(18) அறிவோர் அவை

மிழர்களின் தொன்மையான திணை சமூகம், அண்மைக் காலத்தில் என்னை கூடுதலாக வாசிக்க வைத்துவிட்டது. வெகு மக்களால் கட்டுப்படுத்தப்படும் அரச அதிகாரம் என்பது, இன்றைய ஜனநாயகத்தில் முக்கியமாக உணரப்படுகிறது. இதைக் குடிமை சமூகம் என்று கூறலாம். குடிமக்க ளின் அதிகாரத்தில் செயல்படுவது குடிமை சமூகம். இந்த குடிமை சமூகத்திற்கும் திணை சமூகத்திற்கும் ஓர் ஆழமான தொடர்பு இருப்பதாக உணருகிறேன். கிரேக்க, ரோமபுரி சமூகங்களின் ஆரம்ப கால அடித்தள மக்கள், ஜனநாயகத்தை ஆய்வு செய்ததைப்போல தமிழில் செய்யப்படவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.

m

திணை சமூகத்தை, ஆதிமனிதப் பண்பாட்டிற்கு தமிழர் வழங்கிய கொடை என்று கூறமுடியும். தொல்காப்பியத்திலும் அதற்குப் பிந்தைய சங்க இலக்கியங்களிலும் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதித்தமிழர் இனக்குழு வாழ்வில் அறிவுப்பூர்வமான விவாதங் களின் மூலம், மனித இடைவெளிகள் குறைத்து, முரண்பாடுகளை களைந்து, மனித ஒற்றுமை உருவாக்க ஆன்றோர் அவையும், வேறு சில அவைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அவைகளை ஜனநாயகத்தின் முக்கியமான பகுதியாக நான் கருதுகிறேன்.

Advertisment

டெல்லியைச் சுற்றிய போராட்டக் களத்தில் இதே சாயல்கொண்ட ஒரு அவையை நான் பார்த்தேன். இதைப் பார்த்தவுடன் என்னிடம் ஒரு வித்தியாசமான உணர்வு எழத்தொடங்கியது. அது ஒரு தொன்மத் தொடர்பு. ஆதி சமூகத்திடமிருந்த ஜனநாயகப் பண்புகள் என்னை கிளர்ச்சியடைய வைத்தன. அர்ப்பணிப்புடன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் அந்த பள்ளி ஒன்றில்தான் அந்தச் சொல் எனக்கு அறிமுகமானது. அந்த டெண்டில் அந்தச் சொல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டி ரந்தது. SAMJHI SATTH என்று ஆங்கில வாசகங்கள் இருந்தன. இந்த சொல் பஞ்சாப் சொல். இதன் அர்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.

பேராசிரியர் ந.முத்துமோகன், பல ஆண்டுகள் அறிந்த எனது தோழர். தத்துவத்தில் ஆராய்ச்சிப் பட்டத்தை ரஷியாவில் நிறைவு செய்தவர். எனக்கு தத்துவம் குறித்த சந்தேகங்கள் ஏற்படும்போது, அவரிடம் உரையாடி தீர்த்துக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன். பஞ்சாப் வாழ்க்கை முறை பற்றியும், சீக்கிய மனிதநேயம் குறித்தும் ஆழமாகக் கற்றறிந்தவர். அதற்கு உரிய காரணங்களும் இருக்கின்றன.

மதுரை குருநானக் ஆய்வின் தலைமைப் பொறுப்பேற்று 25 ஆண்டுகள் பணியாற்றியவர், இதன் பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் உயராய்வு தத்து வப் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றியவர். இதுபற்றி நிறைய நூல்களையும் எழுதியுள்ளார். அவரிடம் இது குறித்து பேசினேன். SAMJHI SATTH என்னும் சொல்லுக்கான விளக்கத்தை குறுஞ்செய்தியில் omman place in a village where people use to sit together என்று அனுப்பியிருந்தார். மேலும் விளக்கத்தை செல்பேசியில் அவரிடம் கேட்டபோது, அடித்தள மக்களின் ஜனநாயகச் செயல்பாடு ஒன்று எனக்கு கிடைத்தது.

Advertisment

m

திணை சமூகத்தில் செயல்பட்ட ஆன்றோர் அவை, மற்ற அவைகளைப் போலவே பஞ்சாபிய சமூகத்திலும் மக்கள் சந்தித்து கருத்து ஒற்றுமையை உருவாக்கிக்கொள் ளும் அவைகள் செயல்பட்டு வருகின்றன. இவை பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் வலுப்பெற்றுள்ளன. இன்றுவரை, அது தனது வலுவை இழந்துவிடாமல் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பேராசிரியர் முத்துமோகன், "ஐந்து என்ற எண் பஞ்சாப் மக்களிடம் புனித எண்ணாகக் கருதப்படுகிறது' என்றார். அந்த எண்ணின் ஜனநாயகச் செயல்பாட்டை அவர் விவரித்த போது, நான் வியந்துபோனேன். ஐவர் கூடி ஜனநாயக அடிப்படையில் கருத்தொற்றுமையை உருவாக்கி, அதைச் சமூகத்தின் வலிமைமிக்க செயலாக உருவாக்கி விடுகிறார்கள் என்றார். தமிழ் நாட்டின் எண்பேராயம், ஐம்பெருங்குழு ஆகியவற்றை ஞாபகப்படுத்திக் கொண்டேன்.

என்னையறியாமல் இளமைக்கால வாழ்க்கைக்கு நான் இழுத்துச் செல்லப்படுகிறேன். விரிந்த ஆலமரம். எல்லா நேரத்திலும் பறவைகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டே இருக்கும். செருப்பணியாத கால்களில் ஆலமரத்தின் பழங்கள் மிதிபட்டு காலில் ஒட்டிக்கொள் ளும். அது ஒரு தனித்துவமான காட்சி. அதன் அருகில்தான் சாவடி அமைந்திருக்கும். அங்கு கிராமக் கூட்டங்கள் நடைபெறும்.

கிராமக் கூட்டங்களின்மீது, அந்தக் காலத்தில் எனக்குக் கடுமையான விமர்சனம் இருந்தது. சமூக விடுதலைக்கு அவை பெரும்தடை என்ற கருத்து வலுவாக இருந்தது. இதற்கு மாற்றாக கிராமப்புற பஞ்சாயத்து தேர்தல், வாக்குரிமை ஜனநாயகம் இவற்றின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் இன்று கிராமப் பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளர்கள் சட்டத்திற்கு புறம்பாகக் கொட்டப்படும் பணம் என்னை அருவருப்படைய வைத்துவிட்டது. முதலில் பணத்தை முதலீடுசெய்து, பின்னர் கொள்ளைலாபம் பெறும் தொழிலாக இதனை மாற்றிவிட்டார்கள். இது என்ன வாக்குரிமை ஜனநாயகம்?

பிற்போக்குத்தனங்களையும் பழமை யையும் நீக்கி, கீழ்மை நிறைந்த சாதிய மனோபாவத்தை அகற்றி, மண்சார்ந்த ஜன நாயகத்தை நாம் ஆய்வுசெய்ய வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினேன். டெல்லி போராட்டக் களம் இது குறித்து என்னை யோசிக்க வைத்துவிட்டது.

SAMJHI SATTH சாம்ஜி சத் அவைக்கு அழைத்துச் செல்லப்படுகிறேன். அழைத்துச் சென்றவர்கள், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள். சாம்ஜி சத் சபையைப் பற்றி அவர்கள் விளக்கிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது கிராமமக்கள் சபை போன்றதாக நான் புரிந்து கொள்கிறேன். அதன் நடைமுறைகள் என்ன? பஞ்சாப் மக்களின் ஆதி ஐனநாயகம் எவ்வாறு இருந்தது, போன்ற பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள ஆவல் கொண்டிருக்கிறேன்.

சாம்ஜி சத் ஒரு பள்ளமான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. சிங்கு போராட்டக் களம், ஜம்மு காஷ்மீர்- டெல்லி நெடுஞ்சாலை என்பதால், அதை ஒட்டிய பள்ளத்தில் இந்த டெண்டு அமைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. மேட்டிலிருந்து இந்த டெண்டை நான் பார்க்கிறேன். மேட்டி லிருந்த என்னை மிகுந்த எச்சரிக்கையோடு அழைத்துச் சென்றார்கள். இது மாலை 6 மணி என்றாலும் இருள்கவியத் தொடங்கிவிட்டது.

டெண்டு மிகுந்த ஒழுங்குடன் காணப்பட் டது. காலணிகளை வைப்பதற்கு ஒரு தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நெல் வைக்கோலா? கோதுமை வைக்கோலா என்று தெரியவில்லை. இதை அடியில் பரப்பி, குளிர் உடலை பாதிக்காத வகையில் விரிப்புகளை அதன்மேல் விரித்திருந்தார் கள். நூறுபேர் தாராளமாக அமர்ந்துகொள்ளும் விதத்தில் அந்தக் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்தனர். குழந்தைகள் வேடிக்கை பார்ப்பதற்கு பல படங்கள் வரையப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இளைஞர்கள், முதியவர் கள் சம எண்ணிக்கையில் அமர்ந்திருப்பதாக எனக் குத் தோன்றியது. அவர்களின் கல்வித் தகுதி பற்றி அறிந்துகொள்ள என்னுடன் வந்த நண்பர்களிடம் கேட்டேன். ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், உயர் அதிகாரிகள் கூட்டத்தில் இருப்பதாகச் சொன்னார். முன்னாள் ராணுவத்தினர் சிலர் இருப்பதாகவும் கூறினார். மாணவர்களும், படித்த பட்டதாரிகளும் கணிச மான எண்ணிக்கையில் இருப்ப தாக உணர்ந்து கொண்டேன். இந்த கூட்டத்தின் மற்றொரு முக்கியமான சிறப்பு என்ன வெனில், பெண்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருந்தனர். போராட்டக் களத்தில் எல்லா இடங்களிலும் பெண்களை எங்களால் பார்க்க முடிந்தது.

அன்றைய கூட்டத்திற்கு 60 பேர் வந்திருந் தார்கள். கூட்டத்தின் நடுவில் நிகழ்ச்சிகளை நெறிப் படுத்துவதற்கு என்று ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் கையில் ஒரு ஒலிபெருக்கி இருந்தது. மற்றவர்கள் பேசுவதற்கு மற்றும் ஒரு பெருக்கி வைத்திருந்தார்கள். கூட்டத்தின் வழக்கப்படி எல்லோரும் பேசவேண்டும். கூட்டம் எதிலும் அவசரம் காட்டவில்லை. ஒவ்வொருவர் பேசுவதை யும் எல்லோரும் கவனமாகப் பார்க்கிறார்கள். தேவை கருதி கூட்டத்தில் உள்ளவர்கள் வெளியே செல்கிறார்கள். இவ்வாறு செல்வதற்கு அங்கு எந்தத் தடையும் இல்லை. எல்லோரும் பஞ்சாப் மொழியில் பேசினார்கள். நல்ல கருத்துகளுக்கு கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளும் முறையும் இங்கு இருக்கிறது.

என்முறை வந்தது. நானும் பேசினேன். நான் பேசியதை பஞ்சாப் மொழியில் ஒருவர் மொழி பெயர்த்துக் கூறிக் கொண்டிருந்தார். என் உரையில் ""பதட்டம் மிகுந்த எல்லைப்புற மாநிலத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி னேன். கூட்டத்தின் ஒருங் கிணைப்பாளர் அதற்கு ஏதோ பதிலளித்தார். அதற்கு ஏதோ மாற்றுக் கருத்து சொல்கிறார் என்பதை மட்டும் நான் புரிந்து கொண்டேன். மொழிபெயர்த்துச் சொல்லுமாறு நண்பரிடம் கேட்டேன். அவர் கூறியவை என்னை, திடுக்கிட வைத்தன. இதற்குள் இவ்வளவு அரசியலா என்று வியந்து போனேன்.

(புரட்சிப் பயணம் தொடரும்)