மிழ்நாடு!

இது வெறும் வார்த்தையல்ல... வரலாறு!

ஆம், தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு எளிதில் கிடைத்துவிட வில்லை. இதன் பின்னால் மிக நீண்ட போராட்டமும், உயிர்த்தியாகமும் அடங்கியிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப் படாமல், தமிழ்நாட் டோடு இலட்சத் தீவுகள், கேரளா வின் மலபார் பகுதி கள், கர்நாடகாவின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி போன்ற பகுதிகள், ஆந்திரா, ராயலசீமா பகுதிகளும் இணைந்து மெட்ராஸ் பிரெசிடென்சி (Madras Presidency) அல்லது சென்னை மாகாணம் என்று அழைக் கப்பட்டது. பின்னர், மொழிவாரியாக மாநிலங்கள் பிரி வதற்கான போராட் டங்கள் நடந்ததை யடுத்து, 1953 அக்டோ பரில், ஆந்திரா தனி மாநிலமாக உருவெடுத் தது. அடுத்ததாக 1956ஆம் ஆண்டில், கர்நாடகா, கேரள மாநிலங்களும் தனித் தனியாகப் பிரிந்தன. இப்படியாகப் பல்வேறு மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிந்து சென்றதால், நாம் மட்டும் ஏன் சென்னை மாகாணம் என்ற பெயரில் இருக்க வேண்டும்? தமிழ்மொழி பேசும் மக்கள் வசிப்பதால் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யவேண்டுமென்று கோரிக்கை எழுப்பப்பட்டது.

தமிழ்நாட்டை அடையாளப்படுத்திய பெரியார்

Advertisment

சென்னை மாகாணத்தை தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுப்பப்படுவதற்கு முன்பே, தமிழக அரசியல் களத்தில் 'தமிழ் நாடு' என்ற பெயரைப் பயன்படுத்திய பெருமை பெரியாருக்கு உண்டு.சென்னை மாகாணத்துக்கு முதலமைச்ச ராக ராஜாஜி இருந்தபோது, 1938 நவம்பர் 13ஆம் தேதி, தர்மாம்பாள், மீனாம்பாள் சிவராஜ், நாராயணி அம்மாள் உள்ளிட்ட பெண்கள் முன்னின்று நடத்திய முற்போக்குப் பெண்கள் சங்க மாநாட்டில், "பெரியார்' என்ற பட்டம், பெரியாருக்கு வழங்கப்பட்டது. அந்த மாநாடு குறித்து 1938, நவம்பர் 20ஆம் தேதி குடிஅரசு இதழில், "தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு' என்று தலைப்பிட்டு பெரியார் எழுதியிருந் தார்.

ss

Advertisment

1950, ஜனவரி 27ஆம் தேதி விடுதலை இதழில், தமிழும், தமிழ்நாடும், தமிழ் மக்களும் இப்படிப் பிரிந்துகிடக்கிற கார ணத்தால்தான் ஒற்றுமைக் குப் பாடுபடும் நாங்கள், திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிட கலாச்சாரம் என்றும் எடுத்துக்காட்டிப் புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதே பெரியார், "தமிழ்நாடு தமிழருக்கே!’ என்று ஆரவாரம் செய்யுங்கள்! உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சை குத்திக் கொள் ளுங்கள்!' என்று எழுச்சியை ஏற்படுத்தி யிருக்கிறார்.

1954ஆம் ஆண்டு, செப்டம்பர் 17ஆம் தேதி, தனது பிறந்த நாளையொட்டி பெரியார் வெளியிட்ட அறிக்கையில், "திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்துபோன பின்பும்கூட தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர்கூட இருக்கக்கூடாது என்று பார்ப்பானும், வட நாட்டானும் சூழ்ச்சி செய்து, சென்னை நாடு என்று பெயர் கொடுக்க இருப்பதாகத் தெரிய வருகிறது. தமிழ்நாடு என்ற பெயர் இந்த நாட்டுக்கு இல்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் எனில், பிறகு நானும், என்னை பின்பற்றும் கழகத்தினரும் எதற்காக வாழவேண்டுமென்றே தெரியவில்லை'' என்று தனது ஆதங்கத்தைக் கொட்டியிருந்தார்.

தமிழ்நாடு பெயருக்காக ம.பொ.சி, சங்கரலிங்கனார்

தமிழர்களின் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயரிட வேண்டுமென்ற தீர்மானத்தை, 1955ஆம் ஆண்டில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் தமிழரசு கழகம் தீர்மான மாகக் கொண்டுவந்தது. 1956ஆம் ஆண்டில் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்துக்கான கோரிக்கை தீவிரமான சூறாவளியாக அரசியல் களத்தில் உருவெடுத்தது.

tt

இந்நிலையில், தமிழர்களுக்கென மொழிவழி மாநிலம் வேண்டும், சென்னை மாகாணத்திற்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்ட வேண்டும், இந்தி மட்டுமே மத்திய அலு வல் மொழியாக இருக்கக்கூடாது, இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டும், தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்பன உட்பட 12 கோரிக்கைகளுடன், 1956, ஜூலை 27ஆம் தேதி, சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார், விருதுநகரில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காமராஜரிடம், சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து கேட்டபோது, சங்கரலிங்கனாரின் உண்ணா விரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்ட காமராஜர், "சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டவை'' என்று விளக்கமளித்தார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் என்று அவர் அறிவித்ததால் தமிழகமெங்கும் போராட்டங்கள் உச்சத்தை எட்டின. சங்கரலிங்கனாரை, தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த அண்ணா, ம.பொ. சிவஞானம், ஜீவானந்தம் உள்ளிட்ட பல்வேறு தலை வர்கள், உங்களுடைய கோரிக் கைகளை ஆட்சியாளர்கள் ஏற்க மாட்டார்களே என்று எடுத்துக்கூறி உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் சங்கர லிங்கனாரோ, நான் மரணித்த பிறகாவது எனது கோரிக் கைகளை ஏற்பார்களென்று உருக்கமாகக் கூறினார். மனந்தளராமல் ஒரு கயிற்றுக்கட்டிலில் படுத்தபடி தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தவரின் உடல் நிலை, நாளாக நாளாக நலிவடைய, அக்டோபர் 10ஆம் தேதி, 76வது நாளில் அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்றாவது நாளில், உண்ணாவிரதத்தின் 79வது நாளில், அக்டோபர் 13ஆம் தேதி சங்கரலிங்கனார் உயிரிழந் தார்.

பேரறிஞர் அண்ணாவின் வெற்றி

இந்நிலையில், 1960 ஆகஸ்ட் 19ம் தேதி சோசலிஸ்ட் கட்சி சார்பாக, தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அடுத்த தாக, 1961ஆம் ஆண்டு, இந்திய மாநிலங்களவையில், சென்னை மாகாணத்துக்கு தமிழ் நாடு என்று பெயரிட வேண்டுமென்ற தீர்மானத்தை, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ்குப்தா அறிமுகம் செய்தார். "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று பெயர் வைத்த காங்கிரஸ், தமிழ்நாடு என்று மாநிலத்துக்கு பெயர் வைக்க ஏன் மறுக்கிறது?'' என கேட்டார்.

t

இத்தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய பேரறிஞர் அண்ணா, தமிழ்நாடு என்ற பெயர், இன்று நேற்றல்ல, பழந்தமிழ் இலக்கியத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று, பல்வேறு சான்றுகளை அடுக்கினார். அவரை மடக்கும் நோக்கில், "தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தின் மூலம் நீங்கள் அடையப்போவது என்ன?'' என்று கேட்கப்பட, "பார்லிமெண்ட் என்பதை லோக்சபா என மாற்றியதன் மூலம் எதை அடைந்தீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட் என்பதை ராஜ்யசபா என மாற்றியதால் என்ன அடைந்தீர்கள்? பிரசிடென்ட் என்பதை ராஷ்டிரபதி என மாற்றியதன் மூலம் என்ன அடைந்தீர்கள்?'' என்று எதிர் கேள்விகளை அடுக்கினார். கடுமையான விவாதத்துக் குப்பின் போதிய ஆதரவில் லாமால் அத்தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது.

1963ஆம் ஆண்டு, தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை தி.மு.க. கொண்டு வந்தபோது, "மெட்ராஸ் என்று சொன்னால்தான் வெளிநாடுகளில் பெருமையாக இருக்கிறது'' என்று கூறிய அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் தீர்மானத்தை ஏற்க மறுத்தார். இப்படி தொடர்ச்சியான போராட்டத்திற்கிடையே, 1967ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆளுங்கட்சியாக சட்ட மன்றத்தினுள் நுழைந்தது. 1967 ஜூலை 18ஆம் தேதி, தமிழ் நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்த முதலமைச்சர் அண்ணா, "அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடும்போது தமிழ்நாடு என மாற்றி அமைக்கப்பட வேண்டுமென உறுதியாகக் கருதுவதுடன், அரசியலமைப்பில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுக்க பேரவை பரிந்துரைக்கிறது'' என்றார். காங்கிரஸ் தரப்பில், தமிழ்நாடு -மெட்ராஸ் ஸ்டேட் என இணைந் திருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப் பட்டது. நிறைவாகப் பேசிய அண்ணா, "எதிர்காலத்தில் வரும் தலைமுறையினர், நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பெருமையோடு சொல்லிக்கொள்ளும் நிகழ் வாக தமிழ்நாடு பெயர் மாற்றம் அமையும்'' என்றார்.

பின்னர் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன், "தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க'' என்று விண்ணதிர முழங்க, தீர்மானம் நிறைவேறியது. பின்னர், தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா,இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1969 ஜனவரி 14 பொங்கல் தினத்தில் தமிழ்நாடு பெயர் மலர்ந்தது.

இது திராவிட மாடல் ஆட்சி என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியபடி முத லமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, தமிழ்நாடு பெயருக்கான நீண்டகாலப் போராட்டம், தமிழ்நாடு சட்டமன்றத் தில் வெற்றிபெற்ற ஜூலை 18ஆம் தேதி யன்று, தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்தது. அதோடு, தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் சமூக முன்னேற்றத்துக்குப் பாடுபடும் தமிழறிஞர்களுக்கும், தகைசால் தமிழர்களுக்கும் விருதளித்து பெருமைப் படுத்துகிறது.

tt

மொழிவாரி மாநிலங்களின் தனித் தன்மையை, பண்பாட்டைக் காப்பதற்காகத் தனது நிலப்பரப்பையே விட்டுக்கொடுத்த தியாகத்தின் அடையாளமே தமிழ்நாடு. இந்தியா என்பதே பல்வேறு மொழிகளை... கலாச்சாரங்களை தன்னுள் கொண்ட மொழிவாரி மாநிலங்களின் கூட்டமைப்பு என்பதை ஓங்கி ஒலிப்பதால்தான், "ஒரே நாடு... ஒரே மதம்... ஒரே மொழி... ஒரே தேர்தல்...' என்றெல்லாம் இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒழிக்க நினைக்கும் டெல்லி தலைமைக்கு தமிழ் நாட்டின்மீது அடங்காத கோபம் எழுகிறது. டெல்லி தலைமையின் பிரதிநிதியாக தமிழ் நாட்டில் தனது அதிகாரத்தைச் செலுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் அதே கோபம் தான்... அதன் வெளிப்பாடாகத்தான் "தமிழ் நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்ற பெயர் இருப்பதுதான் சரியாக இருக்கும்'' என்று சர்ச்சையைக் கிளப்பி யிருந்தார்.

பிறப்பால் பீகாரியான ஆளுநருக்கு, தமிழ்நாட்டின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை. காவிச்சாயம் மட்டுமே பூசத்தெரிந்த ஆர்.எஸ்.எஸ். பின்னணியி லிருந்து வந்தவருக்கு, பெரியார் மண்ணின் மகத்துவம் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என்று கேள்வியெழுப்பிய பேரறிஞரின் பூமி இதுவென்று தெரிந்திருக்க நியாய மில்லை. தீண்டாமையைத் தூக்கிப் பிடிக்கும் சனாதனப் பெருமை பேசுபவருக்கு, சமூகநீதியின் அர்த்தத்தை தமிழ்நாடு கற்றுக்கொடுக்கும்... கற்றுக்கொள்ளுங்கள் எங்கள் ஆளுநரே!

-தெ.சு.கவுதமன்