25 ஆண்டுகளுக்கு முன், முக்கடலும் சங்கமிக்கும் குமரிக் கடலில் கலைஞரால் உருவாக்கித் திறக்கப்பட்ட, 133 அடி உயரத்துடன் வானுயர்ந்து கம்பீரமாக நிற்கும் முப்பால் யாத்த ஞானத் தமிழ் அய்யன் திருவள்ளுவர் சிலை உருவாகி 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு 37 கோடி ரூபாய் செலவில் கடல்நடுவே கண்ணாடிப் பாலம் அமைத்து அதைத் திறந்து வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இமைப்பொழுதும் மறவாமல் எழுத்தில், பேச்சில், இயக்கத்தில் திருவள்ளுவரை நினைவு படுத்திக்கொண்டேயிருந்தவர் கலைஞர். திருக் குறளுக்கு குறளோவியம் தீட்டி, திருவள்ளுவரை ஓங்கியுயர்ந்த சிலையாக நிறுத்தும் எண்ணம் 1975-ல் கலைஞர் மனதில் உதித்தது. 31-12-1975-ல் அமைச்சரவைக் கூட்டத்தில் திருவள்ளுவர் இயற்றிய குறளின் 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் சிலையமைக்க முடிவுசெய்து அன்றே அறிவிப்பும் வெளியிட்டார்.
அதன்பிறகு ஆட்சி மாற்றம், அரசியல் நெருக்கடிகள் இவற்றால் காலதாமதமாகி, 1990 ஜூன் 6-ம் தேதி சிலையமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தார். 99-ல் வள்ளுவரின் சிலைப் பணி நிறைவடைந்தது. 1.1.2000-ல் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் வாழ்த்துகளுடன் அன்று முதல் வராக இருந்த கலைஞர் திருவள்ளுவர் சிலையைத் திறந்துவைத்தார். உலகையே அச்சுறுத்திய சுனாமிப் பேரலைக்கும் அசையாமல் உறுதித்தன்மை குலையாமல் கம்பீரத்துடன் இன்றும் நின்றுகொண்டிருக்கிறது அந்த வள்ளுவர் சிலை. வள்ளுவர் சிலையை உப்புக் காற்றிலிருந்து பாதுகாக்க, அதை பராமரிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் "வாக்கர்' எனும் ரசாயனக் கலவை பூசவேண்டும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி நடந்தபோது ஒரேயொரு முறைதான் ரசாயனம் பூசப்பட்டது. கடந்த 2011லிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு ரசாயனம் பூசாததால், சிலையின் தன்மை மாறியிருப்பதோடு சில பாகங்களில் சிராய்ப்பு ஏற்பட்டிருப்பதாக திருவள்ளுவர் பேரவையினரும் தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இருந்தபோதும் அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.
பின்னர் தி.மு.க. அரசு அமைந்ததும், முதல்வர் ஸ்டாலின் 2022 ஜூன் மாதம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன முலாம் பூசி புதுப்பொலிவுக்கு கொண்டுவந்தார். இந்த நிலையில்தான் 25 ஆண்டுகளுக்கு முன் கலைஞரால் நிறுவப்பட்டு, தற்போது முதல்வர் ஸ்டாலினால் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடி முடிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு, திராவிட மாடல் அரசு சார்பில் மேற்கொள்ளும் பணிகளுக்கு சமீபத்தில் 10 கோடியே 89 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தார்.
வள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டி, கடற்கரையிலிருந்து கடலில் 950 மீட்டர் தொலைவில் இருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழையிலான பாலம் அமைக்கும் பணி அமைக்க முதல்வர் திட்டமிட்டிருந்தார். அந்தப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அடிக்கடி கன்னியாகுமரி வந்து சென்றதன் பயனாக, வெள்ளிவிழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக பணிகள் நிறைவுக்குவந்தன.
இதேபோல் வெள்ளி விழாவுக்காக அரசு ஒதுக்கிய நிதியில் காந்தி, காமராஜர் நினைவு மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதோடு, மேலும் 35 ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடந்த குமரி முனை பஸ் ஸ்டாண்டும் புதுப்பொலிவடைந்தது. மேலும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காட்சி மையங்கள், தமிழன்னை பூங்கா, காட்சி கோபுரம், திரிவேணி சங்கமம், படகு முகாம் மற்றும் சாலைகள் என அனைத்தும் புத்துயிர் பெற்று ஜொலிக்கிறது கன்னியாகுமரி நகரம். திருவள்ளுவர் சிலை இரவு நேரத்தில் 3டி லேசர் மின்ஒளியால் ஒளிரும் விதத்தில் செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.
திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா பணிகளை துரிதப்படுத்தி கவனிப்பதற்காக மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு கடந்த 19 நாட்களில் 9 முறை கன்னியா குமரி வந்து கலெக்டர் உட்பட அதிகாரிகளுடன் ஆலோசித்து விழா ஏற்பாடுகளை ஆய்வுசெய்தார். மேலும் அமைச்சர்கள் பெரியகருப்பன், மதிவேந் தன், சாமிநாதன், ராஜேந்திரன் ஆகியோரும் ஆய்வுகளை மேற்கொண்டனர். கலெக்டர் அழகுமீனாவும் மற்ற பணிகளோடு வெள்ளிவிழா பணிகளையும் சிறப்பாக நடத்தி முடிக்க, இரவு பகலாக கண்விழித்து பணியாற்றியதை அமைச்சர்களே பாராட்டியுள்ளனர்.
டிசம்பர் 30-ஆம் தேதி மாலை தமிழக முதல் வர் ஸ்டாலின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகுத் தளத்திலிருந்து திருவள்ளுவர் சிலைக்குச் சென்றார். அவருடன் துணை முதல்வர்.உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உள்பட பல அதிகாரிகள் உடன் சென்றனர். அங்கு முதல்வர் திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின் திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் இணைக்கும் கண்ணாடி இழையாலான கூண்டுப் பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். பின் அந்தப் பாலத்தில் நடந்துசென்றார். இதை கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நேரத்தில் கடும் மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே திரு வள்ளுவரின் சிலைக் கான பாலத் திறப்பு விழாவை பார்வை யிட்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து படகுத் தளத்திற்கு வந்த முதல்வர் ஸ்டா லின் அங்கு அமைக் கப்பட்ட திருவள்ளு வரின் 25-வது வெள்ளி விழா மண் சிற்பத்தைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மேடையில் அமர்ந்து திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு பாறையிடையே அமையப்பெற்ற கண்ணாடிக் கூண்டு பாலத்தில் 3டி லேசர் வண்ண, வண்ண மின் விளக்குகளின் ஜொலிப்பை கண்டு ரசித்தார். வெள்ளி விழா மேடைக்கு வருகை தந்து அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சுகிசிவம் பட்டிமன்றத்தை சுமார் ஒரு மணி நேரம் கேட்டு ரசித்தார்.
நம்மிடம் பேசிய திருக்குறள் உலக சாதனை யாளர் பேரவை செயலாளர்களான கலைவாணி, மல்லிகா, அமுதா... "திருக்குறளை தேசிய நூலாக்குவதற்காக எங்கள் இயக்கம் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்துவருகிறோம். இதற்காக கலைஞர் வானுயர்ந்து எழுப்பிய திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவில் தமிழர்களின் விழிப்புணர்வுக்காக நெல்லையில் இருந்து கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைவரை திருவள்ளுவரின் குறளை பரப்பி ஊர்வலமாக வந்தோம்.
இந்த நிலையில் முதல்வர் அவர்கள் திருக்குறள், அரசு அலுவலகங்களில் மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களிலும் குறளை பரப்பும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது எங்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. அது போல் பள்ளி அறைகளில் மட்டும் ஒலித்த திருக் குறள், உலகம் முமுவதும் ஒலிக்க எங்களைப்போல் பலரும் எடுத்த முயற்சிகள் தொடர்ந்துகொண்டு தானிருக்கிறது. அதற்கு முதல்வரின் பேச்சின் வீரியத்தையும், இனி எல்லோரும் திருக்குறளின் குறள்களைச் சொல்லும் விதமாக நடவடிக்கை எடுக் கப்படும் என்று அவர் கூறியதையும் நாங்கள் எங்க ளின் உள்ளம் குளிர வரவேற்கிறோம்'' என்றார்கள்.
டிசம்பர் 31-ஆம் தேதி, வெள்ளி விழா மேடைக்கு மீண்டும் வருகை தந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்ட திருவள்ளுவர், திருக்குறள் குறித்த ஓலைச்சுவடிகள், புத்தகம், மின்நூல்கள் கண்காட்சியைத் திறந்துவைத்தார். தொடர்ந்து திருவள்ளுவர் நுழைவு வாயிலுக்கு அடிக்கல் நாட்டினார். திருக்குறள் சம்பந்தமான போட்டி களில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடை யாளம். வள்ளுவரை என்றென்றைக்குமாக கொண் டாடிக்கொண்டேயிருப்போம். திருவள்ளுவர் சிலையை நேரில் கண்டு ரசிப்பதற்காக காமராஜர், மார்ஷல் நேசமணி, ஜி.யு.போப் ஆகியோரின் பெயர்களில் மூன்று படகுகள் வாங்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரமாகக் கொண்டாடப்படும். மேலும் கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். பொதுவாக ஒரு குடும்பத்தில் தகப்பனார் என்ன விட்டுச் சென்றார் என்று கேட்பார்கள். என்னைப் பொருத்தவரையில் கலைஞர் விட்டுச் சென்றது எதுவென்றால், நம் கண்ணெதிரே நிற்கின்ற வானுயர்ந்த திருவள்ளுவர் சிலை. தவிரவும் தமிழுக்கும், தமிழனுக்கும், தமிழ்நாட்டிற்கும் செய்த ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இது தனிப்பட்ட ஸ்டாலினுக்காகவா செய்தார்? இல்லை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் செய்தார். என்னைப் பொருத்தவரையில் கலைஞர் வழியில் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தமிழுக்கும் உழைப்பதே என் நோக்கம்''’என்றார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு வள்ளுவருக்கான வெள்ளி விழா கொண்டாட்டத்தோடு, 2024 முடி வுக்கு வந்திருக்கிறது.
-மணிகண்டன், ராம்குமார்