புதுக்கோட்டை மாவட்டம் அண்டக் குளம் அருகே கிள்ளனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில், கடந்த 14-ஆம் தேதி சாலையோரம் உள்ள கோயில்களில் இருந்த பாத்திரங்கள் உள்பட பல பொருட்களையும் ஒரு கும்பல் திருடிக் கொண்டு அவர்கள் கொண்டுவந்த ஆட்டோ வில் தப்பிச்செல்ல முயன்றனர். இந்தத் தகவலறிந்து 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தப்பிச்செல்லும் கும்பலைப் பிடிக்க மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் சென்றனர்.

ff

ஏராளமான இளைஞர்கள் தங்களை விரட்டிவருவதைப் பார்த்த கும்பல், இளைஞர்களிட மிருந்து தப்பிக்க தாங்கள் திருடிய கோயில் பொருட்களை சாலை ஓரங்களில் வீசிக்கொண்டே சென்றனர். பொருட்கள் கிடைத்துவிட்டால் தங்க ளைப் பின்தொடரமாட்டார்கள் என நினைத்தனர். ஆனால் தொடர்ந்து விரட்டிய இளைஞர்கள் புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் ஆட்டோவை மடக்கி நிறுத்திவிட்டனர். நிறுத்தப்பட்ட ஆட்டோவை ஆவேசத்தோடு பலர் தாக்க, அருகில் கிடந்த கட்டைகளைக் கொண்டும் தாக்கி ஆட்டோவை உடைத்தனர்.

Advertisment

அந்த ஆட்டோவில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த சக்திநாராயணசாமி, அவரது மனைவி லில்லி புஷ்பா, மகன்கள் விக்னேஷ்வரசாமி, சுபமெய்யசாமி, மகள்களான சிறுமிகள் ஆதிலெட்சுமி, கற்பகாம்பிகா ஆகிய 6 பேர் இருந்துள்ளனர். ஆட்டோவில் கோயிலில் திருடிச் சென்ற கொஞ்சம் பொருட்களும் இருந்துள்ளது. ஆட்டோவில் தப்பிய கும்பலைத் தாக்கிய சம்பவத்தில், சிறுமி ஆதிலட்சுமியை தவிர மற்றவர் கள் காயமடைந்துள்ளனர். இதில் சிறுமி கற்பகாம்பிகா பலத்த காயமடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சொல்லியும் சிலர் தாக்குதலை நிறுத்தவில்லை. கட்டை களைக் கொண்டு தாக்கியுள்ளனர். போலீசாருடன், அந்தப் பகுதியை சேர்ந்த சிலரும் சேர்ந்து, தாக்கிய வர்களை அப்புறப்படுத்தி காயமடைந்த 6 பேரை யும் மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

சிறுமி கற்பகாம்பிகா தலையில் பலத்த ரத்தக் காயத்துடன் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், 16-ஆம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், பெற்றோர் முன்னி லையில் சிறுமி கற்பகாம்பிகா உடல் மின்மயானத் தில் தகனம் செய்யப்பட்டது. கையோடு, கோயில் பொருட்களைத் திருடிய வழக்கில் சக்தி நாராயணசாமி, லில்லி புஷ்பா, சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர் போலீசார்.

Advertisment

சிறுவன் மற்றும் சிறுமியை குழந்தைகள் நல அலகு, சைல்ட் லைன் குழுவினர் மீட்டு, குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தினர். குழந்தைகளிடம் விசாரணை செய்த குழந்தைகள் நலக்குழுமம், இரு குழந்தைகளையும் கடலூர் குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. மாலை நேரமானதால், கடலூர் அழைத்துச்செல்ல தாமதமாகும் என்பதால் புதுக்கோட்டையில் ஒரு காப்பகத்தில் குழந்தைகள் தங்கவைக்கப்பட்டனர். மறுநாள் காலை இரு குழந்தைகளையும் கடலூர் குழந்தைகள் நல குழுமத்திற்கு அழைத்துச்சென்றனர்.

கோயிலில் திருடிச்சென்றவர்கள் தாக்கப்பட்டு சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், தாயார் லில்லிபுஷ்பம் கொடுத்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத கிராம மக்கள் 30 பேர் மீது வழக்குப் பதிவுசெய்த போலீசார், தாக்கப்பட்ட வீடியோவைப் பார்த்து 6 இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். தகவலறிந்த அண்டக்குளம் பகுதி கிராம மக்கள், "சிறுமி உயிரிழப்பிற்கு இளை ஞர்கள் காரணமில்லை. அவர்களைத் தாக்கவும் இல்லை. ஆட்டோவில் தப்பிச் சென்றபோது திருடப்பட்ட பொருட்களை வெளியே தூக்கி வீசும்போது பெரிய மணி குழந்தை தலையில் அடித்து காயம் ஏற்பட்டிருக்கலாம். அதனால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை உடனே வீட்டிற்கு அனுப்பவேண்டும்' என்று அண்டக்குளத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சி.பி.எம். மா.செ. கவிவர்மன், "திருடர்களாகவே இருந்தாலும் அவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்திருக்க வேண் டும். அதைவிட்டு அவர்களைக் கொடூரமாக தாக்கி யது ஏற்க முடியாது. குழந்தை பலியான இந்தச் சம்பவத்தில் யார் உண்மையாகத் தாக்கினார்களோ அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்கிறார்

போலீசாரோ,…"விசாரணை சரியாகத்தான் போகிறது. வீடியோ காட்சிகளில் ஆட்டோ தாக்கப்படுவதும், ஆட்டோவில் இருந்தவர்கள் தாக்கப்படுவதும், பெண் போலீசார் அடிக்காதீங்க என்று கதறியும்கூட கேட்காமல் ஆவேசமாகத் தாக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்கள் வரை பரவியுள்ளது. அதனடிப்படையில் கைது நடவடிக்கைகள் உள்ளது. சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீசாரின் நடவடிக்கை சரியாக இருக்கும்''’என்றனர்.

வாழ்க்கை வளமாக இருக்கவேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதோடு, தங்கள் குழந்தை களையும் இதுபோன்ற செயல்களுக்கு சின்ன வயதிலேயே பழக்கப்படுத்துவது வேதனையானது. கோயில் பொருட்கள் திருடிய சம்பவத்தில் 4 பேர் குழந்தைகள். இவர்களின் படிப்பு கானல் நீராகிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகிலுள்ள சீராடும்தேவி கிராமத்தைச் சேர்ந்த கஞ்சா கடத்தல் கும்பல், கஞ்சா விற்பனைக்கு தங்கள் குழந்தைகளையும் பயன் படுத்தி சிறைக்கு அனுப்பிய வேதனையும் நடந்துள்ளது. சட்டவிரோதச் செயல்களுக்கு குழந்தைகளைப் பயன்படுத்துவதைக் கண்காணித்து அவர்களை மீட்க குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கவேண்டும்.