"கஞ்சா வேட்டை 3.0' எனும் பெயரிட்டு தமிழ்நாடு முழு வதும் நடைபெறும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே தீபாவளியை யொட்டி நடைபெற்ற கஞ்சாபோதை அட்ராசிட்டி நிகழ்வுகள் மக்களிடையே அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளியன்று சென்னை அண்ணாநகரில் அதிகாலையில் கார் ஒன்றிலமர்ந்து மூன்று பேர் கஞ்சா அடித்துள்ளனர். அதில் போதை தலைக் கேறியதால் முகமது ஆசிப் எனும் இளைஞர் திடீரென காரை தறிகெட்டு ஓட்டத் தொடங்கி சாலையில் நின்றுகொண்டிருந்தவர்களின் மீது மோத, அவர்கள் தூக்கிவீசப்பட்டனர். இதில் காவலாளி, விடுதியில் தங்கிருந்த கல்லூரி மாணவர், டெலிவரி பாய், ஒரு பெண் உட்பட 7 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை வழங்கினர். அதில் சிகிச்சை பலனின்றி மாணவர் விஜய் யாதவ்வும் காவலாளி நாகசுந்தரமும் உயிரிழந்தனர்.
வியாசர்பாடி பகுதியில் தீபாவளியன்று இரவு பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் கஞ்சா மற்றும் மதுபோதையில் அங்கிருந்த பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சாலையில் சென்றவர்களை கத்தி மற்றும் பீர் பாட்டில்களால் தாக்கியுள்ளனர். இதில் பெண் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து வருகிறார்கள்.
தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கஞ்சா அடிக்க காசில்லை என்றால் இரவு நேரங்களில் டூவீலர்களில் பெட்ரோல் திருடுவார்கள். அதனை இந்தப் பகுதி பெண்கள் தட்டிக்கேட்பதற்கு எதிர்வினையாக, இவர்கள் தீபாவளி அன்று கஞ்சா அடித்துவிட்டு இப்பகுதிப் பெண்களைப் பற்றி மோசமாகப் பேசியதுடன், தாக்குதலிலும் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் "எங்களுக்கு இங்கு பாதுகாப்பில்லை எனவும், இங்கே ஒரு காவல் பூத் அமைக்கவும் கண்காணிப்பு கேமரா அமைத்துத் தரும்படியும்' கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகே தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
அதேபோல, தீபாவளிக்கு முன்பு திருவொற்றியூர் தி.மு.க. பிரமுகர் காமராஜ் கொலையையும் கஞ்சா ஆசாமிகளே செய்துள்ளனர். திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் அலுவலகம் அமைத்து மாநகராட்சி மற்றும் அரசு சம்பந்தப்பட்ட ஒப்பந்தப் பணிகளை எடுத்து காமராஜ் செய்துவந்த நிலையில், எண்ணூரில் அரசு நூலகம் ஒன்றையும் கட்டிவந்தார். அந்த நூலகம் கட்டுவதற்காக சிறையிலிருந்தபடியே எண்ணூர் தனசேகரன் மாமூல் கேட்கவே, காமராஜ் தர மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தனசேகரன் சிறையிலிருந்தபடி கஞ்சா ஆசாமிகளை வைத்து கொலை செய்துள்ளார்.
சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பி பிளாக் பகுதியில் நவம்பர் 13-அன்று இரவு, வழக்கம்போல ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களை அவரவர் வீட்டில் விட்டுவிட்டு அனைவரும் உறங்கச் சென்றனர். அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டு சிலர் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் முழு கஞ்சா போதையில் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 12 ஆட்டோ, ஒரு மினி வேன் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
உடனடியாக அப்பகுதி மக்கள் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர் கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து நள்ளிரவில் மது மற்றும் கஞ்சா போதையில் வாகனங்களை அடித்து உடைத்த 3 நபர்களை போலீசார் கைது செய்தனர். மூவரில் ஒருவன் 9ஆம் வகுப்பு மாணவன் என்பதால் அவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். விஜய், லாரன்ஸ் ஆகிய இரு இளைஞர்களை போலீசார் சுற்றி வளைத்தபோது, பாலத்திலிருந்து தவறி விழுந்ததில் இருவருக்கும் வலது கை மற்றும் இடது காலில் முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை முழுவதும் கஞ்சாவால் இளைஞர்களின் வாழ்க்கை திசை திரும்புவதோடு போதைக்கு அடிமை யானவர்களால் மற்றவர்கள் உயிர், உடைமைகளைப் பறிகொடுக்க வேண்டியுள்ளது. பெரிய ரவுடிகள் இதுபோன்ற போதைக்கு அடிமையான இளைஞர்களை வைத்து, சிறையில் இருந்தபடியே அவர்களின் காரியங்களை சாதித்துக்கொண்டு அவர்களை அடுத்தகட்ட ரவுடிகளாக உருவாக்கத் தொடங்குகின்றனர்.
முதல்வர் உத்தரவுப்படி கஞ்சாவோடு சேர்த்து, கஞ்சாவுக்கு அடிமையாகி சச்சரவில் ஈடுபடும் ரவுடிகளின் மீது கெடுபிடியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, மக்களிடையே நிலவும் அச்சத்தை மாற்ற காவல்துறை முயற்சி மேற்கொள்ள வேண்டும்.