"பட்டாசு ஆலைகள்ல உசிர பணயம் வச்சு தொழிலாளர்கள் உழைக்கிறாங்க. பட்டாசு விபத்து நடந்தா முதலாளிங்க மேல வழக்கு பாயுது. அப்புறம் அவங்க வாழ்க்கையே ஒண்ணுமில்லாம போயிருது. பட்டாசுத் தொழில்ல இத்தனை ரிஸ்க் இருக்கு. ஆனா.. டிபார்ட்மென்ட்காரங்க தீபாவளி நேரத்துல, பிணந்தின்னி கழுகா அலையுறாங்க. கஞ்சா விக்கிறவங்ககூட, போலீஸுக்கு மட்டும் மாமூல் கொடுத்தா போதும். ஆனா... பட்டாசுத் தொழில்ல எக்ஸ்ப்ளோசிவ், ரெவன்யூ, போலீஸ், ஃபயர் ஸ்டேஷன், ஃபேக்டரி ஆக்ட்லின்னு 13 அரசுத் துறைகளுக்கு தொடர்ந்து லஞ்சம் தந்தே ஆகணும். தலையாரி, வி.ஏ.ஓ.லில இருந்து சர்வேயர் வரைக்கும் மிரட்டுறாங்க... என்ன கொடுமை சார்?''’என்று நம்மிடம் சலித்துக்கொண்டார் ஒரு பட்டாசு ஆலை அதிபர்.
"இதெல்லாம் நீங்க வழக்கமா புலம்புறதுதானே? பட்டாசுத் தொழில்ல தில்லுமுல்லு நடக்கத்தானே செய்யுது. அதான்... லஞ்சத் துல இருந்து சகலத்தயும் மொத்தமா சேர்த்து பட்டாசு விலைல வைக்கிறீங்கல்ல. எல்லாம் பப்ளிக் தலைலதானே விடியுது?''’ என்று நாம் கேட்க... "எந்த தொழில்ல விதி மீறல் இல்ல? ஆனாலும்.. பட்டாசு தொழி;ஹ், அதுவும் ஜி.எஸ்.டி. வந்ததுக்கு அப்புறம், படுத்தி எடுக்கிறாங்க...''’எனச் சொல்லி, அதிகாரிகள் நடத்தும் தீபாவளி கொள்ளை குறித்து குமுறினார்.
சிவகாசியில் ஒளிவு மறைவின்றி நேர்மையாகப் பட்டாசுத் தொழில் செய்துவரும் அந்த முன்னணி நிறுவனத்தினுள், கடந்த 5-ஆம் தேதி திமுதிமுவென்று நுழைந்தது அதிகாரிகள் படை. அதில், ஜி.எஸ்.டி. -சென்னை அசிஸ்டன்ட் கமிஷனர், மதுரை அசிஸ்டென்ட் கமிஷனர், திருநெல்வேலி அசிஸ்டென்ட் கமிஷனர், வடநாட்டு அதிகாரிகள் இருவர், சி.டி.ஓ.க்கள், உள்ளூர் அதிகாரிகள் என 60 பேர் வரை இடம் பெற்றிருந்தனர். அந்தப் படையிலிருந்து 5 அதிகாரிகள் கொண்ட குழு, அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பட்டாசு ஆலைக்கும் சென்றது. கணக்கு வழக்குகளில், வரி செலுத்துவதில், மிகச்சரியாக நடந்துவரும் நிறுவனம் எனப் பெயர் எடுத்துள்ள அந்த நிறுவனத்தை, ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள், நான்கு நாட்களாகப் பிரித்து மேய்ந்தனர். "வாடகை செலுத்துவதற்கு ஜி.எஸ்.டி. ஏன் கட்டவில்லை?', பர்ச்சேஸுக்கும் சேல்ஸுக்கும் ஏன் ஒத்துப்போகவில்லை?'’ என்று கேள்விகளால் குடைந்தனர். "எங்களது ஆய்வின் மூலம் ரூ.3.5 கோடி வரை வரிஏய்ப்பு நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம்''’என குண்டு’ போட்டனர்.
அதற்கு அந்த முன்னணி நிறுவனம் "‘மடியில் கனமில்லை. இந்தக் குற்றச்சாட்டை அப்பீலில் பார்த்துக்கொள்கிறோம்'’எனச் சொல்லியிருக்கிறது.
ஜி.எஸ்.டி. அதிகாரிகள் குழு மேற்கொண்ட அந்த ஆய்வு, மற்ற பட்டாசு ஆலை அதிபர்கள் வயிற்றில் புளியைக் கரைத்த நிலையில், அந்த முன்னணி பட்டாசு நிறுவனத்திடமிருந்து ரூ.80 லட்சத்தை அபராதமாகக் கறந்துவிட்டே அதிகாரிகள் கிளம்பினார்கள். "அடுத்தடுத்து, ஒவ்வொரு நிறுவனமாக ஆய்வுக்கு வருவார்கள். சிவகாசியில் பணப்புழக்கம் அதிகமாக உள்ள நேரம் என்பதை அறிந்தே பண்ணும் அராஜகம் இது'’ என அவர்களைப் புலம்ப வைத்திருக்கிறது.
இன்னொரு பட்டாசு ஆலை அதிபர், "உதாரணத்துக்கு ஒரு அதிகாரி’ என்று, சிவகாசி வணிகவரி அலுவலர் ராதாலட்சுமியைச் சுட்டிக் காட்டினார். “சிவகாசி பகுதியில் பட்டாசு பார்சல் களை எடுத்துச்செல்லும் ஒரு வாகனத்தைக்கூட விட்டுவைக்க மாட்டார். சோதனை என்ற பெயரில் அந்த வாகனத்தை மறித்து ஆவணங்களைக் கேட் பார். ‘இ-வே பில் எங்கே?’ என்று அதட்டுவார். இந்த சோதனையும், கேள்விகளும் அவர் ஆற்றவேண்டிய கடமைதான். ஆனால், பேரத்தில் வந்து நிற்பார். தனக்கென்று புரோக்கர்கள் வைத் திருக்கிறார். அதில், அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர் ஒருவர், அவருக்கு மிகமிக வேண்டியவர். பட்டாசு பார்சல்களை எடுத்துச்சென்ற வாகனம் அதிகாரியால் நிறுத்தப்பட்ட தகவல், சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் தெரிவிக்கப்படும். உடனே, அதிகாரி கேட்கும் தொகை புரோக்கரின் கைக்கு வந்துசேரும். பிறகுதான், அந்த வாகனம் விடுவிக்கப்படும். ரூ.50,000-க்கு குறைந்து லஞ்சம் வாங்காத இந்தப் பெண் அதிகாரிக்கு ‘கலெக்ஷன் ராணி’ என்று பட்டமே தந்திருக்கிறார்கள், பட்டாசு ஆலைகளை நடத்துபவர்கள். முறைகேடான அத்த னை வழிகளிலும் சொத்துகளைக் குவித்திருக்கிறார்'' என்று எந்த ஏரியாவில் எத்தனை வீடுகளைக் கட்டியிருக்கிறார் என்றெல்லாம் பட்டியலிட்டார்.
நாம் சிவகாசி வணிகவரி அலுவலர் ராதா லட்சுமியை தொடர்புகொண்டோம். "நான் ரோமிங் ஸ்குவாட் ஆபீசர். பில் இல்லாம பட்டாசு பார்சல் எடுத்துட்டுப் போறாங்க. சோதனைல நாங்க கண்டு பிடிச்சதும் அவங்கவங்க கட்ட வேண்டிய வரியை, அவங்கவங்க ஜி.எஸ்.டி. நம்பர்ல அவங்களே நெட்ல கட்டிருவாங்க. ரூ.1 லட்சம் பெறுமான பட்டாசுகள் கொண்டுபோறாங்கன்னா, இ-வே பில் போடணும். போடலைன்னா பிடிச்சு வைப்போம். எல்லாத்துக் கும் பெனால்டி போடுவோம். சலான்ல கட்டு வாங்க. கவர்மென்ட்ல இருந்து ஸ்ட்ரிக்ட் பண்ணி ருக்காங்க. டெய்லி ரெண்டு லட்சம்னு டார்கெட் இருக்கு. ரூ.1 லட்சம், ஒன்றரை லட்சம்னு ஃபைன் போடுறோம். ஜி.எஸ்.டி. வந்தபிறகு... ஆன்லைன் போர்ட்டல்லதான் பணம் கட்டுறாங்க. ஜி.எஸ்.டி. ஆபீசர பார்க்க வரவேணாம்னுதான் சொல்லுறோம்'' என்று விளக்கம் தந்தவரை இடைமறித்து, "ரொம்ப வும் லஞ்சம் வாங்குறீங்கன்னு குற்றச்சாட்டு இருக் கிறதே?''’ என்று கேட்க, “"எனக்கு எந்த ஆளும் (புரோக்கர்) கிடையாது. எனக்கு அது தேவையும் கிடையாது''’என்று ஒரே போடாகப் போட்டார்.
தீபாவளி இனிப்பு தித்திக்கும் என்றாலும் பட்டாசு லஞ்சம் கசக்கிறது.