நூற்றாண்டு விழாவை நோக்கிப் பயணிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தின் துணை வேந்தர் டாக்டர் ஆர்.எம்.கதிரேச னின் செயல்பாடுகள் மீது, பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு ஆளுநருக்கும் புகார்கள் அனுப்பப் பட்டுள்ளன. இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/annamalaiuniversity.jpg)
"அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர்.முருகேசன் இருந்த வரை பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் நன் முறையில் நடந்துவந்தன. ஆனால், அவருக்குப்பின் டாக்டர் ஆர்.எம்.கதிரேசன் துணைவேந்தராக நியமிக்கப்பட்டபின்னர் பல்வேறு முறைகேடுகள், நிதி மோசடிகள் நடைபெற்றுவருகின்றன. இது தொடர்பான தகவல்களை வெளிக்கொண்டுவருபவர் களை பழிவாங்கும் நடவடிக்கையில் துணைவேந்தர் கதிரேசன் ஈடுபட்டுவருகிறார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் பலரும், உலகின் பல பகுதிகளில் முக்கியமான உயர்ந்த பொறுப்புகளில், வர்த்தகங்களில் ஈடுபட்டு நல்ல நிலையில் இருந்துவருகிறோம். நாங்கள் கல்விகற்ற பல்கலைக்கழகத் தின் வளர்ச்சிக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கு வதற்காக சி.எஸ்.ஐ.ஐ.ஆர். (Centre for Sophisticated Instruments and Interdisciplinary Research) திட்டத்தை உருவாக்கி, அதற்கான அரசாங்க ஒப்புதலை 2021 மே 21ஆம் தேதி பெற்றோம். இத்திட்டத்துக்காக 8.6 கோடி ரூபாய் நிதியை, முன்னாள் மாணவர்களின் அன்பளிப்பு, சேர்க்கைக் கட்டணம் எனப் பல்வேறு வழிகளில் திரட்டி, சிண்டிகேட் மூலமாக, சுமார் 2.5 கோடி ரூபாய் அளவில் அடித்தள வேலைகளை முடித்த நிலையில், 2021 நவம்பரில் டாக்டர் ஆர்.எம்.கதிரேசன் துணை வேந்தராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற சில தினங்களிலேயே, முன்னாள் துணைவேந்தர் மீதுள்ள தனிப்பட்ட பகை காரணமாக, சி.எஸ்.ஐ.ஐ.ஆர். திட்டத்தின் குழுவினரோடு எவ்வித ஆலோசனையும் நடத்தாமல், திட்டத்தைத் தடுப்பதற்கான செயல்களில் இறங்கினார்.
மேலும், இந்தத் திட்டத்துக்காக சிண்டிகேட் மூலமாக ஒதுக்கப் பட்ட நிதியைத் தடுத்து நிறுத்திவிட்டு, சுமார் 4 கோடி ரூபாய் நிதியை வேறு திட்டங்களுக்கு திருப்பிவிட்டார். இது சட்டப்படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். முன்னாள் மாணவர்கள் முனைப்புடன் நிதி திரட்டித் தொடங்கிய இத்திட்டப்பணி, இன்றுவரை அடுத்தகட்ட நகர்வே இல்லாமல் அப்படியே முடங்கிப்போயுள்ளது. பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் துணைவேந்தரின் மோசமான செயல்பாட்டுக்கு இது ஓர் உதாரணமாகும்.
இந்நிலையில், ரூஸா திட்டத்தின்கீழ், ஆய்வகம் அமைப்பதற்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள 15 கோடி ரூபாயின் மூலமாக, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முயற்சியெடுக்கையில் அதற்கும் தடையாக இருந்தார் துணைவேந்தர். எனவே, முதல்வர், ஆளுநர், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்டோ ரிடம் துணைவேந்தரின் தவறுகளை எடுத்துக்கூறி, இத்திட்டத் தைத் தொடர்வதற்கான சூழலை ஏற்படுத்தித்தரக் கோரினோம். தொடர்ச்சியான எங்களுடைய முயற்சியால், அத்திட்டத்தைத் தடுக்க இயலாமல்போன துணைவேந்தர், கட்டட கான்ட்ராக்டர்களுக்கான தொகையைத் தரத் தாமதிப்பது உட்பட பல்வேறு வழிகளில் அத்திட்டத்தைத் தாமதப் படுத்துவதற்கான செயல்களில் ஈடுபட்டுவருகிறார். இதனால் குறித்த காலத்தில் அத்திட்டத்தை முடிக்க முடியாமல் சிரமப்படுகிறோம்." என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இது மட்டும்தான் அவர் மீதான குற்றச்சாட்டா? என்று விசாரித்தபோது, பல்வேறு பகீர் தகவல்களைப் பகிர்ந்தனர். பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களின் மதிப்பெண்களைப் பதிவுசெய்யும் எஈந எனப்படும் எர்ப்ண்ர் ஈர்ய்ற்ழ்ர்ப் நட்ங்ங்ற்லில் டூப்ளிகேட்டை உருவாக்கி மோசடி செய்வதாகக் குற்றம்சாட்டினர். இந்த டூப்ளிகேட் ஷீட்கள், லஞ்சம் பெற்றுக்கொண்டு மாணவர்களின் மதிப்பெண்ணில் திருட்டுத்தனம் செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டனர். இதுகுறித்தும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயனிடம் புகாரளித்துள்ளனர்.
மேலும், பதிவாளர் சீதாராமன் பல்கலைக்கழக அலுவல் காரணமாக சென்னைக்கு சென்றிருக்கும் நாட்களில் பொறுப்பு ரிஜிஸ்ட்ராராக இயங்கிய தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் (இவர் துணைவேந்தரின் நம்பிக்கைக்குரியவர்), அதிரடியாகப் பலருக்கும் பணி மாறுதல், பதவி உயர்வு, பதவி இறக்கம் போன்றவற்றை அவசர அவசரமாகச் செய்திருக்கிறார். இப்படியாக, துணைவேந்தரும், பிரகாஷும் சேர்ந்துகொண்டு, பேராசிரியர்கள் கலாவதி, கருப்பையா, நாகராஜன், சாதிக் பாட்சா ஆகியோருக்கு பதவி உயர்வளித்துள்ளனர். ஸ்ரீனிவாசன் என்பவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். லீலாவினோதினி என்பவரை அப்பதவியில் அமர்த்தியுள்ளனர். 7 இணைந்த கல்லூரிகளுக்கு ஆய்வுக்கமிட்டி நியமித்துள்ளனர் என்று குற்றம்சாட்டுகிறார்கள். எவ்வித எமர்ஜென்ஸியும் இல்லாமல், சீதாராமனிடம் ஆலோசிக்கவும் இல்லாமல் இப்படிச் செய்திருப்பது அப்பட்டமான விதிமீறலாகும். இதுபோன்ற முறைகேடுகளைக் கேள்வி கேட்டதால், பதிவாளர் சீதாராமன், பேராசிரியராக பணி மாறுதல் செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு வேறொருவரை நியமித்துள்ளார் துணைவேந்தர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/annamalaiuniversity1.jpg)
தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷிடம் அவர்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, "பதிவாளர் இல்லாதபோது அவரது பணியை மேற்கொள்வேன் ஆனால் இவர்கள் கூறுவது போல் அதிக பணி மாற்றம் செய்து பணம் வாங்கியது இல்லை. மேலும் பணிமாற்றம் என்பது உயர்கல்வித் துறைக்குத் தெரியாமல் செய்ய முடியாது. அவர்கள் கூறிய வழிகாட்டு முறையைப் பின்பற்றிதான் செய்யப்பட்டது'' என்று குறிப்பிட்டார்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசனின் நியமனமே கேள்விக்குறியாகிறது. துணைவேந்தராக நியமனம் செய்யப்பட வேண்டுமென்றால் குறைந் தது 6 ஆண்டுகால அட்மினிஸ்ட்ரேசன் அனுபவம் தேவை என்ற தகுதி இவரிடம் இல்லையென்றும், 8 மாத காலம் குறைவாகவே பணியாற்றியுள்ளார் என்றும் ஆதாரத்தைக் காட்டுகிறார்கள். அதேபோல், துணைவேந்தராக வருபவர், குறைந்தது இரண்டு சர்வதேச ஆய்வுப்பேப்பர்களை சமர்ப்பித்திருக்க வேண்டுமென்ற விதிமுறையும் இவருக்கு பொருந்தாது என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அதேபோல், துணைவேந்தர் கதிரேசன், தனக்கு ஆகாத பேராசிரியர்கள், ஊழியர்களிடம் மிகக்கடுமையாக நடந்துகொள்வதாகவும், மிகவும் கொச்சையான, கீழ்த்தரமான வார்த்தைகளால் வசைபாடுவதாகவும் பேராசிரியர்கள் புகாரளித் துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள், லஞ்சம் கொடுத்து அவரவர் ஊருக்கு அருகிலுள்ள டி.டி.இ. படிப்பு மையத்துக்கு மாற்றலாகிச் சென்றுள்ளதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் குற்றம்சாட்டியுள்ளனர். இதேபோல் பல்கலைக்கழகத்திலும், இணைந்த கல்லூரிகளிலும் பல்வேறு பதவிகளுக்கு, தகுதி, பணிமூப்பு உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்படாமல் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு பதவியை வாரிவழங்கியுள்ளதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் புகாரளித்துள்ளனர்.
துணைவேந்தர் கதிரேசன் மீதான சரமாரியான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பியபோது, "20 கோடியில் சி.எஸ். ஐ.ஐ.ஆர். கட்டடம் கட்டுவதற்கு இடம் மட்டும் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் இடம் வழங்கப்பட்டது. அவர்கள் தற்போது அந்த இடத்தில் ரூ.1.50 கோடி செலவில் அடிப்படைப் பணிகளை மேற்கொண் டுள்ளனர். மத்திய, மாநில அரசின் பங்களிப்போடு ரூஸா திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி, ஆய்வு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.50 கோடி நிதி வந்துள்ளது. அதில், ஒருங் கிணைந்த மாநாட்டு மண்டப மையம் அமைக்க அனுமதி பெறப்பட்ட 15 கோடியில் சி.எஸ்.ஐ.ஐ.ஆர். கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்கிறார்கள். இவர்கள் முன்னாள் மாணவர்களிடம் எந்தவொரு நிதியையும் அதன் பிறகு வசூலித்துக் கொடுக்க வில்லை. இவர்கள் கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.
டூப்ளிகேட்டாக மார்க் சீட் அச்சடித்ததாகக் கூறுவது தவறானது. அப்படி தனிப்பட்ட முறையில் செய்ய முடியாது. சில பேராசிரியர்களைத் துறையின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கும்போது அவர்களுக்கு முன் இருப்பவர்கள் அந்த பதவிக்குத் தகுதி குறைவாக இருக்கும் சூழலில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. என்னுடைய கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளிட்டவை அனைத்தும் பல்கலைக்கழக இணையத்தில் உள்ளது. இதனை யார் வேண்டுமானாலும் ஓப்பனாகப் பார்த்துக் கொள்ளலாம்.
முன்னாள் பதிவாளர் சீதாராமனும் பொறுப்புப் பதிவாளர் தான். அவர் விடுமுறையில் இருக்கும்போதும், அலுவல் பணியாகச் செல்லும் போது, அவருக்கு அடுத்தபடியாக உள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, பொறுப்பு பதிவாளராகச் செயல்படுவர். அப்போது உள்ள பணிகளை அவர் செய்தார். அதுவும் உயர்கல்வித் துறைக்குத் தெரியும். இந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவராகப் பயின்று, பேராசியர், துறைத் தலைவர் என உயர்ந்து, தற்போது பல்கலைக்கழகத்தைச் செம்மைப்படுத்துவதற்காக நான் செய்யும் செயல்கள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. எனவே என்மீது களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள்'' என்றார். நூற்றாண்டை நெருங்கும் பல்கலைக் கழகம், பல்வேறு முறைகேடுகளால் பஞ்சாயத்தாகி யிருப்பது கல்விக்கு நல்லதல்ல!
-தெ.சு.கவுதமன், காளிதாஸ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/annamalaiuniversity-t.jpg)