டப்பாடி ஆட்சியின் குழறுபடித் திட்டத்தால், அரசுக் குடியிருப்பில் வீடு வாங்கிய அரசு ஊழியர்கள் பரிதவித்து வருகின்றனர். இவர்களில் பலரும் சென்னைத் தலைமைச்செயலக ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை-திருவள்ளூர் சாலையில், வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்கிற்கு எதிரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒரு தளத்திற்கு 18 குடியிருப்புகள் வீதம், 324 குடியிருப்புகளை உருவாக்கியது. இது ரூ.4600 வரை தர ஊதியம் கொண்ட அரசு ஊழியர்களுக்கானது என்று வீட்டு வசதி வாரியம் அறிவித்தது. சொந்த வீட்டுக் கனவோடு இருந்த அரசு ஊழியர்கள் பலரும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்து, குலுக்கல் முறையில், வீடுகளைப் பெற்றனர்.

tnhb

வீட்டை வாங்கிய பிறகுதான், தாங்கள் மோசடி செய்யப்பட்டிருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியவந்திருக்கிறது. காரணம், அந்தக் குடியிருப்புகள் முழுதும் செங்கல்லுக்கு பதிலாக, ஹாலோபிளாக் கல்லையும், தரமற்ற சிமெண்ட்டையும் வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. அதோடு, அங்கே உரிய முறையில் மண் பரிசோதனை கூட நடத்தப்படவில்லையாம். முறையான கழிவுநீர் வசதியோ, பாதாளச்சாக்கடை இணைப்போ கூட அங்கே இல்லை. அங்கு அமைக்கப்பட்டி ருக்கும் தரமற்ற மின்தூக்கியில், குடியிருப்புவாசிகள் அடிக்கடி சிக்கிக்கொள்வதும் வாடிக்கையாக நடந்துவருகிறது. தீயணைப்பு வசதிகள்கூட இங்கே சரியாக அமைக்கவில்லை. அதனால் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு, உயிர்பயத்தை ஏற்படுத்திவருகிறது. இந்த குடியிருப்புகளுக்கான தொகையை தவணை முறையில் வசூலித்துக்கொண்ட வீட்டுவசதி வாரியம், கட்டிடப்பணிகள் முழுமை பெறாத நிலையிலேயே, முன்னாள் முதல்வராகியிருக்கும் எடப்பாடியை வைத்து 2019 செப்டம்பரில் இதைத் திறந்து வைத்துவிட்டது.

இந்த குடியிருப்பில் கடைசியாக கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பெரும் தீவிபத்தின்போது, வான்முட்ட எழுந்த தீப்பிழம்பும், கரும்புகையும், அந்தப் பகுதியையே பதட்டத்தில் மூழ்கடித்தது. உயிர்ப்பலி எதுவும் இல்லை என்றாலும் பெரும்பாலானோர் மூச்சுத்திணறலுக்கும் கண் எரிச்சலுக்கும் ஆளாயினர்.

"இது முன்னாள் முதல்வர் எடப்பாடியின் உறவினர் ஒருவர் பெயரில் எடுக்கப்பட்ட காண்ட்ராக்ட்டாம். அவர்கள், கட்டுமானத்துக்கான நிதியை பெரிதும் விழுங்கிவிட்டு, தரமற்ற குடியிருப்புகளைக் கட்டி ஏமாற்றிவிட்டார்கள். வீட்டுவசதித்துறை அதிகாரிகளும், அவர்களின் மோசடிகளுக்கு உடந்தையாக இருந்ததால், இந்தக் குடியிருப்புகளுக்கு எப்போது என்ன ஆகுமோ? என்றும், இதனால் உயிரிழப்பைச் சதிக்கவேண்டி இருக்குமோ? என்றும் பீதியோடு நிமிடங்களை நகர்த்திகொண்டிருக்கிறோம். புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, குடியிருப்பின் தரத்தை சோதித்து, எங்களுக்கு உயிர்ஆபத்து ஏற்படாமல் தடுப்பதோடு, தரமற்ற குடியிருப்பை உருவாக்கி, கட்டுமான முறைகேட்டை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்''’என்கிறார்கள் அங்கே குடியிருக்கும் குடியிருப்புவாசிகள்.

Advertisment