(31) ஒரு சமூகத்தின் மீதான அவதூறு
விவசாயிகளுக்கு எதிராக கறுப்பு சட்டத்தைக் கொண்டு வந்துள்ள மோடி அரசுக்கு ஆதரவான தமிழகத்தின் அன்றைய ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற உணர்வு எல்லா இடங்களிலும் காணப் பட்டது. டெல்லியில் போராட்டக் களத்தில் இருந்தவர்கள் என்னோடு தொடர்புகொண்டு இதைப் பற்றி நிறையவே பேசினார்கள். சமூக ஊடகங்களில் இது பற்றிய கருத்துக்களை வலியுறுத்திக் கூடுதலாகவே அங்கிருந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் விவசாயிகள் போராட்டத்தின் எதிர்காலம் குறித்த கவலை எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.
போராட்டக் களத்திற்கு வெளியே இருப்பவர்கள் எல்லோரிடமும் ஒரு கேள்வி இருந்தது. நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் போனால் என்ன செய்வது என்ற சந்தேகம். போராட்டம் நின்று போகும் என்ற எண்ணம் எனக்கில்லை. அவர்களிடம் அமைந்த மன உறுதி என்ன என்பதை நான் நேரில் பார்த்தவன். அதில் எதிர்பாராமல் ஏற்படும் நெருக்கடிகள் எனக்குள் அச்சம் தருவதாக இருந்தது. அங்கு நடைபெறும் போராட்டங்களின் நிலவரம் குறித்து அறிந்து கொள்ள ஒருவரை நம்பி இருந்தேன். அவர் பெயர் திருமலைராமன்.
பல ஆண்டுகள் என்னோடு பழகிய பெயர் திருமலை. டெல்லியில் திருமலை என்றால் பலருக்கு புரிவதில்லை. கடவுச்சீட்டில் உள்ளபடி திருமலைராமன் என்றால்தான் புரிந்து கொள்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த இவர் இப்பொழுது டெல்லியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு போராட்டக் களத்தில் நிறைய தொடர்புகள் உண்டு. இவரும் இவரது தோழர் ஆப்தா கானும் இணைந்து இந்தியா முழுவதிலிருந்து இளைஞர்களைத் திரட்டி போராட்டக் களத்திற்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஆப்தா கான் இளைஞர் பெருமன்றத்தின் தேசியத் தலைவர்.
ஊடகங்கள் தொடர்ந்து ஒரு செய்தியை வெளியிட்டுக் கொண்டி ருந்தன. பஞ்சாப், மேற்கு உத்திரப்பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங் களில் இது விவசாய காலம். போராட்டக் களத்திலிருந்து விவசாயிகள் வெளியேறி விவசாயம் செய்ய சென்று கொண்டிருக்கிறார்கள் என்று. இதனால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடப் போகிறது என்பதைப் போல செய்திகள் வெளிவந்தன. இது உண்மையா என்று திருமலை ராமனிடம் செல்பேசியில் கேட்டேன். திருமலை மிகவும் வித்தியாசமானவர். அவர் உணர்ச்சிவசப்பட்டால் ஒலிபெருக்கி முன் நின்று கம்பீரமாக கோபக்கனல் பறக்க பேசுவதைப்போல் நம்மிடம் பேசத் தொடங்கிவிடுவார். நான் கேட்ட கேள்வி அவருக்கு கோபத்தை உருவாக்கி இருக்க வேண்டும். என் மீதல்ல. ஊடகங்களின் மீது.
உங்களுக்கு தெரியுமா? அவர்கள் கல் வைத்து நெடுங்சாலைகளில் வீடு கட்டத் தொடங்கி விட்டார்கள். கழிப்பறை, குளியல் அறைகள் கட்டப்படுகின்றன என்றார். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இது சில ஊடகங்களைப் பார்த்த சிரிப்பாகக் கூட இருக்கலாம். ஒன்றிய அரசு இவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்று நினைக்கிறது. இவர்கள் கான்கிரிட் தங்குமிடங் களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெளியுலகில் ஊடகங்கள் உருவாக்கும் கருத்து உருவங்களுக்கும் போராட்டக் களத்தில் உண்மையில் நிகழும் செயல்பாட்டிற்கும் எத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன.
உண்மையில் திருமலை என்னிடம் கூறிய கல் கட்டிடங்கள் குறித்து யோசித்துப் பார்த்தேன். போராட்டம் ஐந்து மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியில் எவ்வாறு குளிர் தாக்குப்பிடிக்க முடியாமல் இருந்ததோ அதைப் போல கோடைக்காலத்தில் வெயிலையும் தாக்குப் பிடிக்க முடியாது. இப்பொழுது இவர்கள் குடியிருக்கும் டிராக்டர்கள் வெயில் காலத்தில் மிகவும் கூடுதலான வெப்பத்தை உமிழத் தொடங்கிவிடும்.
வெப்பத்தை தாக்குப்பிடிப்பதற்குரிய வசிப்பிடங்கள் இவர்களுக்கு தேவை. இதை கல் வைத்து கட்டிக் கொண்டிருப்பதாக திருமலை என்னிடம் கூறினார். ஒரு நிமிடம் மெய் சிலிர்த்துப் போனேன். அவர்களது தைரியமும் போர்க்குண மும் என்னை மீண்டும் கவர்ந்து இழுத்துக் கொண்டே இருந்தது. பஞ்சாப் மக்களை இந்தியா வின் கொடை என்று சொல்லலாம். அவர்கள் மீது சுமத்தப்படும் பழிக்கு அளவே இல்லை.
சில ஆண்டுகள் தொடர்ந்து டெல்லியில் செயல்படுவதால் திருமலையிடம் சில அரிய தகவல்கள் இருந்தன. போராட்டத்தில் பஞ்சாப் மக்களின் பண்பாடும் போர்க்குணமும் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது. ஆனால் இந்தியாவின் திரைப்படங்களில் பஞ்சாபியர்களை நகைச் சுவைக்கு உரியவர்களாக காட்டுகிறார்கள். ஈடு இணையில்லாத இந்த வீரம் செறிந்த மக்கள் ஏன் கிண்டலுக்கு உரியவர்களாக காட்டப்பட வேண்டும் என்ற கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.
இதற்கு திருமலை வரலாற்றுப்பூர்வமாக அதன் பின்னணியை எனக்கு விளக்கத் தொடங்கினார். பிரிட்டிஷாரை எதிர்த்து நாடு தழுவிய சுதந்திரப் போராட்டம் என்பது கிட்டத் தட்ட 200 ஆண்டுகள் நடைபெற்றன. இதில் எல்லா மொழி பேசும் மக்களும் ஒவ்வொரு காலங்களில் பங்கேற்றுள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மன், மருது இருவர், புலித்தேவன் வேலுநாச்சியர் என்று பல தமிழர்கள் தொடக்க காலத்தில் பங்கெடுத்து போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். சுதந்திரப் போராட்டத்தின் இறுதி கட்டத்தில் கூடுதலாகப் பங்கெடுத்தவர் பஞ்சாப் மக்கள் தான்.
சர்தார்ஜி ஜோக் என்பதாக பஞ்சாப் மக்களை பற்றி உருவாக்கிய கிண்டல்கள். அவர்களது வீரத்தை கொச்சைப்படுத்துவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் கட்டியமைக்கப்பட்ட அவதூறுகள் என்று திருமலை கூறினார். இது முற்றிலும் உண்மையானதுதான். வீரம் செறிந்த கீழைத்தேச மக்களின் மீது இவ்வாறான பல்வேறு கட்டுக் கதைகளை உருவாக்க ஓரியண்டல் பார்வை என்ற தனி ஆய்வையே ஆங்கிலேயர் உருவாக்கி வைத்திருந்தனர். இதை இன்றைய காலனித்துவ ஆய்வுமுறைகள் முழுமையாக அம்பலப்படுத்தி வருகின்றன.
போராட்டக் களத்தில் இளவயதில் போர்க் குணம் கொண்ட இளம்பெண்ணை சந்தித்தேன் அவரை பற்றிய குறிப்புகளை வெளியிடுவது அவசியமாக எனக்குத் தோன்றுகிறது. அவர் பெயர் அபிக்சா. டெல்லி பல்கலைக்கழக மாணவி. அவரை காஜ்ஜிப்பூர் போராட்டக் களத்தில்தான் சந்தித்தேன். பார்வைக்கு உயர்நிலைப்பள்ளி மாணவியைப்போல காணப்பட்ட அவரைச் சுற்றி ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது. அவருக்கு பக்கத்தில் மற்றொரு பெண் அமர்ந்திருந்தார். அவரும் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார். அவர் பெயரை கேட்டவுடன் நான் லேசாக சிரித்து கொண்டேன். அந்த மாணவி ஏன் என்று கேட்டார். குஷ்பு என்ற உங்கள் பெயரில் சினிமா சார்ந்த அரசியல் தலைவர் தமிழகத்தில் இருக்கிறார் என்றேன். அவர் இப்பொழுது என்ன செய்கிறார் என்றார். ஒவ்வொரு கட்சியாக சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார் என்றேன். அவரும் என்னுடன் சேர்ந்து சிரிக்கத் தொடங்கிவிட்டார்.
அபிக்சாவும் மற்ற மாணவ நண்பர்களும் உருவாக்கியுள்ள செயல்பாட்டு திட்டங்கள் வேறுபட்டதாக இருந்தது. இவர் இங்கு போராட்டத்தில் பங்கேற்க வந்தபோது இவருக்கு இங்கு தங்குவதற்கு இடம் இல்லை. இவரிடம் அமைந்த ஆர்வத்தை சுற்றியிருந்த விவசாயிகள் பார்த்துவிட்டு இவருக்கு தனியாக ஒரு டெண்ட் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அந்த டெண்ட் பலரையும் கவர்ந்து இழுக்கும் மையமாக மாறிக் கொண்டிருக்கிறது.
இரண்டு நாட்கள் நான் அவர்களுடன் தங்கியிருந்து அவர்களின் செயல்பாடுகளை கவனித்தேன். ஒரு நாள் காலை 10 மணி இருக்கலாம். அப்பொழுது அங்கு சில சிறுவர்களும் சிறுமிகளும் வந்திருந்தார்கள். அவர்கள் ஏழைக் குழந்தைகள். தீதி எங்கே என்றார்கள். தீதி என்றால் இந்தியில் அக்கா என்று பொருள். அபிக்சாவா என்றேன். ஆம் என்றார்கள். ஏன் பார்க்க வேண்டும் என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதிலி -ருந்து, இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன்.
டெண்டு கூடாரத்தின் ஒரு பகுதி முழுவதும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் பல அரிய புத்தகங்கள் இருப்பதை பார்த்தேன். இந்த நூல்களை எல்லாம் பலரிடம் வீடுவீடாகச் சென்று திரட்டி வந்திருக்கிறார். இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் புத்கங்களை தந்திருக்கிறார்கள். சமூக ஊடகங்களை வலிமையுடன் எவ்வாறு செயல் படுத்துவது என்று இவராலும் இவரது தோழர் களாலும் வழிகாட்டப்படுகிறது.
அங்கு வைத்திருந்த படங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்காக ஒரு செய்தி காத்திருந்தது.
(புரட்சிப் பயணம் தொடரும்)