இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை நோக்கிச்செல்லும் சூழலில், மக்களிடையே அச்சமும் பெருகிவருகிறது. என்னதான் தடுப்பூசிகள், தடுப்புமுறைகள் குறித்த விழிப்புணர்வுகள் வந்தாலும், அதையும் மீறி, கொரோனா மீதான பயம் குறைவதாக இல்லை.
கிராமங்களில் தொடர்ச்சியாக மழை இல்லையென்றால் அம்மனுக்கு கோபம் வந்ததாகக் கூறி, விழா எடுத்து மழைக்காக வேண்டுவார்கள். அதேபோல இந்த கொரோனா மீதான பயமும் மக்களை என்னென்னவோ யோசிக்க வைத்துவிட்டது.
கோயமுத்தூர் இருகூர் பகுதியில் கொரோனா நோய்த்தொற்றையே கடவுளாக மாற்றி, "கொரோனா தேவி' என்று பெயரிட்டு உருவத் தையே உருவாக்கிவிட்டார்கள் காமாட்சிபுரி ஆதினம் பக்தர்கள். இந்த கொரோனா தேவி உருவத்தை முழுக்க கருங்கல்லில் உருவாக்கி, அந்த சிலைக்கு 48 நாட்கள் யாகம், நடத்தி, சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இந்த சிலைதான் தற்போது தமிழகம் முழுக்க... இல்லையில்லை, இந்தியா முழுவதுமே பேச்சாக உள்ளது.
"கொரோனா என்னும் கொடிய நோய்த் தொற்று, மனித குலத்துக்கே எதிரியான ஒன்று, பெரியவர்கள் முதல் குழந்தைகள்வரை வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் பாதித்து, உயிரையே குடிக்கிறது. இதனை எந்த அடிப்படை யில் கடவுளாக உருவகித்தார்கள்' என்ற விமர்சனம் பல தரப்பிலும் எழுப்பப்பட்டுவருகிறது.
"இந்தக் கொடியநோயை கடவுளாக்கி சிலை செய்திருப்பதின் நோக்கம் என்ன?' என கேட்ப தற்காக காமாட்சிபுரி ஆதினத்தைத் தொடர்பு கொண்டோம். காமாட்சிபுரி ஆதீனம் சார்பாக அவரது மேலாளர் ஆனந்த் பாரதி, "கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள்' என்றபடி நம்மிடம் பேசினார்.
"சுமார் 400 ஆண்டுக்கு முன்பு அம்மை நோய், காலரா ஏற்பட்டபோது, பல உயிர்களை இழந்து மக்கள் திக்கற்று நின்றனர். அப்போது, "தெய்வமே துணை' என்ற வாக்கின்படி, கிராமங்களில் மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் என்று பல்வேறு சாமிகளின் வழிபாட்டினை ஏற் படுத்தினர். வேப்பிலை கும்பங்களும், நடுகற்களும் வைக்கப்பட்டு வழிபட்ட இடங்களெல் லாம் பிற்காலத்தில் கோவில்களாக மாறின. இதற்காக எழுதப்பட்ட சாஸ்திரங்கள் இப்போது இல்லாவிட்டாலும் மக்களாக ஏற்படுத்திய வழிபாடுகள், அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு, அந்த நம்பிக்கையின் காரணமாக அவர்களை நோய்கள் அண்டாதிருந்தன.
அதேபோல இன்று கொரோனோ கிருமி பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு பயப்படக்கூடாது. "திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை' என்று கருங்கல்லாலான கொரோனா தேவி சிலை வடிவமைக்கப்பட்டு, 48 நாள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யாகத்திற்கு பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ஆலயப் பணியாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
இன்று பழமை வாய்ந்த கிராமங் களில் மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள் இருப்பதுபோல, இந்த கொரோனா தேவி வழிபாடும் தற்போது அவசியமாகிறது. இந்த வழிபாட்டின் மூலம் மக்கள் நிச்சயமாகக் குணமடைவார்கள். மக்களிடம், அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்படியும், முகக் கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்றும்படியும், ஆரோக்கிய உணவை உட்கொள்வது அவசியமென் றும் சொல்லியிருக்கிறோம். அதோடு, ஆதினத்தின்மூலம் செயல்படும் உலக சமாதான தெய்வீகப் பேரவை சார்பாக, கிராமங்களுக்கு கொடுக்கும் கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள், உணவு ஆகியவை மக்களைக் குணப்படுத்தும்'' என்றவரிடம், காமாட்சிபுரி ஆதீனத்தின் புகைப்படம் வேண்டுமென்று கேட்டோம்.
"உங்களுக்குத் தெரியாதா? அம்பாள் படத்தைப் போடுங்கள். அவர்தான் அம்பாள். அம்பாள் தான் அவர்'' என்றார் அதிரடியாக.
"இப்படியொரு கொரோனோ சிலையை உங்கள் ஊர் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?'' என இருகூர் பேரூர் கழக தி.மு.க. செயலாளர் இ.வே.மணியிடம் கேட்டோம். "என்ன சொல்வது என தெரியவில்லை. இந்த நவீன மருத்துவ காலத்தில் என்ன வேண்டுமானாலும் மருத்துவ உலகத்தில் செய்து கொள்ளலாம் என நினைத்த உலக நாடுகளே கொரோனோவால் உருக் குலைந்து, செய்வதறியாது முகங்கருகி நிற் கின்றன. தடுக்கி விழுந்தாலே மனிதச் சடலங் களும், மருந்து இல்லாமல் இறக்கும் சடலங்களும் வீதியெங்கும் கிடக்கின்றன.
இப்படி மருத்துவத்தின் மீது நம்பிக்கை குறைந்துள்ள நிலைதான் கொரோனா தேவி சிலை என்ற ஒன்றை நம்பும்படி செய்துள்ளது. மக்களின் தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் எதுவும் சொல்வதற்கில்லை. ஏற்கனவே கோவை மக்களிடம் கல்லா கட்டும் நபர்கள் இருக்கும் சூழலில், இதை வைத்தும் யாரும் மக்களிடம் கல்லா கட்டா மலிருந்தால் சரி'' என்றார் சற்று வேதனையாக.
கோவையில் டவுன்ஹால் பகுதி, கோவை புதூர், பீளமேடு ஆகிய பகுதிகளில் ஏற்கனவே ப்ளேக் நோயின் நினைவாக ப்ளேக் மாரியம்மன் கோவில்கள் இருக்கின்றன. கோவை மட்டுமல் லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ப்ளேக் மாரியம்மன் கோவில்கள் உள்ளன.
தற்போது இந்த வரிசையில் கோவை கொரோனா தேவி சிலை வந்துள்ளது. "கோவை யென்றாலே புதிய புதிய சிலைகள் திடீரென முளைப்பதும், உடனடியாக பேமஸாவதும், அதை வைத்து பலர் வளர்ச்சியடைவதும் வாடிக்கையானது தானே... கொரோனா தேவி மட்டும் விதிவிலக்கா என்ன?' என்று சிலர் முணுமுணுப்பதையும் கேட்க முடிகிறது.