ந்திய ஜனநாயகத்தில், மாநில அரசு களின்மீது தங்கள் ஆளுமையை, அதிகாரத்தைச் செலுத்துவதற்கான வழியாகவே இந்த ஆளுநர் பதவி பயன் படுத்தப்பட்டுவருகிறது. அதனால்தான் “ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு?’’ என்றார் பேரறிஞர் அண்ணா. இந்த ஆளுநர் பதவியின் மூலம் தங்களுக்கு ஆகாத மாநில அரசுகளின்மீது கவர்னர் மூலமாகப் புகாரினைப்பெற்று, அந்த ஆட்சியைக் கலைப்பதையே மத்திய காங்கிரஸ் அரசு வழக்கமாகக் கொண்டிருந்தது. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., இரண்டுமே காங்கிரஸின் கரத்தால் கலைக்கப்பட்ட வரலாறு உண்டு.

bjp

தற்போது காங்கிரஸை வீழ்த்தி மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க.வோ கவர்னர்களின் மூலம் மாநில அரசுகளை டீல் செய்யும் விதமே தனி. தங்களுக்கு ஆகாத மாநில அரசுகளைக் கலைப்பதற்குப்பதிலாக, மாநில கவர்னர்களின் மூலமாகக் குடைச்சல் தருவதை வழக்கமாக்கியுள் ளது. மாநில அரசைச் செயல்படவிடாமல் முடக்கி, கவர்னர் மூலம் ஜனநாயகத்துக்கு மாறான ஆட்சி யைச் செலுத்துகிறது. புதுச்சேரியில் தங்களுக்கென தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஒருவர்கூட இல்லாத நிலையில்தான் பா.ஜ.க. இருந்தது. இந்நிலையில் தங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதற்காக கிரண்பேடியை அங்கே கள மிறக்கியது மத்திய அரசு. அன்றிலிருந்து முதல்வர் நாராயணசாமிக்குத் தொடங்கியது ஏழரைச் சனி! அதன்பின்னர், கிரண்பேடியின் அதிரடி அரசியலால் நாராயணசாமியை செயல்படாத முதல்வரென்று புதுச்சேரி மக்களே நம்பும்படி செய்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களைக் கட்சி தாவச் செய்து, ஆட்சியைக் கவிழ்க்கும் நிலைக்குக் கொண்டு சென்றார். தற்போது, என்.ஆர்.காங்கிர சின் ரங்கசாமியையே வலையில் வீழ்த்தி, முதல்வர் பதவியைப் பிடிக்குமளவுக்குத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது பா.ஜ.க. இவை அனைத்துக்கும் மையப்புள்ளி, கவர்னர் கிரண்பேடி.

காஷ்மீரிலோ, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசைக் கலைத்து, கவர்னர் ஆட்சியைக் கொண்டுவந்து காஷ்மீருக்கான சிறப்புச் சட்டத்தை ரத்துசெய்த கையோடு முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என அனைவரையும் வீட்டுச் சிறையில் அடைத்தது. மத்திய அரசு தற்போதுவரை அங்கே ராணுவம்+கவர் னர் ஆட்சிதான் நடந்துவருகிறது. மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக் கப்பட்டுவிட்டது. நம் தமிழகத் திலும் எடப்பாடி பழனி சாமியின் ஆட்சியை கவர்னரின் மூலமாகக் கட்டுப்படுத்தியது. 7 தமிழர்கள் விடுதலை, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு விவகாரங்களில் கவர்னரின் முட்டுக்கட் டைச் செயல்பாடுகளே சாட்சி.

Advertisment

bjp

இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணிக்கட்சி களின் பொதுக்கூட்டத்தில், ""தமிழகத்தை தட்ஷிண பிரதேஷ் என்று பெயர் மாற்றம் செய்ய பா.ஜ.க. முடி வெடுத்துள்ளதென்றும், சென்னையைத் தனி யூனியன் பிரதேசமாக மாற்றி தங்கள் ஆளுமையின் கீழ் வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள்'' என்றும் புதுகுண்டைப் போட்டார் திருமா. ஆனால் அப்படி எதுவும் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லையென்று பா.ஜ.க. தரப்பில் மறுப்பு வெளியிடப் பட்டாலும்கூட, எதிர்காலத் திட்டமாக இருக்குமோ என்ற அச்சத்தையே மக்களிடம் ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், தற்போது மத்திய அரசின் கவனம் முழுக்க டெல்லியி லுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசின்மீதே குவிந்துள்ளது. "காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்ற திட்டத்தை முன்வைக்கும் பா.ஜ.க. அரசுக்கு, தோளில் அமர்ந்து குடைச்சல் தரும் கட்சியாக டெல்லியை ஆளும் கெஜ்ரி வாலின் அரசு அமைந்துள்ளது. டெல்லி யில் முதல்வராக இருந்தாலும், தற்போது ஹரியானா, பஞ்சாப்bjp மாநிலங்களிலும் ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு அதிகரித் துள்ளது. அது மட்டுமல்லாது, உத்தரப் பிரதேசத்திலும், பிரதமரின் குஜராத் திலும்கூட ஆதரவு வளரத் தொடங்கி யிருப்பது மோடி-அமித்ஷா கூட்டணியை ரொம்பவே டிஸ்டர்ப் செய்துவிட்டது. இந்துத்துவா பிரச்சாரங்களை வலுப் படுத்தி மக்களைத் தங்கள் பக்கம் திருப்புவதும், தங்களுக்கு எதிராக நிற்கும் கட்சிகளை உடைத்து அவற்றை அழித் தொழிப்பதுமான நடவடிக்கையைத் தொடரும் பா.ஜ.க. தலைமைக்கு கெஜ்ரிவால் கடுமையான சவாலாக விளங்கு கிறார். இவருக்கு டெல்லிவாசிகளிடம் இருக்கும் செல்வாக்கே தனி. மனதால் இந்துத்வவாதிகளாக இருப்பவர்களும் கூட ஆட்சி என்று வந்தால் ஆம் ஆத்மிக்குத்தான் வாக்களிக்கும் மன நிலையில் இருக்கிறார்கள். தன்னை அனுமார் பக்தன் என்று குறிப்பிட்டு தானும் ஒரு இந்துத்வாவாதி தான் என்று மேல்தட்டு மக்களின் மனதில் பதியவைத்துள்ளார் கெஜ்ரிவால். அதேபோல், தனது அரசின்மீது எந்த களங்கமும் ஏற்படுத்தமுடியாதபடி நிர்வாகத்தை நடத்திவருகிறார்.

Advertisment

கெஜ்ரிவாலின் மக்கள் செல்வாக்கை அசைத்துப் பார்க்க முடியாமல் தவித்தவர்கள், டெல்லி அரசின் அதிகாரத்தை மேலும் முடக்கும் செயலைக் கையிலெடுத்தார்கள். டெல்லி யூனியன் பிரதேச அரசுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமை களையும் முடக்குவதற்காக, டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் தேசிய தலைநகர் டெல்லி திருத்த மசோதாவைக் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளனர். ஏற்கனவே கெஜ்ரிவாலோடு டெல்லி கவர்னர் முட்டிமோதும் நிலையில்... தற்போது டெல்லி அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு துணைநிலை கவர்னரின் முடிவைக் கேட்டாகவேண்டும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் கெஜ்ரிவால் ஒரு முதல்வராகச் செயல்படுவதை முடக்கியுள்ளனர். புதுச்சேரி பார்முலாவை டெல்லியிலும் செயல்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளது. இத்தகைய இக் கட்டான சூழலில், இந்த சட்ட மசோதாவை பாராளுமன்றத் தில் எதிர்த்த காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க., பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கட்சிகளோடு இணைந்து மத்திய அரசை எதிர்த்து அரசியல் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செயல்பட்டால்தான் மாநிலங்களை கவர்னரை வைத்து கூறுபோட்டு அடக்க நினைக்கும் மத்திய அரசின் செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். மேற்குவங்க முதல்வர் மம்தா அதற்கான முற்சியை மேற்கொண்டுள்ளார்.

-தெ.சு.கவுதமன்