அம்மா... "உடம்பு சரியில் லை'ன்னு பொண்ணு சொன்னாள். பக்கத்தில இருந்த டாக்டர்கிட்ட கூட்டிப்போனேன். 4 மாத கர்ப்பம் என்கிறார். நீங்களே விசாரித்து நீதி வழங்குங்கள்'' என ராகல்பாவி பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ் பெக்டர் கவிதாவிடம் போய் நிற்க, 3 சிறுவர்கள் உள்ளிட்ட 9 நபர்கள் போக்ஸோ வழக்கில் கைதாகியுள்ளனர்.
2019-ஆம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வழக்கு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கிய நிலையில், பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள உடுமலைப்பேட்டையில் மீண்டுமொரு பாலியல் சம்பவம் பதிவாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக் குட்பட்டது ராகல்பாவி பகுதி. தற்பொழுது கர்ப்பிணியாக இருக்கும் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி, பிறந்தபொழுதே, சங்கிலிக் கருப்பர் கோவில் தெருவினைச் சேர்ந்த ஆறுமுகம், சரஸ்வதி தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார். பின்னாளில் வளர்ப்புப் பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், சரஸ்வதியின் தங்கையான ஆராயியின் பாதுகாப்பில் வளார்க்கப்பட்டிருக்கிறார் பாதிக்கப்பட்ட சிறுமி.
உடுமலைப்பேட்டை எஸ்.கே.பி. பள்ளியில் 10-வது படித்துக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட சிறுமிக்கு யு.கே.சி. நகரைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அறிமுகமாகியிருக்கிறார். அதன் பின்னரே போக்ஸோ வழக்கு என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
"10-வது படித்துக் கொண்டிருக்கும் பொழுது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 9-ஆவது படிக்கும் சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இது படிப்பையே தடை செய்ய, 10-ஆவது வகுப்பில் பாதியிலேயே இடைநிறுத்தம் செய்திருக்கின்றார். அதன் பின்னும், "அப்பாகிட்ட கூறி உன்னை ரேசன் கடையில் வேலைக்குச் சேர்த்துவிடுறேன்'’ என்ற ரீதியில் 9-வது வகுப்பு சிறுவன் பழக, பழக்கம் நெருக்கமானது. அவன் மூலமாக உடுமலைப்பேட்டை சங்கிலி நாடார் வீதி ஜெயகாளீஸ்வரன், செல்லமுத்து வீதி மதன்குமார் மற்றும் சாய்ராம் லேஅவுட் பகுதியினைச் சேர்ந்த பரணிகுமார் ஆகியோருடன் "ஹாய்' சொல்லுமளவிற்கு பழக்கம் உண்டானது. இதில் "மதன்குமார் உன்னிடம் பேசவேண்டுமென்கிறார், நீ வா' என அழைக்க, 19-01-2024 அன்று உடுமலைப் பேட்டையிலுள்ள சிவா லாட்ஜிற்கு சென்றுள்ளார். அங்கு மேற்கண்ட மூவரும் இருக்க, நால்வருமாக சேர்ந்து வேண்டாம் என்று மன்றாடியபோதும் ஆடைகளைக் களைந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.
அதன்பின் பிரகாஷ், நந்தகோபால், பவா பாரதி ஆகியோர் பாலியல் வல்லுறவு செய்தனர். இதுபோல் 20-03, 24-03 மற்றும் 17-04-2024 அன்று வரை தொடர்ந்தது. தவிரவும், அந்தச் சிறுமியின் 15 வயது தோழியின் நண்பரான 14, 15 வயதுடைய சிறுவர்கள் இருவரும் அவளை பாலியல் வல்லுறவு செய்தனர். பின்னாளில் சிறுமியோடு, தோழியையும் சேர்த்துக் கொண்டு கூட்டுப் பாலியல் வல்லுறவு தொடர்ந்தது. இதில் சிறுமி கர்ப்பமானாள்'' என்கின்ற புகாரின் அடிப்படையில் சிறார்கள் மூவர் உட்பட 9 நபர்கள் மீது போக்ஸோ வழக்கினைப் பதிவுசெய்துள்ளது உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம்.
மகளிர் காக்கியோ, "அந்தப் பெண் புகார் கொடுத்ததன் அடிப்படையில் சிறுவன் ஒருவனை விசாரித்தோம். சிறுவனோ, நான் இல்லை. அவன்தான் என வேறொரு சிறுவனை கைகாண்பிக்க அப்படியே மாறி, மாறி 9 நபர்களும் விசாரணைக்குள் வந்தனர். அதுபோக இன்னொரு சிறுமி. மது போதையில் ஒத்துழைத்துள்ளனர் இரு சிறுமிகளும். மொபைல் போன்களைப் பார்த்தால் கண்றாவி... என்னவென்று சொல்ல? செல்போனின் சாபக் கேடுகளுள் இதுவும் ஒன்று'' என்கிறார் அவர்.
பெண்ணின் புகாரின் பேரில் 9 நபர்களும் கைதுசெய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, மூன்று சிறார்கள் மட்டும் கோவை அவிநாசி வீதியிலுள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். 15 வயதுடைய சிறுவன் சோப்பு ஆயில் குடித்து தற்கொலைக்கு முயல, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இது இப்படியிருக்க, செவ்வாய்க்கிழமையன்று, எந்தவொரு தகவலையும் தராமல் மறைத்து வைத்து குற்றவாளிகளைக் காப்பாற்ற நினைக்கின்றது காவல்துறை என காவல்துறைக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அணி சேர, குற்றவாளிகளின் விவரத்தை வெளியிட்டது உடுமலைப்பேட்டை காவல்துறை துணைச்சரகம்.
பாலியல் மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக வளரிளம் பருவத்தினருக்கு தொடர்ந்து விழிப்புணர்வைத் தருகின்றது அரசு. ஆனால் அதனைச் செயல்படுத்தாமல் ஏட்டளவிலேயே வைத்திருக்கின்றனர் அதிகாரிகள். அவர்கள் மாறவேண்டும், சீரான இடைவெளியில் இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற பாலியல் சீரழிவுகளைக் கட்டுப்படுத்த இயலாது.
படம்: விவேக்