ழுதை மேய்த்தாலும் அது கவர்மெண்ட் வேலையாக இருக்கணும் என்பது பலரின் கனவு. கவர்மெண்ட் வேலைக்குள்ள மவுசைப் பயன்படுத்தி, அப்பாவிகளிடம் வேலை வாங்கித்தருவதாக சொல்லி பல மோசடி ஆசாமிகள் திரிகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரையும், உதயநிதி ஸ்டாலின் பெயரையும் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட ஒரு வழக்கறிஞரைப் பற்றி நக்கீரன் அலுவலகத்துக்கு புகார் அழைப்பு ஒன்று கடந்த வாரம் வந்தது.

நம்மிடம் பேசிய குன்றத்தூரைச் சேர்ந்த கந்தன், "எனது நண்பர் செல்வம் என்பவர் மூலம் வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், காந்தி சாலை, பூங்கா பின்புறத் தெருவைச் சேர்ந்த பத்மா அறிமுகமானார்.

ff

Advertisment

அவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் என்றும், தனக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் குடும்ப நண்பர் என்றும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி மிக நெருக்கம் என்றும் தெரிவித்தார். என்னை சின்ன மாமின்னுதான் உதயா கூப்பிடுவான் என்றும் கூறினார்.

எனது குடும்பச் சூழலைத் தெரிந்துகொண்டு, எனது அண்ணன் வெங்கடகிருஷ்ணனின் மகனுக்கு தமிழக அரசாங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பி.ஆர்.ஓ. வேலை வாங்கித் தருவதாகவும், கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யச்செல்கிறேன் என்றும் சொல்லி வேலைக்காக பத்து லட்சமும், வங்கிக் கடன் தள்ளுபடிக்காக மூன்று லட்சமும் கேட்டார். முன்பணமாக முப்பதாயிரம் கொடுத்தோம். ஆரம்பத்திலிருந்தே அவர் மீது சந்தேகம் எழுந்ததால் நக்கீரனைத் தொடர்புகொண்டோம்'' என்றார்.

நவம்பர் 4-ஆம் தேதி, பத்மாவின் வீட்டுக்கு பாதிக்கப்பட்டவருடன் சென்று பேச்சு கொடுத்தோம். எதிரே இருந்த பத்மாவோ கால்மீது கால் போட்டு அமர்ந்துகொண்டு, யாரிடமோ டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி பேசிக்கொண்டிருந்தார். முடித்தவுடன் கந்தனைப் பார்த்து "பணம் எடுத்து வந்தியா?''’என கேட்டார் பத்மா. கந்தனோ, "இல்லை ஏ.டி.எம்.மில்தான் எடுக்கணும்''’என்று சொல்ல, பத்மா "அவ்வளவு பணம் எப்படி ஏ.டி.எம்.ல வரும்''’னு கேட்டார். “"இல்ல,… வேற... வேற கார்டுல இருந்து எடுக்கணும்''னு சொல்ல "என்னமோ சீக்கிரம் எடுத்துட்டு வா.... உதயநிதி போயிடுவார்''னு சொன்னார்.

Advertisment

ff

"எப்படிங்க டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதாம பி.ஆர்.ஓ. வேலை கிடைக்கும்''னு நாம் கேட்க, “"இவர் யாரு''னு கேட்டார் பத்மா. "நண்பர்தான்'னு கந்தன் சொல்ல, பத்மா "இதெல்லாம் தப்பு, பணம் தர்றப்போ வெளியாட்களையெல்லாம் அழைச்சிட்டு வரக்கூடாது''’என கோபமானார். "பணம்கொடுத்தவுடன் முதல்வர் ஆபீஸ்ல சொல்வோம். உதயாகிட்ட சொல்லுவோம். ஒரு வாரத்தில் அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் வந்துடும். உதயாகிட்ட சொல்லி நல்ல அமைச்சர்கிட்ட பி.ஆர்.ஓ.வா போடச்சொல்றேன். டிசம்பர்ல உதயாவே மினிஸ்டர் ஆயிடுவான்.

அவன்கிட்டேயே பி.ஆர்.ஓ.வா வேலை செய்தா தினமும் லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம்''’என்றார்.

மீண்டும் நாம் குறுக்கிட்டு "டி.என்.பி.எஸ்.சி. எக்ஸாம் இல்லாம எப்படிங்க''னு கேட்க... "நீ எழுந்து வெளியே போ... நான் சுப்ரீம் கோர்ட் அட்வகேட். என்னையே கேள்வி கேட்கிறயா?''” என கேட்க, "மேடம் கோபப்படாதீங்க. எனக்கும் வேலை வேணும். எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்''னு சொல்ல, பத்மா சற்று சமாதானமாகி, “"இனி எல்லாம் உதயாதான், டில்லில தி.மு.க. வழக்கு எதுவாக இருந்தாலும் நான்தான் முடிப்பேன். எனக்கு ஐம்பது ஜூனியர் இருக்காங்க''ன்னு பெரிதாக ரீல் விட்டார்.

"உதயநிதி சார் பி.ஏ. செந்தில் தெரியும்''னு சொல்லி அவருக்கு போன் போட்டு பத்மா விடம் கொடுத் தோம். இதை சற்றும் எதிர் பாராத பத்மா திடுக்கிட் டார். இருந் தாலும் அசராமல், “"அவரையே தெரியும்னா, அவர் மூலம் வேலையை வாங்கிக் கோங்க''னு, கொஞ்சமும் கெத்தை விடா மல் சமாளித் தார்.

பத்மா வீட்டைவிட்டு வெளியே வந்து உதயநிதி பி.ஏ. செந்திலிடம் பேசினோம். "பத்மா என்பவர் யார்னு தெரியல. வேலைக்காக பணமெல்லாம் வாங்கமாட்டோம். உடனே போலீஸ்ல புகார் கொடுங்க''ன்னு செந்தில் சொல்ல, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தோம்.

உடனடியாக நம்மிடம் தொடர்பு கொண்ட வளசரவாக்கம் காவலர் தம்பிதுரை சம்பவ இடத்திற்கு வந்தார். பத்மாவிடம் இதைப்பற்றி காவலர் விசாரித்தபோது, அவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் இல்லை என்பது தெரியவந்தது. யாரோ ஒரு வழக்கறிஞரிடம் பணியாற்றுவதாகத் தெரிவித்தார். யாரோ ஒருவருக்கு பத்மா போன்செய்ய, எதிர்முனையிலிருந்தவர் காவலர் தம்பிதுரையிடம் பேசினார். இதையடுத்து காவலர் தம்பிதுரை புகார் மீது வழக்குப் பதிவுசெய்ய ஆர்வம் காட்டவில்லை. அதற்கு மாறாக பத்மாவிடம் பணத்தைக் கொடுத்து பிரச்சினையை முடித்துக்கொள்ளுங்கள் என்று கூற, பத்மாவோ அப்போதே ஜி-பே மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்திவிட்டார்.

இதுதொடர்பாக வளசரவாக்கம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் கல்யாண்குமாரிடம் பேசினோம். அதன்பின்பும் பத்மா மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. முதல்வர், உதயநிதி பேரைச் சொல்லி வேலைவாய்ப்பு வாங்கித்தருவதாக மோசடி செய்யும் கும்பல் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்று மற்றவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடாமல் தடுக்க வழிவகுக்கும். கவனம் செலுத்துமா காவல்துறை?