"ஹலோ தலைவரே, தமிழக அரசியல் களம் பரபரத்துக் கிடக்கிறது''’
"ஆமாம்பா, ஆமாம்பா, எல்லாப் பக்கமும் பரபரப்பு தெரியுது.''”
"உண்மைதாங்க தலைவரே, திராவிடக் கட்சிகளுக்குப் போட்டியாக அரசியல் செய்யப்போவதாகச் சொல்லிவரும் நடிகர் விஜய் தரப்பு, தங்கள் முதல் மாநாட்டை 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்துகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநாட்டுத் திடலை, அசுர வேகத்தில் சினிமா செட் போல அமைத்துவருகிறார்கள். அந்தத் திடலில் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய சீனியர் முன்னோடித் தலைவர்களின் கட்டவுட்டுகளைப் பெரிதாக வைத்திருக்கும் அவர்கள், அவர்களுக்குச் சமமாக நடுவில், நடிகர் விஜய்யின் கட்-அவுட்டையும் வைத்து திகைக்க வைத்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம், அ.தி.மு.க.வில் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் ஓ.பி.எஸ். ஆதரவாளரான மாஜி மந்திரி வைத்திலிங்கத்தைக் குறிவைத்து, அதிரடி ரெய்டுகளை நடத்தச் செய்து, அந்த இருதரப்பிற்கும் ஒரே நேரத்தில் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது டெல்லி. இது பற்றி தனி ஸ்டோரியை நம் நக்கீரனில் படிக்கலாம். இப்படி தமிழக அரசியல் களம் இப்போது பரபரத்துக் கிடக்கிறது.''’
"நடிகர் விஜய்யின் அரசியல் மூவ்கள் அ.தி.மு.க.வினரை ரொம்பவே அதிரவைத்திருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் இப்போது கிடுகிடுவென நடிகர் விஜய் பக்கம் சாய் கிறார்களாம். இது அ.தி.மு.க. தரப்பை அதிரவைத்திருக்கிறது. இது குறித்து, அ.தி.மு.க. மாஜி மந்திரியான தூத்துக்குடி சண்முக நாதன், ‘இப்படி விஜய் பக்கம் இளைஞர்கள் அணிமாறினால், நம் கட்சியில் இருக்கும் அவர்களின் அப்பாக்களின் கட்சிப் பதவிகளை நாம் பறிக்கவேண்டும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். பொதுவாக தற்போது அ.தி.மு.க. ஆக்டிவாக இல்லை என்பதாலும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விசயங்கள் இல்லாததாலும்தான், இப்படி அக்கட்சியில் இருக்கும் இளைஞர்கள் அணி மாறுகிறார்களாம். எனவே, தி.மு.க.வில், துணை முதல்வரான உதயநிதி, இளைஞர்களை அதிகம் ஈர்ப்பதுபோல், அ.தி.மு.க.வில் எடப்பாடி மகன் மிதுன் மூலம் இளைஞர்களை ஈர்க்கவேண்டும் என்கிற கோரிக்கை சிலர் மூலம் எழுந்திருக்கிறது. இதுகுறித்து யோசித்த எடப்பாடி, தன் மகன் மிதுனை நேரடி அரசியலில் கள மிறக்கும் முடிவிற்கு வந்திருக் கிறாராம். இதையறிந்த மாஜி மந்திரி வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க. சீனியர்கள் சிலரும் அதேபோல் தங்கள் வாரிசு களைக் களமிறக்கி, அரசியல் ஜல்லிக்கட்டு நடத்த ரெடி ஆகிறார்களாம். நடிகர் விஜய் தரப்போ, தங்கள் மாநாட்டிற்கு 5 லட்சம் பேருக்கு மேல் வருவார்கள் என்று சொல்லிவருகிறது.''”
"சரிப்பா, தி.மு.க. பிரமுகர் ஒருவரின் பேச்சு, காங்கிரஸ் தரப்பை கொந்தளிக்க வைத்திருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, தி.மு.க. இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில், ’"கர்மவீரரும் கலைஞரும் -திராவிடத் தலைவர்களின் மதிப்பீடு'’என்கிற புத்தக வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இதில் பேசிய தி.மு.க. மாணவரணிச் செயலாளர் ராஜீவ்காந்தி, ’"ராஜாஜி காலத்தில் மூடப்பட்ட பள்ளிகளைத்தான் காமராஜர் திறந்தார். அவர் சொந்தக் காசில் பள்ளிகளைத் திறக்கவில்லை. இதைத்தான் கல்விக் கண் திறந்த காமராஜர் என்று சொல்கிறார்கள்'’ என்று ஏடாகூடமாகப் பேசினார். இதைக் கேட்டதும் காங்கிரஸ் பிரமுகரான திருச்சி வேலுச்சாமி, ஏகத்துக்கும் டென்சனாகி, உடனே அவரை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலை மையின் உத்தரவின் பேரில், காங்கிரசின் மாணவர் அணித் தலைவர் சின்னத்தம்பி கண்டன அறிக்கை வெளியிட்டார். அதோடு பா.ஜ.க. தமிழிசை, நடிகர் சரத்குமார் மற் றும் காங்கிரஸ் தலைவர்களும், நாடார் அமைப்பினரும் கோபத்தைக் கொப்பளித்தனர். அதனால் இது அரசியல் களத்தில் பல வகை யிலும் பதட்டப் பரபரப்பைப் பற்றவைத்து விட்டது.''”
"முதல்வர் ஸ்டாலின் தலையிட்டதன் பேரில்தான் இப்போது சமாதானக் கொடி பறக்கவிடப்பட்டிருக்கிறது. இல்லையா?''”
"ஆமாங்க தலைவரே, இந்த விவகாரம் முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டி ருக்கிறது. ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் காங்கிரசை மையப்படுத்தி சில சர்ச்சைகள் இருந்துவரும் நிலையில், ராஜீவ்காந்தியின் இந்தப் பேச்சு கூட்டணிக்குள் விரிசலை அதிகரிக்கச் செய்யும் என்றும், நாடார் சமூகத்தின் அதிருப்தியையும் தி.மு.க. இதனால் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஸ்டாலினிடம் எடுத்துச்சொல்லப்பட்டிருக் கிறது. இதைத் தொடர்ந்து, ராஜீவுக்கு செம டோஸ் விழுந்ததாம். அதோடு, தனது பேச்சுக்கு, உடனடியாய் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று அவருக்கு திமு.க. தலைமை உத்தரவிட்டது. அதனால் அரண்டு போன ராஜீவ்காந்தி, ’காமராஜரை நான் சிறுமைப்படுத்தவோ குறைத்துப்பேசவோ இல்லை. என் பேச்சில் எவ்வித தவறான நோக்கமும் இல்லை. காமராஜர் தமிழினத்தின் பெரிய சொத்து. காங் கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும், காமராஜரை நேசிக்கும் உறவுகளுக்கும் என் வருத்தத்தை மனதாரத் தெரிவிக்கிறேன்” என்று வருத் தத்தைத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், காங்கிரசின் கோபத்திற்கும் நாடார் சமூகத்தின் கொந்தளிப் பிற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது அறிவாலயம். மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையிலோ, தர்மசங்கடத்தை உருவாக்கும் வகையிலோ தி.மு.க.வினர் யாரும் பேசக்கூடாது என்கிற பொதுவான அட்வைசையும் கட்சியினருக்கு தி.மு.க. தலைமை கொடுத்திருக்கிறது.''”
"அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நில ஆக்கிரமிப்பு புகார் எழுந்திருக்கிறதே?''”
"சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் அரசுக்குச் சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக புகாரை எழுப்பி, அறப் போர் இயக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 411 கோடி மதிப்பிலான இந்த நிலம், இதுவரை 8 பேருக்குக் கைமாறியிருக்கிறதாம். இந்த நிலத்தை கண்ணப்பன், தனது மகன்களான பிரபு, திவாகர், திலீப் ஆகியோர் பெயரில் வாங்கியிருக்கிறாராம். இந்த நிலத்தைத் தவறாகப் பத்திரப் பதிவு செய்தவர்களும் சிக்கு வார்கள் என்கிறார்கள். 91-96 கால கட்டத்தில் ஜெ.’ஆட்சியில் அமைச்சராக கண்ணப்பன் இருந்தபோதே, ஜெ.வின் ஊழல் விவகாரங்களில் தொடர் புடையவராக சர்ச்சைகளில் அடிபட்டார். இதுபோன்ற வில்லங்க விவகாரங்களை டீல் செய்வதற்கென்றே அவர் நட்சத்திர ஓட்டலான அடையார் கேட் ஓட்டலில், அப்போது தனி அறையே போட்டிருந்தார் என்கிறார்கள், அவரது பழைய அ.தி.மு.க. தோஸ்துகள். இந்த விவகாரம், கண்ணப்பனுக்கு பெரும் சிக்கலையும் தி.மு.க.விற்கு சங்கடத்தையும் ஏற்படுத்தும் என்கிறது வழக்கறிஞர்கள் தரப்பு.''”
"சென்னை கனமழையின்போது தி.மு.க. அரசு எடுத்த அதிரடி நட வடிக்கைகளால் நிலைமை உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டாலும், ஒருசில இடங்களில் அதிகாரிகளிடம் மெத்தனம் தெரிந்ததே?''”
"உண்மைதாங்க தலைவரே, முதல்வருடன் களமிறங்கிய துணை முதல்வர் உதயநிதி, இரவு பகல் பாராமல் களத்தில் பம்பரமாய்ச் சுழன்றார். அதனால் சென்னை மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் உடனடியாக தண்ணீர் வடிய வைக்கப்பட்டது. இந்த நிலையில் உதயநிதி, சில இடங்களில் அதிகாரிகளின் அலட்சியத்தை நேரில் கண்டிருக்கிறார். அவர் கடிந்து கொண்டபிறகே மாநகராட்சி அதிகாரிகள் ஓரளவுக்கு ஓடியாட ஆரம்பித்தனர். இந்த மெத்தனத்திற்குக் காரணமானவர் சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளரான ராஜேந்திரன் என்கிறார்கள். இவர் எடப் பாடிக்கும், மாஜி மந்திரி எஸ்.பி. வேலுமணிக்கும் விசுவாசமானவராம். இவர் தி.மு.க. ஆட்சியிலும் அ.தி.மு.க. தலைவர்களுக் குத்தான் விசுவாசமாக இருந்துவருகிறாராம். அதனால் இந்த கனமழையின்போது, அவர் கள வேலைகளில் அலட்சியமாகவே இருந்தாராம். மாநகராட்சி ஊழியர்களோ, அவர் தலைமைப் பொறியாளர் பதவிக்கே தகுதியானவர் இல்லை. இந்த மழை நீடித்திருந்தால்... சென்னையை மிதக்கவிட்டு, ஆட்சிக்கு வசமாகக் கெட்டபெயரை வாங்கிக் கொடுத்திருப்பார் என்கிறார்கள்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதுமுள்ள கிராம ஊராட்சிகளில், கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதை பஞ்சாயத்துராஜ் சட்டப்படி தமிழக அரசு நடத்த வேண்டும். இந்த வருடம் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1 வருவதால், பல்வேறு நிர்வாக நெருக்கடிகளைக் காரணம் காட்டி, கிராமசபைக் கூட்டங்களைத் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு ஊரக வளர்ச்சித் துறையினர் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கிராமசபைக் கூட்டங்களை தள்ளி வைத்திருக்கும் அரசு, அந்தக் கூட்டம் எப்போது நடக்கும் என்பதைத் தெரிவிக்கவில்லை.''