கடின உழைப்புக்கும் கருணை உள்ளத் துக்கும் சொந்தக்காரரான மனிதநேயப் பண்பாளர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி காலமாகியிருக்கிறார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக் கம் செய்யப்படும் என அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
கடந்த சில வருடங்களாகவே பலவகை யான நோய்களுக்கு ஆட்பட்டிருந்தார் விஜயகாந்த். வெளிநாடுகளில் சிகிச்சை கொடுக்கப்பட்டதுடன், சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவருக்கு உயரிய சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலை சரியாவதும், பிறகு பின்னடைவு ஏற்படுவது மாகவே அவஸ்தைப்பட்டு வந்தார்.
கடினமான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் நவம்பர் மாதம் 18-ந் தேதி மியாட்டில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், 24 நாட்கள் ஐ.சி.யூ.விலேயே இருந்தார். அதன்பிறகு உடல்நலம் தேறிய நிலையில் டிசம்பர் 11-ந்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து சமீபத்தில் நடந்த தே.மு.தி.க. பொதுக்குழுவிலும் கலந்துகொண்டார் விஜயகாந்த்.
டாக்டர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தேவையான சிகிச்சைகள் கொடுக்கப் பட்டு வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு (டிசம்பர் 26-ந்தேதி) வீட்டில் மயக்க மாகியிருக்கிறார். உடனடியாக மியாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் விஜயகாந்த். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடமும் மியாட் மருத்துவ மனை நிர்வாகத்திடமும் தொடர்ச்சியாக விசாரித்து வந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில், டிசம்பர் 26-ந் தேதி மியாட்டில் அவசரம் அவசரமாக அட்மிட் செய்யப்பட்டி ருக்கிறார் என அறிந்து முதல்வர் ஸ்டாலின், டாக்டர்களிடம் விசாரிக்க, ’""மூச்சு விடுவதில் சிரமப்பட்டுள்ளார். அதனால் மயக்கமும் வந்துள்ளது. இப்போது பரவாயில்லை. ஆனால், நுரையீரலில் தொற்று பரவியுள்ளது. கோவிட் டாக இருக்கும் என சந்தேகப்படுகிறோம். டெஸ்டுகள் எடுக்கப்பட்டுள் ளன''’’ என்று சொல்லியிருக் கிறார்கள் டாக் டர்கள்.
அப்போது, அரசுத் தரப்பில் இருந்து என்ன உதவி வேண்டு மானாலும் கேளுங்கள். கேப்டன் உயிர் முக்கியம் என்று சொன்னதுடன், பிரேமலதாவை தொடர்புகொண் டும் பேசியிருக் கிறார் ஸ்டா லின். அத்துடன், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், விஜய்காந் தின் உடல்நிலையைத் தொடர்ச்சியாக கவனிக்குமாறும் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில்தான், 27-ந்தேதி கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சைகள் ஆரம்பமானது. ஆனால், அவருக்கு சுயநினைவு இல்லாததால் செயற்கை சுவாசமான வெண்டிலேட்டர் பொருத்தப் பட்டது. இருப்பினும் அவரது உடல் உறுப்பு கள் அதனை ஏற்றுக் கொள்வதில் சிரமத்தை சந்தித்தன. நுரையீரலில் ஏற்பட்ட அதிகப்படி யான அழற்சி, மருந்துகளை ஏற்கவும் மறுத்தன. டாக்டர்கள் நம்பிக்கை இழந்தனர். பிரேம லதாவிடம் வெளிப்படையாகவே இதனைத் தெரிவிக்க... கதறியிருக்கிறார் பிரேமலதா.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைக் காகத்தான் அட்மிட் செய்யப்பட்டுள்ளார் என்று தே.மு.தி.க. தரப்பில் சொல்லப்பட்டிந்த நிலையில், டாக்டர்கள் நம்பிக்கை இழந்ததால் இதனை முறைப்படி தொண்டர்களுக்கு தெரிவித்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தார் பிரேமலதா. இதனை டாக்டர்களிடம் தெரிவிக்க, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டி ருப்பதால் வெண்டிலேட்டர் பொருத்தப் பட்டது என மருத்துவமனை நிர்வாகம் 28-ந் தேதி விடியற் காலையில் அறிவித்தது. அதனையே தே.மு.தி.க. தலைமைக்கழகமும் வெளியிட்டது.
அதேசமயம், ஹார்டியாக் அரஸ்ட் ஏற்பட வெண்டிலேட்டர் சிகிச்சையை உடல்நிலை ஏற்க மறுத்த நிலையில், விஜயகாந்தின் உயிர் பிரிந்துள்ளது. டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவ மனையிலேயே கதறித்துடித்த பிரேமலதாவை டாக்டர்களும் குடும்பத்தினரும் தேற்றியிருக்கிறார்கள்.
விஜயகாந்த் மறைவை முதல்வர் ஸ்டாலினுக்கு முதலில் தெரியப்படுத்தினார் பிரேம லதாவின் சகோதரர் சுதீஷ். அப்போது பிரேம லதாவை தொடர்புகொண்டு ஆறுதல் சொன்ன ஸ்டாலின், ""கேப்டனின் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிர்ச்சி யாக இருக்கிறது. அவரது இழப்பு தமிழகத்துக்கு பேரிழப்பு. உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே புரியவில்லை. தைரியமாக இருங்கள். கேப்டனின் பணிகளை நீங்கள்தான் முன்னெடுத்துச் செல்லவேண்டும். அந்த மிகப்பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. தைரியமாக இருங்கள். கேப்டனின் உடலுக்கு அரசு மரியாதை தரப்படும்'' என்று ஆறுதல்படுத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் சகிதம் சென்னை சாலிகிராமத்திலுள்ள விஜய்காந்த்தின் இல்லத்துக்குச் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார் ஸ்டாலின். உடலுக்கு அருகில் இருந்த விஜய்காந்தின் மனைவி பிரேமலதாவுக்கு ஸ்டாலின் ஆறுதல் சொன்னபோது, கேப் டனின் உடலை பொதுஇடத்தில் அடக்கம் செய்ய உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் பிரேமலதா. அதற்கு, இது குறித்து அரசு அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கிறேன் என்றிருக்கிறார்.
இறுதியாக தொண்டர்கள், கட்சியினர் பார்வைக்கு உடலை வைத்துவிட்டு, டிசம்பர் 29-ஆம் தேதி, விஜயகாந்த் கட்சி அலுவலகத்தி லேயே உடலை நல்லடக்கம் செய்வதென முடிவெடுக்கப்பட்டது.