திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் நம்மைத் தொடர்புகொண்டார், "எனக்கு பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம். தற்போது அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயிலில் குடியிருக்கிறேன். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவரும் திருமுல்லைவாயில் சி.டி.எச் ரோட்டிலுள்ள ஜி.கே.ஷிட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் படித்துவருகிறார்கள்.
கொரோனா தொற்றுக் காலத்தில் வீட்டிலிருந்து படித்துவந்த எனது மகள் ஷித்திமா, இந்த வருடம்தான் பள்ளிக்குச் சென்றாள். ஒன்றாம் வகுப்பு கிளாஸ் ரூம் இரண்டாம் தளத்தில் இயங்கிவருகின்றது. சின்ன குழந்தைகள் தங்கள் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக்கை எடுத்துக் கொண்டு இரண்டு மாடிப்படிகள் ஏறி வகுப்பறைக்குச் செல்லவேண்டும். இயற்கை உபாதைகளைக் கழிக்க இரண்டு தளம் இறங்கி ஏறவேண்டும், இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுமே என்று பள்ளி துவங்கும்போதே நிர்வாகத்திடம் தெரிவித்தோம். அன்றுமுதல் பெற்றோர்களை பள்ளி வளாகத்திற்குள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.
இந்தநிலையில் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி 75502 06375 என்ற எண் ணில் இருந்து பேசிய யாழினி என்ற நபர், பள்ளி யிலிருந்து பேசுவ தாகவும், என் மகள் ஷித்திமா கழிவறைக்குச் சென்றபோது கால்வழுக்கி விழுந்து தொடை வீங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். என் மனைவியை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வதற்குள், என் மகளை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று விட்டதாகக் கூறினார்கள்.
அதே எண்ணுக்கு திரும்பவும் போன் போட்டுக் கேட்டதற்கு, அருகிலுள்ள மகாலட்சுமி மருத்துவமனை டாக்டர் சிதம்பரத்திடம் அழைத்துச் சென்றதாகக் கூறியதால் அங்கு விரைந் தோம். போனில் பேசிய பள்ளியின் பிரின்ஸிபல் புவனேஷ்வரியோ, "கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டு கூட்டிட்டுப் போங்க. ஷித்திமாவுக்கு சாதாரணமான மாவுக் கட்டு போட்டாலே சரியாகிடும்'’என்றார்.
எலும்புமுறிவு சாதாரணமா தெரியாததால, நாங்க எங்க டாக்டர் சொன்னபடி அரும்பாக்கம் பிரைம் இந்தியா ஆஸ்பிட்டல்ல பாப்பாவ கூட்டிட்டுப் போய்ச் சேர்த்தோம். அங்க ஆபரேஷன் பண்ணி பிளேட் வைச்சு எட்டு போல்ட் போட்டாங்க. தொடைல ஆபரேஷன் பண்ணதால பாப்பா படுத்த படுக்கையா இருக்கா. முழுமையா குணமாக ஆறு மாசம் ஆகுமாம். சம்பவம் தொடர்பா நான் திருமுல்லைவாயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவனிடம் புகார் கொடுத்தேன். சி.எஸ்.ஆர். மட்டும் கொடுத்திருக்காங்க. இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்ல.
எங்கள் வற்புறுத்தலுக்குப் பிறகு சம்பவம் நடந்த இடத்தைக் காட்டினார்கள். பாப்பா பாத்ரூமுக்கு செல்லும்போதே முதல் மாடி படிக்கட்டுப் பகுதியில விழுந்ததா சொன்னாங்க. குழந்தை விழுந்ததாக அவர்கள் கூறும் இடத்தில் வழுக்கிவிழுந்து, தொடை எலும்பு முறியுமா? என்ற கேள்வி எங்களுக்கு வந்தது.
அந்த இடத்தில் எந்த ஓர் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் கட்டட வேலைகள் நடந்துவருவதைப் பார்த்தேன். அந்த இடத்தில் கட்டட வேலைக்காக சாரம் கட்டி வைத்திருந்தனர். பாப்பா நினைவுதிரும்பியதும் அவள் மீது ஏதோ விழுந்ததாகத்தான் கூறினாள். இதைப் பற்றி தெரிந்துகொள்ளவே, போலீசாரை அழைத்துக்கொண்டு சி.சி.டி.வி. கேமரா பதிவில் உள்ளதைப் பார்க்கச்சென்றேன். அந்த பள்ளியில் மொத்தம் 103 சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளதாக கூறினார்கள். ஆனால் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த ஆறு கேமராவை மட்டும் எலி கடித்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் எங்களுக்கு சந்தேகம் அதிகமாகியுள்ளது,
பாப்பாகிட்ட கேட்டப்போ ஏதோ பின்னாடி விழுந்ததாகவும், யாரோ மூணு பேர் அவள தூக்கிட்டுப் போயி டேபிள் மேல வைச்ச தாகவும் சொல்றா. பள்ளி நிர்வாகம் எல்லாத்தையும் மறைக்குது. விதிகளை மீறி மாணவர்கள் நடமாடும் இடத்துல கட்டட வேலை செய்வதே சட்டப்படி தவறு. நடந்த விபத்தை மறைக்க பள்ளி நிர்வாகி வெங்கட்ராமன் எங்களிடம் மிரட்டல் தொனில பேசுறாரு. போலீஸ் இதுவரைக்கு எப்.ஐ. ஆர். போடல. பள்ளி நிர்வாக மோ சம்பவம் நடந்த பகுதி சி.சி.டி.வி. பதிவு காட்சிய தரல. அஜய்குமார்னு இந்து அமைப் பைச் சேர்ந்த ஒருத்தர் போன்ல பேசி புகார திரும்ப வாங்கும்படி மிரட்டுறாரு. சம்பவத்துக்கப்புறம் பள்ளி நிர்வாகம் ஒன்றாம் வகுப்பறையை கீழே கொண்டு வந்துட்டாங்க, அவசர அவ சரமா பாத்ரூம் கட்டிட்டுவராங்க. பெற்றோர்களை உள்ளே அனு மதிக்கிறாங்க. வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாவிட்டால் நீதிமன்றம் செல்வேன்''’என்றார் ஆவேசமாக.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விவரம்கேட்க நாம் நேரில் சென்றபோது யாரும் பேசவில்லை. பள்ளி வளாகத்தில் கட்டட வேலைகள் நடப்பதைப் படம் பிடித்தோம். பள்ளியைச் சேர்ந்த குண்டர்கள் அதைத் தடுத்ததுடன், கேமராவைப் பிடுங்க முயற்சிசெய்தார்கள். ஒருவழியாக சமாளித்து அங்கி ருந்து கிளம்பினோம். பள்ளி நிர்வாகத்திடம் செல்போனில் தொடர்புகொண்டபோது, பள்ளி நிர்வாகி ரமணி பதில் கூறாமல் தொடர்பைத் துண்டித்தார்.
இந்த வழக்கை விசாரிக்கும் ஆய்வாளர் விஜயராகவன் "வழக்கு விசாரணையில் உள்ளது. முடிந்த தும் வழக்கு பதிவு செய்யப்படும்'' என்று முடித்துக் கொண்டார்,
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோ ரிடம் பேசினோம். "இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. தவறுகள் இருப்பின், கண்டிப் பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.