டதைப் பார்க்கமுடிந்தது. அவர்களில் யாரெல்லாம் வெற்றிபெற்றிருக்கிறார்கள்…. யாரெல்லாம் தோல்வியடைந்திருக்கிறார்கள்?

Advertisment

முதலில் தலைநகர் டெல்லியிலிருந்து பார்க்கலாம். டெல்லியில் போட்டியிட்ட வாரிசு வேட்பாளர்களில் முக்கியமானவர் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ். மொத்தமுள்ள 7 தொகுதிகளில் புதுடெல்லி தொகுதி அவருக்கு அளிக்கப்பட்டது. பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகிக்குப் பதில் வழக்கறிஞரான பன்சூரி ஸ்வராஜுக்கு வாய்ப்புத் தர முடிவெடுத்தது பா.ஜ.க. தலைமை.

புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் சோம்நாம் பாரதிக்கு எதிராக நிறுத்தப்பட்டார் பன்சூரி. சோம்நாத் பாரதியை வீழ்த்தும் கடினமான வேலை பன்சூரிக்கு இருந்தது. ஆனால், ஒட்டுமொத்த டெல்லியுமே பா.ஜ.க. ஆதரவு மோடில் இருந்ததால், வெற்றி அலை பன்சூரி ஸ்வராஜின் பாதத்தையும் நனைத்திருக்கிறது. இவர் சோம்நாத் பாரதியைவிட 78,370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். மோடி வெற்றிபெற்று பிரதமரானால், தலையை மொட்டையடித்துக்கொள்வதாக சவால் விட்டிருந்தார் சோம்நாத். ஆக, தனது தொகுதியில் மட்டுமல்லாமல், சவாலிலும் தோல்வியடைந்திருக்கிறார் சோம்நாத் பாரதி.

Advertisment

சரண் தொகுதியில் 14 பேர் போட்டியிட்டனர். அதில் இரு வேட்பாளர்கள் முக்கியமானவர்கள் ஒருவர் லல்லுபிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யா, மற்றவர் பா.ஜ.க. வேட்பாளரான ராஜீவ் பிரதாப் ரூடி. ஐந்தாவது கட்டத் தேர்தலில் வாக்குப் பதிவைக் கண்ட சரண் தொகுதியில், ரோகிணிக்கு ஆதரவாக இந்தியா கூட்டணித் தலைவர்களும், ரூடிக்கு ஆதரவாக என்.டி.ஏ. தலைவர்களும் கடும் பிரச்சாரம் மேற்கொண்டனர். எனினும், 13,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ரோகிணியை பீகார் மக்கள் தோற்கடித்திருக்கின்றனர். அதேசமயம் பாடலிபுத்திரா தொகுதியில் போட்டியிட்ட லாலுவின் மூத்த மகள் மிசா பாரதி, பா.ஜ.க. வேட்பாளர் ராம் கிருபால் யாதவை 85,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.

மக்களவைத் தேர்தலில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அணியும், உத்தவ் தாக்கரே அணியும் முண்டா தட்டி தேர்தலில் நின்றதில் உத்தவ் அணிக்கே பெரும்பான்மை வெற்றி கிடைத்திருக்கிறது. அதற்காக ஷிண்டே அணி மொத்தமாகத் துடைத்தெறியப்படவில்லை. முக்கியமாக ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே மும்பையின் கல்யாண் தொகுதியில் போட்டியிட்டார். ஏற்கெனவே இந்தத் தொகுதியில் இரு முறை வெற்றிபெற்றவர் என்பதால் நம்பிக்கையுடனே களமிறங்கினார். இவருக்கு எதிராக உத்தவ் சிவசேனா கட்சியிலிருந்து வைஷாலி ரானே களமிறக்கப்பட்டார். 2,09,144 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்ரீகாந்த் ஷிண்டே இத்தொகுதியில் வெற்றிபெற, மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவேண்டும் என்ற ஆசையிருந்தாலும், கிடைத்த ஒரேயொரு இணையமைச்சர் பொறுப்பை பிரதாப்ராவ் ஜாதவுக்குக் கொடுத்து பெருந்தன்மை காட்டியிருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே.

கேரளத்தின் பத்தனம்திட்டா தொகுதியில், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும் காங்கிரஸ்காரருமான ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணியை நிறுத்தியது பா.ஜ.க. இதையொட்டி, கேரள மக்கள் அனிலைத் தோற்கடிக்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்து, தன் காங்கிரஸ் விசுவாசத்தை வெளிப்படுத்தினார் ஏ.கே. அந்தோணி. கேரள மக்களும் அவரது வேண்டுகோளை செவிமடுத்து, இத்தொகுதியில் காங்கிரஸின் ஆன்டோ அந்தோணியை வெற்றிபெற வைத்திருக்கின்றனர். 2,34,406 வாக்குகளுடன் அனில் மூன்றாமிடத்தைப் பிடித்து தனக்கும் மக்கள் செல்வாக்கு இருப்பதை நிரூபித்திருக்கிறார்.

மகாராஷ்டிரத்தில் வெற்றிக்காக சிவசேனா, தேசியவாதக் காங்கிரஸ் கட்சிகளை இரண்டாகப் பிளந்தது பா.ஜ.க. அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறி மகாராஷ்டிர துணை முதல்வராகப் பதவியேற்றார். நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாராமதி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தனது மனைவி சுனேத்ரா பவாரை நிறுத்தினார். சரத்பவாரும் சற்றும் அசராமல் சுப்ரியா சுலேவை அதே தொகுதியில் நிறுத்தி அஜித்பவாருக்கு சவால் விடுத்தார். இரண்டு பவார்களில் சரத்பவாருக்கே பவர் அதிகம் என்பதை இத்தேர்தல் நிரூபித்திருக்கிறது. 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் இத்தொகுதியில் வெற்றிவாகை சூடியிருக்கிறார் சுப்ரியா சுலே. அஜித்பவாரின் நான்கு வேட்பாளர்களில் மூன்று பேர் தோல்வியைத் தழுவ, ஆறுதலாக ஒரு வேட்பாளருக்கு மட்டுமே வெற்றி கிடைத்திருக்கிறது.

மல்யுத்த சம்மேளனத் தலைவரான பிரிஜ் பூஷன் சிங், பாலியல் வழக்கில் சிக்கியதால் அவர் மூன்று முறை போட்டியிட்டு வென்ற தொகுதியான கைஷர்கஞ்ச் தொகுதி, அவரது மகனான கரன் பூஷனுக்குக் கிடைத்தது. அவரை எதிர்த்து சமாஜ்வாடி கட்சியின் பகத் ராம் நிறுத்தப்பட்டார். தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டு, உத்தரப்பிரதேசம் முழுவதும் இந்தியா கூட்டணியின் வெற்றி அலை, போதாதற்கு தேர்தலுக்கு முன்பு விபத்தில் இருவரைக் கொன்ற குற்றச்சாட்டு என எதிர்மறைத் தாக்கங்கள் இருந்தாலும் பூஷன் குடும்பத்துக்கு செல்வாக்கான இத்தொகுதியில், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எளிதாக ஜெயித்திருக்கிறார் கரன் பூஷன். கடந்த மக்களவைத் தேர்தலில் பிரிஜ் பூஷன், இரண்டரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார். தற்போதைய இந்தியா கூட்டணி அலையில் அந்த வெற்றி வித்தியாசம் 1 லட்சம் குறைந்திருக்கிறது.

கர்நாடக துணைமுதல்வர் சிவக்குமாரின் தம்பியான டி.கே. சுரேஷ் பெங்களூரு ரூரல் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வென்றவர். அதே தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு எதிராக இந்த முறை பா.ஜ.க. சி.என். மஞ்சுநாத்தை நிறுத்தியது. கர்நாடக காங்கிரஸின் துணைமுதல்வரின் தம்பி என்பதாலேயே இந்தத் தொகுதியில் வலுவான போட்டி நிலவியது. சிவக்குமார் வாக்காளர்களை மிரட்டியதாக பா.ஜ.க. புகார் சொன்னது. அதற்கேற்ப நடந்துமுடிந்த தேர்தலில் மஞ்சுநாத் 2,70,000 வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷை தோற்கடித்திருக்கிறார். தோல்வி ஒரு புறமிருக்க, சிவக்குமார் ஆதரவாளர்கள், முதல்வர் சித்தராமையாவும், அவரது ஆதரவாளர்களும் சுரேஷைத் தோற்கடிக்க சதிசெய்திருப்பதாக குற்றம்சாட்டியது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

ஆந்திராவின் கடப்பா தொகுதியில் கடப்பாரையைப் போட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில், ஒய்.எஸ். ஷர்மிளாவை நிறுத்தியது காங்கிரஸ். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் அவிநாஷ் ரெட்டிக்கு எதிராக ஷர்மிளாவை நிறுத்தி ஒரு மக்களவைத் தொகுதியையாவது ஜெயித்துவிடலாமென காங்கிரஸ் நம்பியது. தெலுங்கு தேசம் கட்சியின் சாதிபிரல்ல பூபேஷ் சுப்பராமி ரெட்டி, குடும்ப உறுப்பினர்கள் ரெண்டு பேரும் போட்டி போட்டு அடித்துக்கொள்வதால் நமக்கு வெற்றி என நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் கடப்பா மக்கள் அவிநாஷ் ரெட்டிக்கு வாக்களித்து, ஷர்மிளாவையும், சுப்பராமி ரெட்டியையும் கைவிட்டிருக்கின்றனர். அதிலும் 22,961 வாக்குகள் மட்டுமே கொடுத்து ஷர்மிளாவின் அரசியல் கனவில் மண்ணை வாரிப் போட்டிருக்கின்றனர் மணவாடுகள்.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால் தென்சென்னை தொகுதியில் ஜெயக்குமாரின் வாரிசான ஜெயவர்த்தனைப் புறக்கணித்த தமிழக மக்கள், கன்னியாகுமரி தொகுதியில் பொன்னாருக்கு எதிராக, வசந்தின் மகனான விஜய் வசந்தை மீண்டும் ஜெயிக்கவைத்து வெற்றியைக் கையளித்திருக்கின்றனர்.

மக்கள் வாரிசு அரசியலுக்கு ஆதரவா இருக்காங்களா… எதிரா இருக்காங்களா…? எப்படி முடிவு பண்றது?