"ஹலோ தலைவரே, நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசோடு சட்டப்போர் நடத்தப் போவதாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அதிரடியாய் அறிவித்திருக்கிறார் முதல்வர்.''”

"ஆமாம்பா, கவர்னர் விவகாரத்துக்குப் பிறகு, நீதித்துறை மீது அதிக நம்பிக்கை பிறந்திருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்னு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஜனாதிபதி முர்மு நிராகரித்ததை தமிழக மக்கள் ரசிக்கலை. இது தொடர்பான வருத்தத்தை சட்டப் பேரவையில் பதிவு செய்த முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் அடுத்தகட்டம் பற்றி ஆலோசிக்க, சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை 9ஆம் தேதி மாலை கூட்டியிருந்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் புறக்கணித்துவிட்டன. நீட் தேர்வுக்கு விலக்குப்பெற தி.மு.க. அரசு எடுத்த முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விளக்கினார் ஸ்டாலின். இதனையடுத்து, நீட் தேர்வுக்கு விலக்குப்பெற சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் தேவைப் பட்டால் புதிய வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அழுத்தமான தீர்மானத்தை துணை முதல்வர் உதயநிதி முன்மொழிய, அது ஏகமனதாக நிறைவேற்றப் பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த அதிரடி யையும் அதிர்ச்சியுடன் கவனிக்கிறது மோடி அரசு.''”

rr

"இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு முழு அரசு மரியாதை கொடுக்கச் செய்திருக்கிறாரே ஸ்டாலின்?''”

“"ஆமாங்க தலைவரே, முதுபெரும் காங்கிரஸ் தலைவரும் சிறந்த பேச்சாளரும், முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், வயது மூப்பாலும் சிறுநீரகப் பாதிப்பாலும் தனது 93ஆம் வயதில் 8ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக தமிழிசையின் சாலிக்கிராமம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவி, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, பிரேமலதா உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாகச் சென்று அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, சோனியா, ராகுல்காந்தி தொடங்கி அகில இந்தியத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் அறிவித்தபடி அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் மறுநாள் நடந்தது. முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பால் தமிழிசை நெகிழ்ச்சி யடைந்தார். குமரியார், 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒருமுறை எம்.பி.யாகவும் பதவி வகித்திருக்கிறார். தனது அரசியல் பணிகளில் தமிழ்மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த அவர்தான், நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் உரிமையும், அஞ்சல் நிலையங்களில் தமிழில் தந்தி அனுப்பும் உரிமையையும் பெற்றுத்தந்தவர்.''”

Advertisment

"ஆமாம்பா...''”

"பனை மரத்தைப் பாதுகாக்க வேண்டும், பாரத மாதாவுக்கு கோவில் கட்ட வேண்டும், மது விலக்கை அமல்படுத்த வேண்டும், இந்தியா முழுவதும் நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்டவைகளுக்காக பல்வேறு போராட்டங் களை முன்னெடுத்தவர் குமரியார். இடையில் காங்கிரஸ் தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அக்கட்சியிலிருந்து விலகி, காந்தி-காமராஜர் தேசிய காங்கிரஸ் என்கிற பெயரில் கட்சியையும் நடத்திய குமரியார், அது மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் தனது கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸில் 88-ல் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்பிறகு வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், தமிழுக்காகவும் தொண்டாற்றினார் குமரி அனந்தன். கடந்த வருடம், தகைசால் தமிழர் என்ற விருதை தமிழக அரசின் சார்பில் வழங்கி இவரை முதல்வர் ஸ்டாலின் பெருமைப்படுத்தியதையும் மறக்க முடியாது.''”

"சரிப்பா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருக்கிறாரே?''”

Advertisment

rr

"அமித்ஷா 10ஆம் தேதி இரவு சென்னை வந்தார். அவரது வருகையை முன்னிட்டு, 9ஆம் தேதி காலையிலிருந்தே சென்னை விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தினர். சென்னைக்கு வந்துள்ள அமித்ஷா, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போதைய மாநில தலைவரை மாற்றவேண்டும் என்றும், மாற்றக்கூடாது என்றும் தமிழக பா.ஜ.க.வில் இரண்டு கோஷ்டிகள் பஞ்சாயத்து செய்துகொண்டிருக்கும் சூழலில், தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்கவே அவரது சென்னை பயணம் என்கிறார்கள். தற்போதைய தலைவரே நீடித்தாலும் சரி, அல்லது புதிய தலைவர் நியமிக்கப்பட்டாலும் சரி, தமிழக பா.ஜ.க.வில் அதிருப்திகள் பலமாக வெடிக்கப்போவது மட்டும் உறுதி என்கிறது கமலாலய வட்டாரம்.''”

"இருந்தாலும் மாநில பா.ஜ.க. தலைவர் ரேஸில் சிலரது பெயர் அழுத்தமாக அடிபடு கிறதே?''”

"சென்னை வருவதற்கு முன்னதாகவே அமித்ஷா, புதிய தமிழக பா.ஜ.க. தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து பலரிடமும் விசாரித்தாராம். அப்போது, ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு முன்பு சப்போர்ட்டாக இருந்த ராம்நாத் கோவிந்த், சில ஆலோசனைகளை அமித்ஷாவுக்குச் சொன்னாராம். அதன்படி, ஆனந்தன் அய்யாசாமி என்கிற தலித் இனத்தைச் சேர்ந்த இளைஞர், நயினார்நாகேந்திரனை விட, தலைவருக்கான ரேஸில் முந்திக் கொண்டிருக்கிறார் என்கிறது கமலாலயத் தரப்பு. நயினாரைத் தலைவராக்கினால், தற்போதைய மாநில நிர்வாகியைப் போலவே அவர் மீதும் ஊழல் புகார் கள் அதிகரிக்கும் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்களாம். ஆனந்த் அய்யாசாமியைப் போலவே ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதா ராமனின் விருப்பப்படி, கே.டி.ராகவனும் மாநிலத் தலைவருக்கான பரிந்துரைப் பட்டியலில் இருந்தபோதும், ஆனந்தின் பக்கமே காற்று சற்று அதிகம் வீசுகிறது என்கிறார்கள். இந்த நிலையில் சென்னை வந்த அமித்ஷா, ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் வைத்து எடப்பாடியை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்.''”

"அமலாக்கத்துறையின் சம்மனுக்கு தண்ணி காட்டிவந்த அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி, நீதிமன்றத்தில் ஆஜராகி யிருக்கிறாரே?''”

r

"ஆமாங்க தலைவரே, அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 9ஆம் தேதி திடீரென ஆஜராகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டிருந்த போதும், இவ்வளவு நாளாக ஆஜராகாமல் தலைமறைவாகவே இருந்துவந்த, அசோக் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய 13 பேரும் 9ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் அசோக் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அவர்கள் அனைவரும் ஜாமீன் கேட்டு மனு அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவர்கள் அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்க வேண்டும் என்றும், ஜாமீன் உத்தரவாதத் தொகையாக தலா 2 லட்சம் ரூபாயை இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு, அடுத்த விசாரணை யை 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அசோக் ஆஜரான தை அடுத்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.''”

"பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கு, க்ளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கியிருக்கிறதே?''”

"கோவையை அடுத்த பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் உறையவைத்தது. இது தொடர்பான புகாரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணி வண்ணன் ஹேரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்த நிலையில், மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் விசாரணை நடந்துவரு கிறது. கடந்த வாரம் இங்கு ஆஜர்படுத்தப் பட்ட 9 பேரிடமும், சாட்சி விசாரணை குறித்து நீதிபதி கேள்வி களைக் கேட்டார். இதனிடையே விசாரணை 9ஆம் தேதி காணொலி மூலம் நடந்தது. அப் போது, எதிர்த்தரப்பு சாட்சிகளான பொள் ளாச்சி நகர சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத் துவமனை உள்தங்கு மருத்துவர் ஆகியோர் வரும் 15ஆம் தேதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. எப்படியாவது வழக்கை இழுத்தடித்து தீர்ப்பைத் தாமதப்படுத்தி விடலாம் என்ற நோக்கத்தில் குற்றவாளிகள் தரப்பு, புதிய புதிய மனுக்களை போட்டுவருகிறது. இருப்பினும் விரைவாக, பெண்கள் நிமிரும்படியான நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்க்கிறது.''”

"என்னப்பா, சென்னை சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மத்தியில் சலசலப்பு தெரிகிறதே?''”

"சென்னை ஆவடியில், சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்புப் படை வீரர்களுக்கான கேண்டீன் இயங்கிவந்தது. இந்த சி.ஆர். பி.எஃப். படையினர்தான் தமிழக முதல்வர் தொடங்கி, த.வெ.க. தலைவரான நடிகர் விஜய், எடப்பாடி மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி வரை பலருக்கும் பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள். இவர்களின் இந்த ஆவடி கேண்டீனில் இவர்கள் குடும் பத்திற்குத் தேவையான மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் மிகவும் சலுகை விலையில் விற்கப்பட்டு வந்தது. இப்போது இந்த கேண்டீனை இழுத்து மூடிவிட்டார்கள். காரணம், மற்ற பொருட்களைப் போலவே இந்தப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு காஸ்ட்லியான மதுபானங்களும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பா.ஜ.க. பிரமுகர்கள் சிலர், இங்குள்ள மதுபானங்களை பெருமளவில் எடுத்துச் சென்று தாங்கள் நடத்திவரும் பார்களில் பலமடங்கு விலை வைத்து, கொழுத்த லாபம் பார்த்து வந்தார்களாம். இது தொடர்பான புகார்கள் மேலே சென்றதால்தான் இந்த கேண்டீனை இழுத்து மூடிவிட்டார்களாம். இதனால் பாதுகாப்புப் படைவீரர்கள் பரிதவித்துவருகிறார்கள்.''”

"புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளும் முடிவில் இருப்பதாகத் தகவல் வருகிறதே?''”

"தமிழக மற்றும் புதுச்சேரியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி இருந்துவருகிறது. இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி உறவை புதுச்சேரியில் முறித்துக்கொள்ளவும், தனித்துப் போட்டியிடவும் அங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். தனித்துப் போட்டியிட்டால் காங்கிரசின் பலம் எப்படி இருக்கும் என்பதை அறிய ரகசிய சர்வே ஒன்றை எடுத்துப் பார்த்தனர். அப்போது, ஆட்சியைத் தனித்துப் பிடிக்கிற அளவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என ரிசல்ட் வந்ததாம். அதனால் வேறு சில உத்திகளைப் பயன்படுத்தி இரண்டாம் கட்டமாக மீண்டும் ஒரு சர்வேயை எடுக்கத் தீர்மானித்துள்ளது புதுவை காங்கிரஸ். அதேசமயம், ’இதெல்லாம் கதைக் காகுமா?’என்கிற தொனியில் மற்ற அரசியல் கட்சிகள் இதுகுறித்து கமெண்ட் பண்ணுகின்றன. இந்த நிலையில் புதுவை காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், என்னதான் இங்கே இவர்கள் முடிவு செய்தாலும், அகில இந்திய காங்கிரஸ் தலைமை, தனித்துப் போட்டியிட ஒப்புக்கொள்ளாது என்கிறார்கள்.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். கவர்னர் ஆர்.என்.ரவியின் தலையில் உறைக்கிற அளவுக்கு, உச்சநீதிமன்றம் கொடுத்த சம்மட்டி அடித் தீர்ப்பால், அவர் பலத்த அப்செட் டில் இருக்கிறாராம். அவரால் தனக்கும் தலைகுனிவு ஏற்பட்டி ருப்பதாக டெல்லி கருதுகிறதாம். அதனால் ஆர்.என்.ரவியை மாற்றி விட்டு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை, தமிழக கவர்னராக நியமிக்க டெல்லி திட்டமிட்டிருக்கிறதாம். எனவே ரவியின் நாட்கள் எண்ணப் படுகின்றன என்கிறது டெல்லி வட்டாரம்.''”