- சி.மகேந்திரன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிட் கட்சி
அந்தத் தருணத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சி யோடு இருந்தேன். மன உணர்வுகளைச் சம்பந்தப்பட்ட மனிதர்களே புரிந்துகொள்ள முடிவதில்லை. இனம்புரியா இத்தனை மகிழ்ச்சி எனக்கு. ஏன்? அந்த மகிழ்ச்சிக்கான காரணங்களை நோக்கி என் சிந்தனை அடியெடுத்து வைக்கத் தொடங்கிவிட்டது.
தையல் பிரிந்து கிழிந்திருந்த எனது ‘ஓவர் கோட்’ பயனற்றது என்று என் ஆழ்மனம் முடிவுக்கு வந்திருக்கிறது. மேல்மனதிற்கு இது தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் மேல்மன ஆழ்நிலை மனம் குறித்த சிந்தனைகள் எனக்கு அடிக்கடி வந்துவிடுகிறது. பயனற்ற ‘ஓவர் கோட்டை’ பயன்படுத்தக்கூடியதாக மாற்றிக் கொடுத்துவிட்டார் அந்த தையல் சேவையாளர். ஆழ்மனதின் இந்த நிறைவுதான் மகிழ்ச்சியாக என்னிடம் வெளிப்படத் தொடங்கி யிருந்தது. இந்த நேரத்தில் சென்னையைத் திரும்பிப் பார்க்கிறேன்.
ஒரு துணியை சலவை செய்து பெறுவதற்கு, பயன்படுத்தக் கூடிய ஆடையில் ஒரு சிறு கிழிசலை சரி செய்வதற்கு அலைந்து சலித்துப்போன ஞாபகங்கள் வருகின்றன. ஓவர்கோட்டையும் கையிலெடுத்துப் பார்க்கிறேன். அரைமணி நேரத்தில் அது புத்தம் புதியதாக கண்ணுக்குத் தெரிகிறது. வியாபாரத் திற்கும் சேவைக்கு இடையில் அமைந்த வேறுபாட்டை, அந்த தையல் கலைஞர் எனக்கு உணர்த்துகிறார். அரசியல், சமூக உறவு ஆகியவை, வியாபாரம் சம்மந்தப்படாமல், சேவை சம்பந்தப்பட்டதாக இருந்தால், எத்தனை பயனுள்ளதாக இருக்கும் என்று மனம் ஆதங்கப்பட்டுக் கொள்கிறது.
தையல் கலைஞரை அணுகி அவரிடம் விபரங்களைக் கேட்கிறேன். அவர் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் தன் பணியைச் செய்துகொண்டிருக்கிறார். இந்த இலவச தையல் சேவைக்கு வேறு யாராவது பொருளாதார உதவி செய்கிறார்களா என்று கேட்டேன். இப்பொழுது அவரது முகம் மாறுவது எனக்குச் சிறிது சங்கடமாக இருக்கிறது. அவர் வாய்திறந்து பேசத் தொடங்குகிறார். ‘"நான் இரவு பகல் பாராமல் உழைக்கக் கூடியவன். உழைத்து வங்கியில் சேமித்த பணத்தில் ஒரு பகுதியை சேவைக்காக செலவு செய்கிறேன்' என்றார். இது மட்டுமல்லாது, இவர் கடைசியில் கூறிய வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தது. "பிறரிடம் உதவி பெற்று இந்த சேவையைச் செய்தால், அது சேவைக்கான மதிப்பைக் குறைத்துவிடும்' என்றார். அவரது முகத்தில் ஒருவிதமான நிம்மதி தெரிந்தது.
நான் அவரது பெயரைக் கேட்டேன். அவர் பிடிவாதமாக தனது பெயரைக் கூற மறுத்து விட்டார். "சேவை செய்வது பிறருக்கு தெரிவிப் பதற்கு அல்ல' என்றார். அவர், அடிப்படையில் நான் பத்திரிகையாளர் என்பதாகப் புரிந்து வைத்திருந்தார். ஆனால் அவர் அறியாத நேரத்தில் எப்படியோ போட்டோ எடுத்து விட்டேன். அவரைக் கேட்காமல் போட்டோ எடுத்தது சரியா என்று மனம் என்னைக் கேட்கத் தொடங்கிவிட் டது. பின்னர் இந்த உண்மைகளை எல்லாம் உலகுக்குச் சொல்வது நமது கடமை என்பதாகப் புரிந்துகொண்டேன். அவர் விருப்பப்படி அவர் பெயரை என்னால் இங்கு குறிப்பிட முடியா விட்டாலும், அவரது சேவை அர்ப்பணிப்பையும் இது போன்ற அர்ப்பணிப்புகளால் எவ்வாறு போராட்டம் உயிர்பெற்று நிற்கிறது என்பதையும் இங்கு பதிவு செய்வதை என் கடமையாகக் கருதுகிறேன். அந்தத் தையல் கலைஞரின் மனவெளிப் பிரதேசத்தில் நானும் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்துகொண்டிருக்கிறேன்.
அந்தச் சேவையை இவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள் என்ற எண்ணம் என்னை வதைக்கத் தொடங்கியது. இதுபற்றிய தகவல்களை திரட்டத் தொடங்கினேன். லங்கர் என்னும் சேவை குறித்த வேறொரு பார்வையை எனக்கு அது வழங்கியது. மீண்டும் சீக்கியர்களின் வாழ்க்கை முறையும் பஞ்சாபியர்களின் வாழ்க்கைமுறையும் என்னை ஈர்க்கத் தொடங்கியது.
இழிதொழில்களில் மேலும் இழிவாக இந்துத்துவத்தால் வரையறை செய்யப்பட்ட தொழில்தான் செருப்புத் தைக்கும் தொழில். இந்தத் தொழிலை, வேண்டும் என்றே இழிநிலை கொண்ட தொழிலாக இந்துத்துவ மத சட்டங்களால் உத்திரவிடப்பட்டிருந்தது. இதன்மூலம் இவர்கள் பரம்பரை பரம்பரையாக தீண்டத்தகாதவர்களாக்கப் பட்டிருந்தார்கள். ஆதிக்க சக்திகளால் இழிவு என்று பழி சுமத்தப்பட்ட இந்தத் தொழிலை, சமூகத்திற்குச் செய்யும் சேவையாக சிலர் கருதி அதில் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்களை புரட்சிக்காரர்களாகத்தான் கருதவேண்டும். இந்த புரட்சிகர மனப்பான்மை பஞ்சாப் மக்களுக்கு எவ்வாறு வந்தது என்பது ஒரு முக்கியமான கேள்விதான். இது சீக்கிய மதத்தின் மனிநேய நற்பண்புகளிலிருந்து வந்ததாகத் தெரிகிறது.
பிறர் நலம் பேணும் சீக்கிய மதத்தில் உணவு அளித்தல், உடை தூய்மை செய்து தருதல் என்பதைப் போல காலணிகளை தூய்மைசெய்து தருவதையும் ஒரு சேவையாகக் கருதுகிறார்கள். குளிர் பிரதேசத்தில் காலணிகள் எத்தகைய முக்கியமானது என்பதை அங்கிருப்பவர்களால்தான் உணர்ந்துகொள்ள முடியும். அதையும் ஒரு சேவையாக வளர்த்தெடுத்துள்ளது சீக்கிய மதம். இதற்கு சீக்கிய மதத்தின் குருத்துவாராக்களை ஆதாரமாகச் சொல்லமுடியும். குருத்துவாராக்களில் காலணிகளை தூய்மை செய்துதருதல் ஒரு சேவையாக கருதப்படுகிறது. பெரும் செல்வந்தர்கள் கூட குருத்துவாராக்களில் காலணிகளைப் பெற்று சுத்தம்செய்து தரும் சேவையையும் நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.
போராட்டக் களத்தில் காலணியை தூய்மை செய்து செப்பனிட்டுத் தரும் பணியில் ஈடுபட்ட புரட்சிகர சேவையாளர்கள் இருந்தார்கள். கல்வி கற்ற இளைஞர்கள் இந்த சேவையில் ஈடுபட்டிருந்தார்கள். பெரியவர்கள் சிலரும் அந்தப் பணியில் பங்கேற்றிருந் தார்கள். மற்றைய சேவை நிறுவனங்களைப் போலவே இதுவும் டெண்டு துணிகளால் அமைக்கப்பட்டிருந்தது. காலணிகளை பழுது பார்த்து திருத்தம் செய்யும் எல்லா சாதனங்களும் அங்கிருந்தன.
நான் அவர்களின் பணிகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். சீக்கியர்களுக்குரிய தலைப்பாகையுடன் அந்த இளைஞர் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்கிறேன். முதலில் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்பதை ஆங்கிலத்தில் சொல்லுகிறேன். அவரால் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளவும் முடிகிறது. ஓரளவிற்கு பேசவும் முடிகிறது. பட்டம் பெற்றவர் என்று ஊகிக்கிறேன். என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்க எனக்கு விருப்பம் இல்லை. அவர் செய்யும் வேலையை கவனித்துக்கொண்டிருக்கிறேன்.
அவர் கையில் ஒரு ‘பூட்ஸ்‘ இருந்தது. அடிப் பகுதியில் பாதி தொங்கிக்கொண்டிருந்தது. கவனமாக ஆராய்ந்துப் பார்த்தார். பார்வையிலேயே அதன் குறை பாடு என்னவென்று அவருக்கு புரிந்திருக்க வேண்டும். அவரது கூர்மையான கண்களையே பார்த்துகொண்டே இருக்கிறேன். அதிலிருந்த அர்ப்பணிப்பு என்னை மிகவும் யோசிக்க வைத்தது. எந்தத் தொழிலும் பணம் லாபம் சார்ந்த தாக இருந்தால் அதன் தன்மை வேறு. மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பின் அதன் தன்மை வேறு. பணம் சாராத அர்ப்பணிப்புமிக்க தொழில் சேவையை, மேன்மையிலும் மேன்மையானது என்றுதான் குறிப்பிட வேண்டும். அந்தக் காலணியைப் பழுது பார்ப்பதில் அவருக்கிருந்த அர்ப்பணிப்பை கவனித்துக்கொண்டிருந்தேன்.
முதலில் பிரிந்து தொங்கிக் கொண்டிருந்த பூட்ஸ் அடிப்பகுதியை தனியாகப் பிரித்தெடுத்தார். அதில் படிந்திருந்த அழுக்குகளையும், தேவையற்ற வற்றையும் துடைத்து சுத்தம் செய்து, பசை தடவி கவனமாக ஒட்டி, சிறிது நேரம் உலர வைத்தார். அந்த இளைஞனும் அவரை சுற்றியிருந்தவையும் சேவையில் ஒன்றி யிருந்தன. எனது உடல் உணர்ச்சிப் பெருக்கில் இருந்ததால் குளிர் கொஞ்சம் உடலுக்கு இதமாக இருந்தது.
செருப்பை செப்பம் செய்தல் தீண்டத்தகாத இழிசனங்கள் செய்யும் அடிமைத் தொழில் என்ற கற்பிதம் சுக்கு நூறாக உடைபட்டது. இது அடிமைத் தொழில் அல்ல, மகத்துவம் பொருந்திய சேவை என்பதை சமூகத்தின் கன்னத்தில் அறைந்து சொன்னதைப் போல, இருந்தது. போராட்டக் களத்தில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணிப்புடன் காலணிகளைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கும் அந்த இளைஞனுக்கு வீரவணக்கம் சொல்லத் தோன்றியது.
இந்த தருணத்தில்தான் எனக்குள் புதிய மாற்றம் நிகழ்ந்தது. நான் வியப்படைந்தேன். சென்னையிலிருந்து நான் புறப்பட்டபோது எனக்குள் ஒரு பயம் இருந்து கொண்டேயிருந்தது. அதைப்பற்றி நான் பெரிதும் கவலைகொண்டிருந்தேன். அந்தப் பயம் என்னிடம் நட்பு பாராட்டி என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டது, எனக்கே தெரியாமல் போனது.
(புரட்சிப் பயணம் தொடரும்)