கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இரவு, மாணவி ஒருவர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், மாணவியின் புகாரின் பேரில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பிரியாணிக்கடை ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை மே 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதிவரை, இரு தரப்பிலும் தங்கள் இறுதி வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பின் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனச் சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதனையொட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசேகரன் அங்கி ருந்து மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி ராஜலட்சுமி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி ராஜலட்சுமி "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவர் மீதான 11 பிரிவுகளிலும் குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ளது''”எனத் தீர்ப்பை வாசித்தார். மேலும்,“தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவு உள்ளதா?”எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். அதே சமயம் ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர் துரை அருணை கேள்விகளு டன் சந்தித்தோம்.
ஐந்தே மாதங்களில் கிடைத்த நீதி என தமிழக அரசு கொண் டாடும் இந்தத் தீர்ப்பை, "பாதி நீதி' என எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருக்கிறாரே?
பாதி நீதி எனச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொள்ளாச்சி வழக்கில் கிடைத்ததுதான் பாதி நீதி. மீதி நீதி எங்கே என்றால், வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள ஒரு முக்கியப் புள்ளியைச் சுற்றிதான் உள்ளது. அவர் எப்படி காப்பாற்றப்பட்டார் என்றே தெரியவில்லை. மக்கள் மத்தியில் இன்னமும் அந்தக் கேள்வி உள்ளது. ஐந்தே மாதங்களில் கிடைத்த நீதி என்பது அவசரமான நீதி கிடையாது. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி எனச் சொல்வார்கள். விரைவு நீதிமன்றங்கள் எதற்காக உள்ளன? விரைவாக விசாரிக்கத்தானே. அது தவறு என்பது அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கும் செயல்.
பொள்ளாச்சி வழக்கில் அ.தி.மு.க. அரசு CBI-க்கு நடுநிலையுடன் வழக்கை மாற்றியதால் நீதி கிடைத்தது. அதேபோல ஞானசேகரன் வழக் கையும் திமுக அரசு மாற்றவேண்டியது தானே.. என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளாரே?
இது முழுக்க முழுக்கப் பொய். பலரும் இந்த வழக்கை CBI-க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் போதுமான ஆதாரங்களை தமிழக காவல்துறை திரட்டியுள்ளது. அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கட்டும், CBI விசாரணை தேவையில்லை என நீதிமன்றம் சொன்னதைத்தான் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. எடப்பாடி சொல்வதுபோல, அதிமுக ஆட்சியில் CBI விசாரணைக்கு அவராகவே உத்தரவிடவில்லை. மாறாக, வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்ட பலர் தொடுத்த வழக்கில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, எடப்பாடி வேறுவழியின்றி CBI-க்கு வழக்கை மாற்றினார்.
விஜய் தனது அறிக்கையில், FIR வெளியாகக் காரணமாக இருந்ததே தமிழகக் காவல்துறை அதிகாரிகள்தான் என்கிறாரே?
இந்த FIR-ஐ கசியவிட்டதே மத்திய அரசின் தேசிய தகவல் மையம்தான் (NIC). அரசு தொடர்பான மின்னணு கோப்புகளை பராமரிக்கும் NIC-ன் மூத்த இயக்குநர் ஆர்.அருள் மொழிவர்மன் வெளியிட்டிருந்த விளக்கத்தில், சில தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தில் (IPC) இருந்து பாரதிய நியாய சன்ஹிதாவுக்கு (BNS)மாற்றியதால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எப்.ஐ.ஆரை முழுமையாக பிளாக் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது எனக் கூறியிருந்தார். இது தெரியாமல் விஜய் பேசுகிறார். அறிக்கை எழுதுவதற்கு சட்ட நுணுக்கம் தெரிந்த நபர்களை விஜய் வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறேன். காவல்துறை இதை கசியவிட்டனர் என்பது நியாயமில்லாத ஒன்று.
இந்தத் தீர்ப்பு காவல் துறைக்கு கிடைத்த வெற்றி என முதல்வர் பச்சைப் பொய் சொல்கிறார் என விஜய் கொந்தளித்துள்ளார். இது உண்மையில் யாருக்கு கிடைத்த வெற்றி?
சிறப்பு புலனாய்வுக் குழுவில் (SIT) இருக்கும் அதிகாரிகள் யார்? தமிழக அரசின் ஆளுகைக்கு கீழ் வருபவர்கள்தானே. அவர்களின் முனைப்பு இல்லாமல், அரசின் ஈடுபாடு இல்லாமல் SIT வழக்கறிஞர் நுணுக்கமாகவும் உறுதியாகவும் வாதங்களை முன்வைத்திருக்க முடியுமா? தமிழக காவல்துறையை குறைத்து மதிப்பிடுகிறார் விஜய். ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி நடத்தும் விஜய்க்கு, பரந்துபட்ட பார்வை வேண்டும்.
ஞானசேகரன் குற்றவாளி என மே 28-ல் அறிவித்த நீதிமன்றம்.. தண்டனை விவரங்களை ஜூன் 2 வரை ஏன் தாமதப் படுத்துகிறது?
இது அரிதிலும் அரிதான வழக்காக உள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் மீது 11 பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. அத்தனை குற்றச்சாட்டுகளும் நிரூபண மாகியுள்ளன. 331 (6) இரவில் பதுங்கியிருந்து அத்துமீறுதல், 126 (2) தவறான முறையில் கட்டுப்படுத்துதல், 140 (4) கடுமையான காயத்தை ஏற்படுத்தும் வகையில் கடத்தல், 75 (2) பாலியல் துன்புறுத்தல், 64(1) பாலியல் வன்கொடுமை என இந்தப் பிரிவுகள் எல்லாமே BNS சட்டத்திற்கு கீழே வருகின்றன. இதனால், அதிகபட்சம் ஆயுள் தண்டனை கொடுப்பதற்கான வாய்ப்புகளே உள்ளது. இதில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுப்பதற்கான சட்ட வாய்புகள் குறித்து, நீதிபதி ஆலோசித்து வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
பொள்ளாச்சி வழக்கு குற்றவாளிகள் "கொழுத்து'ப்போய் வெளியே வந்தார்கள், இந்த வழக்கில் ஞானசேகரன் "மெலிந்து' போய் வெளிவருகிறார் என்ன காரணம்?
பொருளாதார ரீதியான வித்தியாசம் தான். பொள்ளாச்சி குற்றவாளிகள் வசதிபடைத்தவர்கள் என்பதால், அவர்கள் சமைத்து சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு கொஞ்சம் பணம் கட்டவேண்டும். ஞானசேகரனுக்கு அந்த வாய்ப்புகள் இல்லாமல் இருந்திருக்கலாம். வேறெந்த பெரிய காரணமும் இல்லை.
சந்திப்பு: -பிருதிவி